Sunday 18 February 2024

.........இராவணன் ஆண்டால் என்ன?


மித்ரா அமைப்பில்  சமீப காலமாக ஒரு சில அரசியல்வாதிகள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் யார் என்றும் தெரிகின்றது. அசிங்கப்படுவது, அசிங்கப்படுத்துவது என்பது அவர்களது இயல்பு.  இந்தியர்கள் முன்னேறவே கூடாது  என்பதில்  மிகக்கண்டிப்பாக இருப்பவர்கள்.  அவர்களுக்கு இந்திய அரசியல்வாதிகள் தான் முன்னேற வேண்டும் - அது தான் இந்தியர்களின் முன்னேற்றம்!  அவர்கள் படித்த படிப்பு அப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறது!

நமக்கு இதுபற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.   இன்றைய நிலையில்  மித்ராவில் அதிகாரம் படைத்தவர் யார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  மாண்புமிகு பிரபாகரனா அல்லது மாண்புமிகு  சரஸ்வதி கந்தசாமியா?    இருவருடைய பங்களிப்பு என்ன என்பது இன்னும் தெளிவில்லை. தெரியவே வேண்டாம் என்பதற்காக ஒரு சிலர்  வேலை செய்கின்றனர். பிரதமர் தான் விளக்கம் அளிக்க வேண்டும். 

பிரதமரைப் பொறுத்தவரை பிரபாகரனைத்தான் தலைவராக  அறிவித்திருக்கிறார்.  அவர் தனது பணியைத் தொடங்கி விட்டாரா என்பது இன்னும் தெரியவில்லை. முதலில் அவரது பணியை அவர் ஆரம்பிக்க வேண்டும். அவரது அலுவலகம் ஒற்றுமைத் துறையில் தான் இருக்க வேண்டும். தனது பணியைச்  செய்வதில் சுணக்கம் காட்டாமல் உடனடியாக தனது பணியைத் தொடங்க வேண்டும்.

பொது மக்களைப்  பொறுத்தவரை 'இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?' என்கிற போக்கில் தான் இருக்க வேண்டும். நாம் ஏன் கவலைப்பட  வேண்டும்? அடித்துக் கொண்டால் அடித்துக் கொள்ளட்டுமே! பதவிக்காக அடித்துக் கொள்வது அவர்களுக்கு என்ன புதுசா?

அவர்களைப்பற்றி நமக்குக் கவலை வேண்டாம். நம்முடைய தேவை எல்லாம் நமக்கு மித்ராவின் வேலைகள்  நடக்க வேண்டும்.  அவர்களுடைய வேலைகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டு வேலைகள் விரைவாக நடக்க வேண்டும்.  இனிமேலும் சாக்குப் போக்குகள் வேண்டாம். மித்ராவின் முதல் கடமை வியாபாரம் செய்கிறவர்களுக்கான உதவி. அதன் பின்னர் கல்வி சம்பந்தப்பட்ட உதவிகள்.  இதனில் கவனம் செலுத்தினாலே போதும். வருங்காலங்களில் எந்தப் பிரச்சனையும் எழாது.

யார் தலைவர்? அடித்துக் கொள்ளட்டும்! ஆனால் மித்ராவின் பணி நிறுத்தப்படக் கூடாது  அது தொடர வேண்டும்.  கடந்த கால அனுபவங்களைக் கொண்டு மித்ரா  இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பது தான் நமது ஆசை.

நமது குழப்பவாதிகள் தங்களது கீழறுப்பு வேலைகளை நிறுத்தப் போவதில்லை. இதனைச் சமாளித்துத்தான்  மித்ரா செயல்பட வேண்டும்.

நிச்சயமாக நல்லது நடக்கும் என நம்புகிறோம்! 

No comments:

Post a Comment