Wednesday 3 August 2022

பொதுத் தேர்தல் 15-வது

 

அடுத்த பொதுத் தேர்தல் வருவதற்கான ஒரு கட்டாயத்தை அம்னோ கட்சியினர் அரசாங்கத்திற்கு  ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

தேர்தலை நடத்துவதற்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் போது இந்த அவசரம் காட்டத் தேவையில்லை தான். பிரதமரும் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர். தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் தான் பிரதமர் என்பதாக அம்னோ உறுதி அளித்திருக்கிறது! அதனால் பிரதமரும்  அம்னோவின் பேச்சை நம்புகிறார்!

தேர்தலை வேண்டாம் என்று சொல்லுபவர்களுக்கு ஒரு காரணம் உண்டு. முதலில் விலைவாசிகளைக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள். வேலை வாய்ப்புக்களை அதிகரியுங்கள் என்பது தான் மக்களின் கோரிக்கை. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 'தேர்தலை நடத்துங்கள்' என்பது அம்னோவின் கோரிக்கை.  அந்த கட்சியில் உள்ள பலருக்குப் பல வழக்குகள் இருக்கின்றன. தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அதன் பின்னர் அந்த வழக்குகள் எல்லாம் பூஜ்யம் ஆகிவிடும்! அது தான் அவர்கள் எதிர்பார்ப்பு! வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறார்கள். நம்பட்டும்!

இந்த 15-வது பொதுத்தேர்தலில் புதியதொரு இளைஞர் பட்டாளம்  உருவாகியிருப்பது மனதுக்கு ஆறுதலான விஷயம். இளைஞர் கூட்டம் என்றால் படித்தவர்கள். நாட்டின் பிரச்சனைகளை அறிந்தவர்கள்.  இந்த இளைய தலைமுறையை சும்மா மயக்கும் சொற்களால் ஏமாற்றிவிட முடியாது.

இளைஞர் பட்டாளம் என்றால் 18 வயதிலிருந்து 21 வயது வரை  மட்டும் சுமார்     12 இலட்சம் வாக்களர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.  நாட்டின் பிரச்சனைகளை அதிகம் அறிந்தவர்கள் இளைஞர்கள். நாட்டின் விலைவாசி, வேலை வாய்ப்பு போன்ற பிரச்சனைகளை அவர்களும் அறிவார்கள். இன்று வேலை வாய்ப்புக்களுக்குச் சிங்கப்பூரை நம்பித்தான் இளைஞர்கள் இருக்கின்றனர். அது ஒன்றே போதும் நாடு என்ன நிலையில் இருக்கிறது என்பதைக் காட்ட!

மேலும் இப்போது நாடு உள்ள நிலையில் தேர்தல் நடத்த அவசரம் காட்டுவதே வீண் வேலை. இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் போது இப்போது நடத்துவதே வீண் பண செலவு. ஆனால் யார் என்ன செய்ய முடியும்? அதிகாரத்தில் உள்ளவர்கள் எதையும் செய்ய முடியும் என்கிற  மனப்போக்குத் தான் இன்னும் நிலவுகிறது! அம்னோவின்  ஆணவம் இன்னும் அடங்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது!

எப்படியோ அடுத்த பொதுத்தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கும் என்று ஊகிக்க முடிகிறது. நடந்தால் நடக்கட்டும். நாம் நமது ஜனநாயக கடமையைச் செய்வோம்.  இந்தியர்கள் குறைவான எண்ணிக்கை உடையவர்கள் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் அறுபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகள்  நாம் எங்கு சாய்கிறோமோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் நாம் ஒன்றும் சாதாரணமானவர்கள் அல்ல. சக்தி உடையவர்கள் தான்!

தேர்தலை வரவேற்போம்!

No comments:

Post a Comment