Tuesday 16 August 2022

என்ன காரணம் தெரியவில்லை!

 

இங்கு சொல்லப்படுகின்ற  செய்திகள் அனைத்தும் நாளிதழ்களில் வருகின்ற செய்திகள் தான்.

ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இருந்து வருகின்ற செய்திகள். ஏதோ ஒரு பள்ளிக்கூடம்,  அதுவும் குறிப்பாக  தமிழ்ப்பள்ளிக்கூடம், கட்டிமுடிக்கப்பட்டும் மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கட்டிமுடிக்கப்பட்டவை. கட்டடத்தைக் கட்டிய குத்தகையாளர் அவர் வேலையை முடித்துவிட்டு, கிடைக்க வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொண்டு, கொடுக்க வேண்டிய கமிஷனையும் கொடுத்துவிட்டு அடுத்த பள்ளிக்கட்டட வேலைக்குப் போய்விட்டார்! அவர் ஏதும் தவறு செய்யவில்லை. தவறு செய்திருந்தால் அவருக்குப் பணம் கொடுத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் ஏன் பயன்படுத்த முடியவில்லை என்பதற்குக் காரணம் தெரியவில்லை. குத்தைகையாளர் தவறு செய்திருந்தால் கல்வி அமைச்சு அவர்க்குப் பணத்தைக் கொடுத்திருக்கக் கூடாது. எல்லாம் சரி என்பதால் தான் அவர்க்குப் பணம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் ஏதோ ஒரு காரணம்.  கட்டடம் ஒன்றுமில்லாமல் சும்மா கிடக்கிறது!

இது போன்று நிறைய பள்ளிக்கூடங்கள். பெரும்பாலானவை தமிழ்ப்பள்ளிக்கூடங்கள். இப்படி ஒரு நிலைமை தேசிய பள்ளிகளுக்கு உண்டா என்றால்  இருக்க வழியில்லை. காரணம் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஏறி மிதித்து விடுவார்கள்! 

தமிழ்ப்பள்ளிகளில் அது நடப்பதில்லை!  கேள்வி கேட்டால் "மாற்றிவிடுவோம்! ஜாக்கிரதை!"  என்று பயமுறுத்தி வைத்திருப்பதால்  எல்லாமே இப்படி இழுத்துக் கொண்டே போகிறது.  பள்ளி நிர்வாகம் என்ன செய்யும்? ம.இ.கா. காரனும் பயமுறுத்துகிறான்! கல்வி அமைச்சில் உள்ளவனும் பயமுறுத்துகிறான்! அதனால் கட்டடங்கள் கட்டியும் பல ஆண்டுகளாக கேட்பாரற்று நாறிக்கிடக்கின்றன!

இப்படி நடப்பதற்கான அடிப்படைக்  காரணங்கள்  என்ன?  இலஞ்சம், ஊழல் - இதைவிட வேறு காரணங்கள் என்ன இருக்க முடியும்? ஊழல் என்றால் அரசியல்வாதிகள் தான் நம் கண்முன் நிற்கிறார்கள். பதவியில் உள்ள அமைச்சர்களும், பெரும்புள்ளிகளும் நம் கண்முன்னே நிற்கிறார்கள். 

ஆனால் அரசாங்க அதிகாரிகள், கல்வி அமைச்சின் கல்வியாளர்கள் யாரும் நம் கண்முன்னே வருவதில்லை! கல்வி அமைச்சு என்றாலே நாம் மரியாதைக்குரியவர்களாகவே பார்க்கிறோம். ஆனால் அவர்களும் சராசரிகள் தான் என்பதைக் காட்டிவிடுகிறார்கள்! இலஞ்சம் இல்லாமல் அவர்களால் நாட்களை நகர்த்த முடியாது!

இதைத்தான் நாம் 'தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!' என்கிறோம். நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இலஞ்சம். 

நமக்குள்ள ஆதங்கம் எல்லாம் கல்விக்கூடங்களிலும் இலஞ்சம் தலைவிரித்தாடுகிறதே  என்று நினைக்கும் போது 'பாவம்! இந்த வஞ்சகர்களின் எதிர்காலம்!'  என்று அனுதாபம் தான் வருகிறது!

No comments:

Post a Comment