Saturday 27 August 2022

சுதந்திர தினக் கொண்டாட்டம்!

 

இந்த ஆண்டு சுதந்திரதினக்  கொண்டாட்டம் (31.8.2022) மலேசியர்களிடையே எந்த அளவு வரவேற்பைப் பெற்றது?

எதிர்பார்த்தபடி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் கார்களில் கொடிகள் கொடிகட்டிப் பறக்கும். என்னன்னவோ ஜோடனைகள் கண்களைப் பறிக்கும். இந்த ஆண்டு கார்களில் எதனையும் காண முடியவில்லை. 

எங்கும் அமைதி. முன்பெல்லாம் கடைகள் அனைத்தும் விடுமுறை கடைப்பிடிக்கப்படும். இந்த ஆண்டு அதுவுமில்லை. பெரும் நிறுவனங்கள் தவிர மற்றபடி கடைகள் எல்லாம் திறந்திருந்தன.

மக்களிடையே எதிர்பார்க்கப்பட்ட  சுறுசுறுப்பு இல்லை. எதனையோ இழந்தது போல முகத்தில் கவலை.

முன்பு போல இப்போது கொரோனாவின் தீவிரம் இல்லையென்றாலும் அது ஏற்படுத்திய பாதிப்பு  இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் மக்கள் அதன் பாதிப்பிலிருந்து விடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வேலை இல்லையென்றாலும் ஏதோ வீடுகளில் உள்ளவர்கள் ஓரிருவராவது வேலை செய்து காப்பாற்றுகிறார்களே என்பது கொஞ்சம்  பிரச்சனைகளைக் குறைத்திருக்கிறது.

வங்கிகளின் மூலம் கடன் வாங்கி வீடுகள் வாங்கினார்களே, கார்களை வாங்கினார்களே இவர்களின் நிலை என்ன?  ஒரு சிலர் தப்பித்துக் கொண்டாலும் பெரும்பாலானோர் அடிப்பட்டுப் போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.   ஆலோங் செய்கின்ற வேலையைத் தான் வங்கிகளும் செய்கின்றன. பாவ புண்ணியம் என்பதெல்லாம் அவர்களிடம் இல்லை. ஆனால் சரியான திட்டங்களோடு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தங்களது மாதத் தவணையை நீட்டிக் கொண்டவர்களுக்குப் பிரச்சனைகள் குறைந்தன.

இப்படி மக்கள் சோர்ந்து போன நிலையில் இருக்கும் போது விலைவாசிகள் ஏற்றம், பொருள்களின் விலையேற்றம் - எல்லாமே விலையேற்றம் என்றால் ஒரு சராசரி மலேசியனால் என்ன செய்ய முடியும்?

ஒரு அரசியல்வாதி பெறுகின்ற சலுகைகள், அரசாங்க ஊழியர்கள் பெறுகின்ற சலுகைகள் - இவர்களையெல்லாம் நினைக்கும் போது ஒரு சாரார் எல்லாக் காலங்களிலும் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் உழைக்கும் மக்கள் தான் எல்லாக் காலங்களிலும் எல்லா நேரங்களிலும் பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் சுதந்திர தினம் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன என்கிற உணர்வு தான் ஏற்படுமே தவிர மகிழ்ச்சி ஏற்பட  ஒரு சராசரி மனிதனுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அதனாலென்ன? அடுத்த ஆண்டு மீண்டும் வரும்,  அப்போது பார்த்துக் கொள்வோமே! இந்த ஆண்டு அடக்கத்தோடேயே போய்விட்டது!

No comments:

Post a Comment