Tuesday 27 February 2024

உழைப்பா? அது என்னா?

இப்போதெல்லாம்  உழைப்பு என்றாலே ஏதோ கேலி பொருளாகிவிட்டது!  இதற்கெல்லாம் காரணம் பெருமைமிக்க அசியல்வாதிகள்! 

உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் போய்  ஏமாற்றிச் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை உண்டாக்கியதில்  அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

ஏன் கஷ்டப்பட வேண்டும்?  பணம் வேண்டும் ஆனால் கஷ்டப்படக் கூடாது என்பது தான் இன்றைய மனநிலை.  கஷ்டப்படக் கூடாது என்று எப்போது நினைக்க ஆரம்பித்தோமோ அன்றையிலிருந்தே வெளி நாட்டவர்கள் நாம் செய்யும் வேலைகளுக்கு ஆபத்தை விளைவித்துவிட்டார்கள்!

இப்போது நமது வேலைகளை வெளிநாட்டவனுக்குக் கொடுத்துவிட்டு நாம் அலைமோதிக் கொண்டிருக்கிறோம்.  

உழைப்பைத் தவிர வேறு எதுவும் நமக்கு உயர்வைத் தராது என்பதை ஏன் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை?   உழைப்பால் முன்னேறியவனை நாம் முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.  அரசியல்வாதிகளைக்  முன்னுதாரணமாகக் கொண்டால் நாமும் நமது குடும்பமும் நடுத்தெருவுக்குத் தான் வரும்.   அவர்களுக்கு எந்தக் காலத்திலும் நிம்மதி என்பதே இல்லை.

முன்னாள் பிரதமர்களைக் கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்!  அந்தப்பக்கம் பெரிய பெரிய அதிகாரிகளைத் திரும்பிப் பாருங்கள்!  தங்களுக்கு என்ன ஆகுமோ  என்று  சரியாகத் தூங்கக்கூட  முடியாமல்  தத்தளித்துக் கொண்டிருக்கும்  மனிதர்களைப் பாருங்கள்!  ஏன் நமது இனத்  தலைவர்கள் மட்டும்  தப்பிவிடுவார்களா என்ன?  மற்றவர்களின் உழைப்பில தங்களை உயர்த்திக் கொண்ட யாராக இருந்தாலும் அதற்கானத் தண்டனையை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.!   தப்பிக்க வழியில்லை!

உழைப்பின் பெருமையை இப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.  அதனால் தான் நாம்  பின் தங்கியே  இருக்கிறோம்.  நம்முடைய உழைப்புத்தான் நமக்கு உயர்வைத் தரும்.  கொள்ளையடிக்கும் பணம் பிந்நாள்களில்  நமக்குச் சிறுமையைத்தான்  கொண்டுவரும்.

நமது உயர்வு என்பது நாம் உழைத்துச் சம்பாதித்த பணம். அதுவே நம்மை உயர்த்தும் உயர்வைத் தரும்.

No comments:

Post a Comment