Monday 15 August 2022

தேர்தல் களம் எப்படி ...?

 

வருகின்ற 15-வது பொதுத் தேர்தல் களம் எப்படி இருக்கும்?

"எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்!" என்று சொல்லிவிட்டு சும்மா இருக்க முடியவில்லை!  நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எதையும் அலட்சியப்படுத்திவிட முடியாது!

நாட்டின் அரசியல் அயோக்கியர்களின் கைக்குப் போனால் என்ன ஆகும் என்பதை இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் நமது இனம் இன்னும் விஷேசம். இருப்பதையும் இழந்த ஒரு சமூகம்!

தேர்தல் களம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது?  களை இழந்துவிட்டதா? அம்னோ கட்சியினர் பிரதமருக்குக் கொடுத்த நெருக்குதல் தொடருமா? தடம் புரளுமா என்று தீர்மானமாக ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை!

முன்னாள் பிரதமரின் சிறைவாசம் அவர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று என்பது மட்டும் உறுதி.  அதெப்படி அவரைச் சிறையில் அடைக்க முடியும்? அவர் சாதாரண ஆளா என்ன? பரம்பரை பரம்பரையாக நாட்டை ஆண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் சிறையிலா? ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

எது எப்படி என்றாலும் நீதிக்கு முன் அனைவரும் சமம். நஜிப்-பாக இருந்தாலும் நம்பியாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் யாரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட முடியாது! ஏதோ கொஞ்சம் ஆட்டம் காட்டலாம். அது சில நாளைக்குத்தான் உதவும், அவ்வளவு தான்!

ஆக, அம்னோ தரப்பு இப்போது தேர்தல் வேண்டும் என்பார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். உடனே தேர்தல் என்றால் அது அம்னோவுக்கு 'அனுதாப அலை' வீசலாம்! அல்லது அம்னோவினர் மாபெரும் துரோகிகள் என்கிற முத்திரை விழலாம்! அது மலாய்க்காரர்களின் கையில் தான் இருக்கிறது!

இன்னொரு பக்கம் ம.இ.கா. வும் தனது பங்குக்கு சில ஆலோசனைகளைக் கூறி வருகிறது. 'எங்களுக்கு வெற்றி பெறும் தொகுதிகளைத் தாருங்கள்!' என்று அம்னோவிடம் கூறி வருகிறது!

இத்தனை ஆண்டுகால தேர்தல்களில் இல்லாத ஒன்றை ம.இ.கா.வினர் இப்போது கூறி வருகின்றனர். அம்னோவின் வெற்றியே நிச்சயம் என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கும் போது ம.இ.கா. விற்கு  எப்படி வெற்றி பெறும் தொகுதிகள்? அது அவர்களுக்குத்தான் வெளிச்சம்!

ம.இ.கா.வினர் சிரமப்பட்டு வெற்றி பெற்ற காலத்தில் கூட அவர்கள் தொகுதியை மறந்துவிட்டு மல்லாக்க தூங்கிக் கொண்டிருந்தவர்கள் என்கிற குற்றச்சாட்டு அவர்கள் மீது உண்டு. இந்த நிலையில் எளிதாக வெற்றி பெற எங்களுக்கான தொகுதிகளைத் தாருங்கள்  என்றால் அது எப்படி என்று தான் நாமும் கேட்க வேண்டி உள்ளது! எளிதான வெற்றி என்றால் தொகுதி பக்கமே வராமாட்டார்கள் என்பது நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை!

ம.இ.கா. கேட்பதைப் போலவே அம்னோவில் உள்ளவர்களும் கேட்கலாம் அல்லவா? எளிதான வெற்றியை யார் தான் வேண்டாம்  என்று சொல்லுவார்கள்?  மலாய்க்கரர்களின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்?  முன்னேற்றம் என்பது அப்போது அவர்களுக்குத் தேவைப்பட்டது. இப்போது வயிற்றுப்பாடு என்று ஒன்று இருக்கிறதே அதை எப்படி எளிதாகக் கடந்து செல்ல முடியும்?

எப்படியோ தேர்தல் களம் என்பது இன்றோ நாளையோ நாம் அறியோம். இந்த முறை கொஞ்சம் கடினமாகவே இருக்கும். பிரச்சனைகள் இருக்கின்றன. அதனை எப்படி யாரால் சமாளிக்க முடியும் என்பதற்கான தீர்வு உள்ளவர்கள் தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு தலைவனை நம்பியோ, ஒரு தொகுதியை நம்பியோ யாரும் இல்லை. உங்களின் பங்களிப்பு என்ன என்பது தான் உங்களின் வெற்றி தீர்மானிக்கப்படும்.

No comments:

Post a Comment