Sunday 25 February 2024

கண் திறந்தது!


 உள்நாட்டு வர்த்தகர்களின் உரிமம் முடக்கம்! நல்ல செய்தி தான். தொழில் செய்ய வேண்டுமென்றால்  தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும்.

ஆனால் ஒரு சிலர் அலுங்காமல், குலுங்காமல். நோகாமல், நொறுங்காமல்  தொழில் செய்ய விரும்புகின்றனர்! அதாவது அவர்கள் எதுவுமே செய்யமாட்டார்கள் ஆனால் மாதம் முடிந்தால்  பணம் கைக்கு வந்து விட வேண்டும். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர்  கொடுத்த மிக வலுவான தொழில்  ரகசியம் அது!  அதனைப் பின் தொடர்ந்தவர்கள்  பலர்  தொழிலே செய்யத் தெரியாமல்  சோர்வடைந்து போனார்கள்!

உழைப்பே இல்லாமல்  ஒரு பருப்பும் வேகாது!  ஆனால் என்ன செய்வது? அப்படித்தான்  ஒரு சாரார் தங்களை உயர்த்திக் கொண்டார்கள்! அதற்குத்தான் ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறது!  முழுமை அடையவில்லை என்றாலும் ஆரம்பமே ஆரவாரமாய் இருக்கிறது!

வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் பல கோடிகளைச் செலவு செய்கிறது. கருத்தரங்குகள், செமினர்கள்,  பயிற்சிகள், கடன்வசதிகள் என்று ஏகப்பட்ட உருட்டல்கள்!  ஆனாலும் பலன் என்னவோ சிறிய அளவில் தான். ஏதோ அதாவது கிடைக்கிறதே என்று மனநிறைவு அடைய வேண்டியது தான்.   ஆர்வம் இல்லாத ஒருவனை என்ன உருட்டல் உருட்டினாலும் சுருட்டிக் கொண்டுதான் இருப்பான்!

அதற்குப் பதிலாக  ஆரவமுள்ளவனுக்கு ஆதரவளித்தால்  அவன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கதிகமாக இருக்கும். இந்த உண்மையை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள்  தெரிந்து கொண்டால் போதும்.

நமது வருத்தமெல்லாம் தங்களது உரிமத்தை உள்நாட்டவருக்குக் கொடுத்தால் கூட பரவாயில்லை ஆனால் வெளிநாட்டவருக்குக் கொடுக்கிறார்களே அவர்கள் மன்னிக்கத் தகாதவர்கள். இன்று பெரிய அளவில் வெளிநாட்டவரின்  வியாபாரத்திற்குக் காரணம்  இது போன்ற சில்லறைகள் தான்.  

அதற்கான சரியான நேரம் வரும், நடவடிக்கை எடுக்கப்படும்  என்றெல்லாம் காத்துக்கிடக்கும் நேரத்தில்  ஏதோ இப்போதாவது ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததே அது வரைக்கும் மகிழ்ச்சி!   ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே அதற்கு என்ன செய்வது?  இன்று கணினித்துறையெல்லாம் அவர்கள் கையில் தானே! எந்த அளவுக்கு நாம் இளிச்சவாயர்கள் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்!

இன்றையநிலையில் 'பரவாயில்லையே!' என்கிற சொல்லுகிற அளவுக்குதான் நடவடிக்கைகள்  ஆரம்பமாகியிருக்கின்றன! போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.  போக முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


No comments:

Post a Comment