Tuesday 6 February 2024

இளைஞர்கள் பொறுமை காக்க வேண்டும்!

 பொது சாலைகளில் கார் பயணங்கள் எல்லாம் மிகவும் சிக்கலான பிரச்சனையாக  போய்க் கொண்டிருக்கிறது.

அதுவும் வயதானவர்கள் கார் ஓட்டினால் கொஞ்சம் எச்சரிக்கையாகவே நாம் இருக்க வேண்டும்.   அவர்கள் தவறான முறையில் கார் ஓட்டுகிறார்கள் என்பது பொருள் அல்ல.  விபத்துகள் நடக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் கார்களைச்  செலுத்துகிறார்கள்  என்பது தான் பொருள்.

இப்படி நிதானத்துடன் கார்களைச் செலுத்துபவர்களை  திட்டுவதும், வம்புக்கு இழுப்பதும், அடிப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்க செயல். இது போன்ற சம்பவங்கள் நடந்து  கொண்டு தான் இருக்கின்றன.  வயதானவர்களுக்கும், பெண்மணிகளுக்கும் மரியாதைக் கொடுக்கத்தான்  வேண்டும். அது நமது கடமை.

விபத்துகள்  நடைபெற யார் காரணமாக இருக்கிறார்கள்? பெரும்பாலும் இளைஞர்கள்தான். எல்லாமே அவசரம், அவசரம், அவசரம்! என்ன தான் செய்ய?  இவர்களுடைய செயல்களினால்  தேவையற்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

விபத்துகளை மிக எளிதாக  கடந்து சென்று விடுகின்றனர் இந்த இளைஞர்கள்.  ஆனால் யோசித்துப் பாருங்கள் அதன் பின்விளைவுகளை. எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர்?  நீதிமன்றம், வழக்குகள் என்று  எத்தனை  துன்பங்கள்?

நாள் தோறும் விபத்துகள். யாரால் நடைபெறுகின்றன? அனைத்தும் இளையவர்களால் தான். கொஞ்சம் கூட பொறுமையில்லை. காராக இருந்தாலும் சரி,  லோரி, பேருந்துகள் என்று எந்த வாகனங்களாக இருந்தாலும் சரி நடைபெறும் விபத்துகள் அனைத்துக்கும் காரணமானவர்கள் இளைஞர்கள் தான்.  இவர்களைப் போலவே பெரியவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு.

நாட்டில் நடைபெறும் விபத்துகள் அனைத்தும் சரியான முறையில்  சாலைவிதிகளைப் பின்பற்றாததினால் தான். சாலைவிதிகளைப் பின்பற்றும்  முதியவர்கள் மீது கைவைப்பதை மிகவும் கடுமையாகக் கருத வேண்டும்.

சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்!

No comments:

Post a Comment