Wednesday 17 August 2022

நமது அனுதாபங்கள்!

                                    முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்

 அனுதாபங்கள்! என்று சொல்லுவதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு!

நாட்டின் பிரதமராக இருந்தவர் நஜிப் அப்துல் ரசாக். அவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நாம் எதிர்ப்பார்க்கவில்லை.  அப்படி ஒரு நிலைமை வரவேண்டும் என்று எதிர்பார்த்தது என்னவோ உண்மை தான். ஆனால் அது நடக்காது என்று எதிர்ப்பார்த்ததும் உண்மை. மலேசிய அரசியலில் அப்படியெல்லாம் நடப்பது வாய்ப்பே இல்லை!

நடக்காது என்று எதிர்ப்பார்த்ததற்கு  முன்னைய உதாரணங்கள் உண்டு. நம்மை வைத்து கொள்ளயடித்த தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களை எந்த வகையிலும் தண்டனைக்கு உட்படுத்த முடியவில்லை. கடைசிவரை தங்களது பட்டம் பதவிகளை உயர்த்திக் கொண்டார்களே தவிர நீதியின் முன் அவர்களை நிறுத்த முடியவில்லை! இது தான் மலேசிய அரசியல்!

தன்னை யாரும் அசைக்க முடியாது என்றிருந்த ஒரு  முன்னாள் பிரதமரை அசைத்திருக்கிறது நீதிமன்றம்.  அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை 12 ஆண்டுகள். இப்போதே அவரை வெளியே கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு வேளை அவருக்கு அரச மன்னிப்பு கிடைத்தால் வெளியே வருவதற்கான வாய்ப்பு உண்டு. அதுவும் மாமன்னர் இன்றோ நாளையோ உடனடியாகக்  கொடுத்துவிடுவார் என்றும் நம்புவதற்கு இடமில்லை. 

மாமன்னரும் உடனடியாக 'எஸ்! நோ!' என்று  சொல்லும்  நிலையில் இல்லை. நஜிப்புக்கும் இன்னும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. அரச மன்னிப்பு என்று வரும்போது இனிவரப்போகும் வழக்குகளைப் பற்றியும் யோசிக்க வேண்டிய சூழலில் அவர் உள்ளார்.

நஜிப் மட்டும் அல்ல இன்னும் அவருடைய சகபாடிகள்  ஊழல்  வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன! அவர்களுக்கும் சிறை தண்டனை என்றால்.........?  அவர்களும் அரச மன்னிப்புக்காக  மாமன்னரிடம் மனு செய்ய வேண்டிவரும்! ஆக, அரச மன்னிப்பு என்பதற்கு என்ன தான் பொருள்? கொள்ளையடிப்பவர்களைப் பாதுகாப்பதா அவரின் வேலை?

அரசியல்வாதிகள் நாட்டையே கொள்ளையடிப்பார்கள் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தான்  மாமன்னரின்  வேலையா? என்கிற கேள்வியும் எழத்தான் செய்யும். தெரியாமல் செய்பவர்களை மன்னித்து விடலாம். தெரிந்து செய்பவர்களை..........?

நஜிப் அவர்களின் எதிர்காலம் பற்றி நம்மால் கணிக்க முடியவில்லை. இன்றைய நிலையில் அது மாமன்னரின் கையில். அவர் 12 ஆண்டுகள் சிறையில் இருப்பாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவர் தனது ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு 'என்னை யார் என்ன செய்துவிட முடியும்?' என்று சவால் விட்டுக் கொண்டிருந்தாரே அதற்கு அவர் 12 நாள்கள் சிறையில் இருந்தாலும் அது அவருக்குப் பெருத்த அவமானம் தான்! அந்த கறையை அவரால் என்றென்றும் நீக்க முடியாது!

No comments:

Post a Comment