Thursday 8 February 2024

ஏன் பழைய மடிக்கணினிகள்?



மித்ரா அமைப்பைப் பற்றி பேசுவதை நான் விரும்புவதில்லை. காரணம் குறை சொல்லுவதால் அதுவே பழக்கத்திற்கு வந்துவிடுகிறது!

துணை அமைச்சர் ரமணன் அதன் தலைவராக இருந்த போது  அத்துறைக்கு ஒதுக்கப்பட்ட பணம் அனைத்தையும் கொடுத்து முடித்துவிட்டார்  அதுவே தனது சாதனை என்பதாகக் கூறிவருகிறார்.

நம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொடுத்து முடிக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் பணத்தை வாரி இறைத்திருக்கிறார். அது தேவையற்ற செலவு  என்பதாகவே  பேசப்படுகிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு  மடிக்கணினி என்பது மிகவும் போற்றக்கூடிய விஷயம்.  ஆனால் பழைய கணினிகளைக் கொடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாது.  புதிதாகக் கொடுத்தால் என்ன கெட்டுவிட்டது? ஒன்றை நாம் புரிந்து கொள்கிறோம்.  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புதிய மடிக்கணினி கொடுப்பதை  யாரோ விரும்பவில்லை.  அது ரமணனாக  ஏன் இருக்க முடியாது?  ஏனென்றால் எல்லா செயல்திட்டங்களுக்கும்  முடிவெடுக்க வேண்டியவர் மித்ராவின் தலைவரான ரமணன் தான்.  அவர் புதிய கணினிகள் கொடுத்தால் யாரும் அவரை அடிக்கப் போவதில்லை! உண்மை தானே?

அவர் பழைய மடிக்கணிகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?  புதிதாகக் கொடுக்க அவருக்கே விருப்பம் இல்லையென்றால்  அதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புதிதா  என்று அவர் யோசித்திருக்கலாம். அதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை.  காரணம்  அவர் தமிழ்ப்பள்ளி மாணவர் அல்ல.  ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்குப் புதிய கணினிகளா?  ஆதனால் தான் அவர் பழைய கணினிகளைக் கொடுக்கத் துணிந்தார்.

சம்பளம் வாங்காமல் அவர் வேலை செய்கிறார்  என்கிற கதைகள் எல்லாம் நமக்கு வேண்டாம். அதனை எப்படி பின்வாசல் வழியாக  வாங்குவது என்பது எங்களுக்கும் தெரியும்.  இன்னும் ம.இ.கா. வின் பழைய நினைப்போடு இரூக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது மக்கள் மாறிவிட்டார்கள். ம.இ.கா. அரசியல் எடுபடாது.  அதனால் தான் வெகு விரைவில்  அவரிடமிருந்து மித்ரா பறிக்கப்பட்டது!

உங்களின் கடந்த காலத்தின் மீது எங்களுக்கு அக்கறை இல்லை. நிகழ்காலத்தில் நீங்கள் செய்யும் சேவை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இப்போது நீங்கள் இருக்கும் அமைச்சிலும் இந்தியர்களுக்குப் பெருமளவில் சேவை செய்ய முடியும். பார்ப்போம்!

No comments:

Post a Comment