Sunday 7 August 2022

பிரச்சனைத் தீர்ந்ததோ?

 

ஒரு சில நாள்களுக்கு முன் மெட்ரிகுலேஷன் கல்வி பயில இந்திய மாணவர்கள் புறக்கணிப்படுவதாக செய்திகள் வெளியாயின.

அது உண்மைதான் என்பதாக பலர் தாங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தினர். தமிழ்ப் பத்திரிக்கைகள்  அந்த செய்தியை அமர்க்களப்படுத்தின. நாமும் அது உண்மை தான் என்பதை எல்லாரையும் போல நம்பினோம்.

ஆனால் தீடீரென அனைத்தும் மறைக்கப்பட்டுப் போனதோ என்று நினைக்கும் அளவுக்கு இப்போது அது சம்பந்தமாக எந்த செய்தியும் வெளியாகவில்லை!

என்ன நடந்தது?  ஏன் இப்போது எந்த செய்தியும் வெளியாகவில்லை? நமக்குத் தெரிந்த அளவில் ஏதோ ஒரு சில ஊகங்களை வெளிப்படுத்தலாம். ஆனால் அது வெறும் ஊகங்கள் தாம். உண்மை என்னவென்று வெளிப்படையாகத் தெரியவில்லை.

ஒன்று: புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

இரண்டு:  அது பற்றியான செய்திகளை நாளிதழ்கள் அம்பலப்படுத்தக் கூடாது  என்று நாளிதழ்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கலாம்.

முதலாவதைப் பார்ப்போம். அப்படி அனைத்து மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால் இந்நேரம் ம.இ.கா. பெரியதொரு அறிக்கையை வெளியிட்டு தாங்கள் சாதித்துவிட்டதாக துள்ளிக் குதித்திருப்பார்கள்!  நாளிதழ்களிலும் செய்திகளைப் போட்டு அமர்க்களப் படுத்தியிருப்பார்கள்! ஆனால் எதனையும் காணோம்!

இரண்டாவது:  மெட்ரிகுலேஷன் சம்பந்தமான செய்திகளைப் போட வேண்டாம் என்று ம.இ.கா.வினர் நாளிதழ்களுக்கு 'அன்பு' கட்டளையிட்டிருப்பார்கள்! அரசாங்கம் இதனைச் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் ம.இ.கா. செய்யும்.  ம.இ.கா.வின் ஏம்ஸ்ட் கல்லூரிக்கு மாணவர்கள் தேவை. அதேபோல பல தனியார் கல்லூரிகள் இயங்குகின்றன. அவர்களுக்கும் மாணவர்கள் தேவை. இவர்களின்  கல்லூரிகளின் இயங்க  இந்திய மாணவர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்!

ம.இ.கா. இப்படி செய்யுக் கூடும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்கு எங்கு இலாபம் உண்டோ அங்கே மொய்க்கும் தனமை உடையவர்கள்! பெரும்பாலான சீன, இந்திய மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் பயில்கின்றனர். சீனர்கள் பலமுறை ஆராய்ந்து பார்த்து சீனர்கள் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அங்கு  ஏற்படும் செலவு என்பது அதிகமாக இருக்கும். இந்திய மாணவர்கள் குறைவான கட்டணமுடைய இந்தியர்கள் நடத்தும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இதெல்லாம் ஓர் ஊகம் தான்.மெட்ரிகுலேஷன் பிரச்சனைத் தீர்க்கப்பட்ட ஒன்று என்றால் நமக்கு அதில் மகிழ்ச்சியே! இல்லையென்றால் நமது கருத்தை நாம் மாற்றிக் கொள்ளவில்லை என்பதே பொருள்!

No comments:

Post a Comment