Friday 5 August 2022

வெளிநாடுகளுக்குவேலைக்குப் போகிறீர்களா?

 

வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்வது நமக்கு ஒன்று புதிதல்ல. இன்றைய நிலையில்  நமது இளைஞர்கள் பலர் பல  நாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.

இப்படி வேலை செய்வது மலேசியர்கள் மட்டும் அல்ல. ஒவ்வொரு நாட்டிலும் இன்றைய தலைமுறை  இளைஞர்கள் இன்னொரு நாட்டுக்குப் போய் வேலை செய்வதை ஓர் அனுபவமாக எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்ததைவிட  வருமானமும் அதிகம்.  மரியாதையும் கிடைக்கிறது.  பலருக்கு,  அந்த நாடுகளைப் பிடித்துப் போய்,  அப்படியே தங்கிவிடும் இளைஞர்களும் உண்டு.

வெளிநாடுகளில் வேலை செய்யப்போகும் இளைஞர்களுக்கு நாம் சொல்லும் ஓர் சிறிய அறிவுரை என்றால்  ஏஜெண்டுகளை நம்பி பண விஷயத்தில் ஏமாந்து விடாதீர்கள் என்பது தான்.  வெளிநாடுகளுக்குப் போகும் இளைஞர்களுக்குப் பெரிய எதிரிகள் என்றால் இந்த ஏஜெண்டுகள் மூலம் பயணம் செய்பவர்கள் தான். வேண்டுமானால் அவர்களின் சேவைகளுக்காக ஒரு சிறிய தொகையே போதுமானது. அதைவிட்டு பெரிய அளவில் யாரிடமிருந்தும் கடன் வாங்க வேண்டிய அவசியல் இல்லை.

படித்த இளைஞர்கள் படித்தவர்கள் மாதிரி நடந்து கொள்ள வேண்டும். படித்துவிட்டு இப்போது தான் வெளி உலகத்திற்கு வருகிறீர்கள். தவறு செய்வது இயல்பு தான். அதற்காக  ஒரேடியாக ஏமாந்துவிடக் கூடாது.

எங்கு வேலை செய்யப் போகிறீர்களோ அங்குள்ள நிறுவனத்தோடு  தொடர்பு கொண்டு அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அது உங்கள் கடமை. அவர்களும்  உங்களுக்கான பதிலை கொடுப்பதில் கடமைப்பட்டவர்கள். இதில் பணம் ஏதும் சம்பந்தப்பட்டிருக்க வழியில்லை. சந்தேகமிருந்தால்  அந்த நாட்டு தூதரகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்கள் அறியலாம். நீங்கள் வேலை செய்யப் போகும் நிறுவனம் உண்மையா போலியா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் நிறைய ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏமாற்றுவதையே தொழிலாக கொண்ட பல ஏமாற்று நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  உங்களுடைய விபரங்களைக்  கொடுக்கின்ற போது  உங்களுடைய வங்கி விபரங்களை மட்டும் கொடுத்து விடாதீர்கள். அப்படி அவர்கள் கேட்டால் அது ஒரு ஏமாற்று நிறுவனம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

இன்று பெரும் பெரும் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் அதில் சிக்கி விடாதீர்கள். சிக்கினால் உங்களிடமுள்ள அனைத்தும் பறிபோகும். இப்போது நாளிதழ்களில் நிறையவே அதைப் பற்றி பேசுகிறோம்.

வெளிநாடுகளுக்கு வேலை செய்யப் போகிறீர்களா நீங்கள் அங்குள்ள நிறுவனங்களோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு  ஆக வேண்டியதைக் கவனியுங்கள். அவர்கள் பணம் கேட்டார்களானால் அதை ஓர் ஏமாற்று நிறுவனம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நலமே சென்று வாருங்கள்! 

No comments:

Post a Comment