Wednesday 24 August 2022

தேர்தல் எப்போ..?

 

பொதுத்தேர்தல் 15-வது எப்போது வரும் என்று மலேசியர்களிடையே பேசுபொருளாக இப்போது மாறிவிட்டது.

அது நடக்க வேண்டிய காலத்தில் நடந்தால் இந்த கேள்விக்கெல்லாம் இடம் இல்லாமல் போயிருக்கும். ஆனால் காலம் வருமுன்னே நடத்தவேண்டும் என்று சாரார் நெருக்குகின்ற நிலை ஏற்பட்டுவிட்டதால் தேர்தல் 'இப்போவா அப்போவா' என்று அனைவருமே பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது!

நாட்டிலோ விலைவாசி பிரச்சனைகளை அரசாங்கத்தால் தீர்க்க முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு ஒரு புறம். குற்றச்சாட்டு இருந்தாலும் பொருள்கள் கிடைக்கின்றனவே என்பதில் கொஞ்சம் திருப்தி அடைந்து கொள்ளலாம்.   விலைகள் கூடிவிட்டன என்பது உண்மை தான். கூடினவிலைகள் எக்காலத்திலும் குறைந்ததற்கான வரலாற்றுப் பின்னணி எதுவுமில்லை! ஏறிய விலை ஏறியது தான்!  அதனைக் குறைப்பதற்கு அரசியல்வாதிகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஒரு சில மாதங்களுக்கு முன்னர் கோழிகளை வாங்காமல் புறக்கணித்தோமே அப்போது கோழி விலை குறைந்ததே அது தான் பொது மக்களிடம்  உள்ள சரியான ஆயுதம்!

பொதுத் தேர்தல் என்கிற போது  ஒரு விடயம் நமக்குப் புரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் தான் அவர்களால்  நடத்த முடியும். நாடாளுமன்றம் அம்னோவின் கையில் இருப்பதால் அவர்கள் குரல் ஓங்கி நிற்கிறது. அதனால் அவர்கள் 'தேர்தலை நடத்துங்கள் என்கிற நெருக்கடியைப் பிரதமருக்குக் கொடுக்கிறார்கள் என்று இன்று பரவலாகப் பேசப்படுகிறது. அது தான் உண்மையுங்கூட.

ஆனால் சட்டமன்றங்கள் நிலை வேறு. பல மாநிலங்கள் எதிர்க்கட்சிகளின் கைகளில் உள்ளன. தேர்தல் வேண்டுமா வேண்டாமா என்பது மாநிலங்கள் தீர்மானிக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் நடைமுறை விதி.  அதனை அவர்கள் செய்வார்கள். நாடாளுமன்றம் அம்னோவினர் கைகளில் இருப்பதால் வல்லான்  வகுத்ததே வாய்க்கால் என்கிற நிலைமை! இங்கு எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கின்றன. அதனால் அம்னோ தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று நினைக்கிறது. பிரதமரும் தனது அரசாங்கம் கவிழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக அம்னோ பக்கம் சாய வேண்டிய நிலையில் உள்ளார். அது மட்டும் அல்லாமல் அவரும் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர் தான். அவருடைய பிரச்சனை எல்லாம் தான் மீண்டும் பிரதமராக வரமுடியுமா என்பது மட்டும் தான்!  பிரதமர் பதவி அவருக்குக்  கொஞ்சம் ஆட்டமாக உள்ளது!

அதனால் தான் அரசாங்கம் தேர்தல் என்கிற பேச்சு வரும்போது இதோ இப்போ!    இதோ அப்போ! என்று பாடிக் கொண்டிருக்கிறது! ஆனால் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கும் என்று கணிக்கப்படுகிறது. அப்படி நடத்தாவிட்டால் எத்தனை பேர் ஜெயிலுக்குப் போக வேண்டி வருமோ  என்கிற பயம்  அம்னோவுக்கு உண்டு. எல்லாம் ஊழல் வழக்குகள்!

நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளே தள்ளிவிட்டார்கள். இப்போது அவ்ருடைய மனைவி ரோஸ்ஸமாவும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில தலைவர்கள் மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது! 

இப்போது தேர்தல் நடந்தால் தேர்தலில் போட்டியிடலாம். அதையே அடுத்த வருடம் என்றால் பல தலைகள் உருண்டுவிடும்! தேர்தல் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும்!

அப்படியென்றால் தேர்தல் 'இப்போ' தானே!

No comments:

Post a Comment