Sunday 14 August 2022

இலஞ்சத்தை ஏற்றுக்கொள்கிறோம்!

 

வெளிநாட்டுக் கலைஞர்கள் என்றாலே நமது "பாஸ்"  கட்சியினருக்கு எப்போதுமே ஏதோ ஒரு வகையான தீண்டாமை  அவர்கள் மேல் உள்ளது!

அவர்களால் நமது கலாச்சாரம், பண்பாடு அனைத்துக்கும் ஆபத்துகள் ஏற்படுகின்றன என்கிற விதத்தில் கூறி வருகின்றனர்! உண்மையைச் சொன்னால் நமது உள்நாட்டுக் கலைஞர்கள் வெளிநாட்டுக் கலைஞர்களை விட எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. வாய்ப்புகள் கொடுத்தால் அவர்களையும் மிஞ்சகின்ற அளவுக்கு இவர்களாலும் செயல்பட முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இங்குள்ள கலைஞர்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.  அவர்களுடைய திறமைகளை வெளிக்கொணர அவர்களுக்கு வழியில்லை. அல்லது அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதில்லை.  அவர்களைக் குறை சொல்லியே அவர்களை நசுக்கி விடுகிறோம்! உள்நாட்டில் அனைத்துக்கும் தடை.

நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ வெளி நாடுகளிலிருந்து  எல்லாக் குப்பைகளும் வந்து விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. உங்களால் என்ன செய்ய முடிந்தது?

எல்லாக் குப்பைகளையும்விட மிகப் பெரிய குப்பை என்றால் அது  பதவியில் உள்ளவர்கள் இலஞ்சம் வாங்குவது தான்! ஒவ்வொரு அரசியல்வாதியும் இலஞ்சம் வாங்குகிறான்! ஏன்,  பாஸ் கட்சியினர் மட்டும்  என்ன அதற்கு விதிவிலக்கா? இல்லவே இல்லை! சமீப காலத்தில், இன்றைய அரசாங்கத்தில்,  இவர்களின் நிலை என்ன என்பது நமக்குத் தெரியாதா? இவர்கள் இலஞ்சம் வாங்குவதில்லை என்று இவர்களால் சத்தியம் செய்ய  முடியுமா? 

பணம் என்று வந்துவிட்டால் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒரு கேப்மாரி என்பது உலகத்துக்கே தெரியும்! அதுவும் நமது முன்னாள் பிரதமர், நஜிப் ரசாக்  மிகவும் தவறான காரியத்துக்காக உலகப் புகழ்பெற்ற ஒரு நபராக உலக அளவில் இன்று விளங்கி வருகிறார்! அவர் என்ன சமய அறிவு இல்லாதவரா? எல்லாக் காலங்களிலும் சமயப் புத்தகங்களைப் படித்து தன் அறிவை வளர்த்துக் கொண்டவர் தானே! ஏன்?  தனது கடைசி நேர முயற்சியாக பள்ளிவாசலில் சத்தியம் செய்தாரே!   அப்படியென்றால் நீதிமன்றத்தில் அவர் செய்த சத்தியம் என்னவாயிற்று?

இன்று நாட்டிற்குத் தேவையானது எதுவோ அதற்காக பாஸ் கட்சியினர் குரல் கொடுக்க வேண்டும். வெளிநாட்டுக் கலைஞர்கள் வருவது போவது, பாடுவது ஆடுவது - இதெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல. இன்று நாட்டை ஆட்டிவைப்பது இலஞ்சம்! இலஞ்சம்! இலஞ்சம்! இலஞ்சம் இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்த முடியவில்லை!

ஓர் ஏழை,  ஒரு சிறிய வியாபாரத்தைத் தொடங்கினால் இலஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆகாது. வேறு எங்குமல்ல நமது நாட்டில் தான்! சிங்கப்பூர் நாடு சமயம் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களால் எப்படி இலஞ்சத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது?  பதவியில் உள்ளவன் ஏன் இலஞ்சம் வாங்குவதில்லை?

ஒன்று மட்டும் நிச்சயம். சமயத்திற்கும் இலஞ்சத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை.  தனி மனித ஒழுக்கம். அது தான் இலஞ்சம் வாங்குவது தவறு  என்று சுட்டிக்காட்டும். அப்பன் தவறு செய்தால் மகனும் தவறு செய்வான்! தனி மனிதனின் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்றால் "நாங்கள் இலஞ்சத்தை ஆதரிக்கிறோம்!"  என்று சொல்லுவதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்! 

அது பாஸ் கட்சிக்கு மட்டும் அல்ல அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்!

No comments:

Post a Comment