Wednesday 10 August 2022

பகடிவதைகளைத் தடுக்க வேண்டும்!

 

ஒரு சில விஷயங்களில் அரசாங்கம் கடுமையான தண்டனைகளைக் கொடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!

மூன்று குழந்தைகளுக்குத் தாயான தனித்து வாழும் பெண்மணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது  எந்த வகையிலும்  ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.  

என்ன தான் நடந்தது?  அந்த பெண்மணியின்  டிக் டாக் செயலியில் ஏற்பட்ட  விமர்சனங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த  விமர்சனங்கள் அவரை மனம் உடைய வைத்துவிட்டது; மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது. கடைசியில் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

அவர் செய்தது சரியா தவறா என்பது பற்றி நாம் பேசப் போவதில்லை. இணையதளங்களில் பங்கு பெறுவோர் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவெளிக்கு நீங்கள் வந்துவிட்டால்  விமர்சனங்கள் எப்படியும் வரலாம். நல்லது வந்தால் உங்களுக்கு சந்தோஷம். தவறானவை வந்தால் உங்களுக்கு மனக்கஷ்டம்.  இது தான் நமது பிரச்சனை. குறிப்பாகப் பெண்கள்  நல்ல விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது போல் கெடுதலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில்லை.

விமர்சனங்களை எழுதுபவர்களில் பெரும்பாலனவர்கள் அரைகுறைகள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு எது பற்றியும் கவலையில்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். எவரையும் விமர்சனம் செய்வார்கள். பெரியவர்கள் சிறியவர்கள் என்கிற பாகுபாடு அவர்களிடம் இல்லை. அதுவும் பெண்கள் என்று தெரிந்துவிட்டால் ஏகப்பட்ட நக்கல் நையாண்டிகள்  வந்து விழும். படிக்கவே கூசும் அளவுக்கு நம்மைத் திணறடிப்பார்கள். இங்கு நான் சொல்ல வருவது பெரும்பாலும் தமிழில் எழுதுபவர்களைத்தான் சொல்லுகிறேன். ஆங்கிலம், மலாய் மொழிகளிலும் இப்படித்தான் இருக்க வேண்டும்.

அரசியலில் ஈடுபடும் நமது இந்தியப் பெண்கள் எப்படியெல்லாம் விமர்சிக்கப்படுகிறார்கள்  என்பதை நாம் கொஞ்சம் புரிந்து கொண்டாலே  போதும். நம்மால் இதனையெல்லாம் தவிர்த்துவிட முடியும். ஆனால் அவர்கள் அதனை எழுத்து வடிவில் படிப்பதில்லை. அதனால் அவர்களுக்குப் பின்னால் பேசுபவர்களைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை.

ஆனால் இணையதளவாசிகள் நேரடியாகவே  அந்த விமர்சனங்களைப் படிக்கிறார்கள். அது அவர்களைப் பாதிக்கிறது.  பெண்களே! நீங்கள் இந்த விமர்சனங்களை எல்லாம்  - தேவயற்றவைகளை  எல்லாம் - தூக்கி ஏறிந்துவிடுங்கள். எல்லாவற்றையும் தமாஷாகவே எடுத்துக் கொள்ளுங்கள். மனதுக்குள் ஏற்றிக்கொள்ளாதீர்கள். எடிட் செய்ய முடிந்தால் எடிட் செய்து விடுங்கள். தொடர்ந்து அவர்களைப் புறக்கணித்தால்  அவர்கள் அதன் பின்னர் தலைகாட்டமாட்டார்கள். 

வெகு விரைவில் இதற்கான தீர்வு காணப்படும் என நம்பலாம்.

No comments:

Post a Comment