Monday 29 August 2022

சுற்றுப்பயணிகள் அதிகரிப்பர்!

 

இந்த ஆண்டு மலேசியாவுக்கு வரும் சுற்றுப்பயணிகள் அதிகரிப்பர் என்பதாக சுற்றுலாத்துறை மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறது.

இன்று பல நாடுகள்  வெளிநாட்டுப் பயணிகள் வருவதை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றன. சுற்றுப்பயணிகள் பணத்தோடு வருகின்றனர். கொண்டு வரும் பணத்தை இங்கே செலவு செய்கின்றனர். அதன் மூலம் நாடுகள் பயனடைகின்றன.

இப்போது நமக்கு ஸ்ரீலங்கா நாட்டைப் பற்றிய செய்திகள் வருகின்றன. சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் நாடு திண்டாடுகிறது. மக்கள் கஷ்டபடுகின்றனர். அவர்கள் சொல்லுகின்ற காரணங்கள் என்ன? கோவிட்-19 காலகட்டத்தில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்து போனதால் நாட்டுக்கு வருமானம் இல்லாமல் போய்விட்டது  தான் காரணம் என்கின்றனர்.  ஆமாம்,  சுற்றுப்பயணிகளை அதிகம் நம்பிய நாடுகளில் அதுவும் ஒன்று.  ஒரு துறை பலவீனம் அடையும் போது அது நாட்டைப் பாதிக்கிறது. அந்த வகையில் சுற்றுலாத்துறை முக்கியத் துறைகளில் ஒன்று.

இந்த ஆண்டு, நமது சுற்றுலாத்துறை,  வெளிநாடுகளிலிருந்து சுமார் ஒரு கோடிக்கு மேல் நாட்டுக்குள்  வருவார்கள் என நம்பிக்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும். இப்போதெல்லாம் ஏதோ ஒன்று வந்து  நமது திட்டங்களைத் தகர்த்தெறிந்து விடுகிறது. அதுவும் வருகின்ற இடர்கள் அனைத்துமே நோய் சம்பந்தமாகவே இருக்கின்றன.

சான்றுக்கு எப்போதோ வந்து மிரட்டிய கோவிட்-19 இன்னும் ஒழிந்த பாடில்லை. இன்னும் மிரட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. அது பற்றி பேசுவது குறைந்தால் இதோ இன்னொன்று: குரங்கு அம்மை. இது இன்னும் மிக மோசமான வியாதியாக காணப்படுகிறது.  பார்ப்பதற்கே அச்சத்தை  ஏற்படுத்துகிறது.

ஆண்டு முடிவதற்குள் இன்னும் என்னென்ன நோய்களைப் பரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று புரியவில்லை. ஆமாம்,  நோய்கள் பரப்பப்படுகின்றன என்பது தானே குற்றச்சாட்டு!

இந்த நிலையில் தான் சுற்றுப்பயணிகள் வரவேண்டும் என்று ஒவ்வொரு நாடும் திட்டமிடுகின்றன. எது நடந்தாலும் நடக்காவிட்டாலும்  சுற்றுப் பயணங்கள் தொடரத்தான் வேண்டும். அதனையே நம்பியிருக்கும் நாடுகளும் பிழைக்க வேண்டும்.

நமது நாடும் திட்டமிட்டபடி தனது இலக்கை அடைய வேண்டும்!

No comments:

Post a Comment