Monday 12 February 2024

திருமணங்கள் சொர்க்கத்தில் .........!

 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்பது நீண்ட நாள்களாக நம்மிடையே பழக்கத்தில்  உள்ள நம்பிக்கைத்தரும் ஒரு சொற்றொடர்.

ஆனாலும் இன்றைய நிலையில் அப்படியெல்லாம் சொல்ல முடியுமா? ஏனோ தெரியவில்லை காலநிலை சரியாக இல்லை! திருமணம் என்பதே  தமாஷான  நிகழ்வாகப் போய்விட்டது!

ஆடம்பரத் திருமணங்கள் நம்மிடையே பெருகிவிட்டன. ஏழை சமுதாயம் என்று சொல்லப்படுகின்ற இந்திய சமுதாயம் இன்று திருமணத்திற்காக  ஏகப்பட்ட பணத்தைச் செலவு செய்கின்றனர்.  திருமணம் மட்டும் அல்ல, பிறந்தநாள் போன்ற வைபவங்களும் அமர்க்களப்படுகின்றன.

திருமணம் என்பது வாழ்வில் ஒரு முறை  என்று சொல்வது உண்மைதான். அது கடைசிவரை  நிலைத்து  நிற்க வேண்டும் என்பது தான்  நமது ஆசை.  நமக்கு ஆசை இருந்து என்ன பயன்?  மணம் புரிபவர்களுக்கு இருக்க வேண்டுமே? அது தான் பிரச்சனையே. ஓரிரு ஆண்டுகளில் பெண்கள்  'சிங்கள் மதர்' நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.  என்ன பிரச்சனை என்பதே புரியவில்லை!

பொதுவாக நாம் சொல்ல வருவது  திருமண செலவுகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். அது எந்தக் குடும்பமாக இருந்தாலும் சரி . சீனர்களோ, மலாய்க்காரர்களோ நம் அளவுக்கு ஆடம்பரத்தைக் காட்டுவதில்லை.  நமக்கு மட்டும் ஏன் இது போன்ற ஆடம்பரங்கள் என்பது தான்  விளங்கவில்லை.  பணம் என்று எடுத்துக் கொண்டால்  நாம் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்ற சமூகமாக இருக்கிறோம். மூன்றாவது பெரிய சமூகமாக இருக்கும் நாம் பொருளாதார ரீதியில் மிகவும் கீழான நிலையில் பாதிக்கப்பட்ட சமூகம்.   ஆனால் ஆடம்பரச் செலவுகளில் நாம் தான் முதலிடம்!

நமது மக்களுக்கு நாம் விடுக்கும் செய்தி ஒன்றுதான்.  பணம் மரத்தில் காய்ப்பதில்லை.   செலவு செய்வதில் கஞ்சத்தனமாகவே  இருங்கள்.  எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி பணம் உங்களுடையது, மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ  என்று யாருக்கோ பயந்து வாழ்க்கை நடத்த முடியாது.  நம் உழைப்பால்  வந்த பணம்.  செலவு செய்வதில் நாம் அலட்சியம் காட்ட முடியாது.

பணமிருந்தால் தர்மம் செய்யுங்கள்.  தர்மம் தலைகாக்கும்  என்பார்கள். அது உங்கள்  திருமண வாழ்க்கயை இன்னும் பலமடங்கு சந்தோஷத்தைக்  கொண்டுவரும்.   அந்தத்  திருமண வாழ்க்கை தான்  சொர்க்கத்தில்  நிச்சயக்கப்படும் வாழ்க்கை.

No comments:

Post a Comment