Saturday 24 February 2024

இது என்ன புதுசா?

 

எத்தனையோ ஆண்டுகளாக வெளி நாட்டுத் தொழிலாளர்களை ஏமாற்றும் ஒரு கும்பல்  இனிமேல் தான் வெளிச்சத்திற்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் மேல் இடத்து விஷயம் என்பதால்  யாராலும்  அவர்களை அசைக்க முடியவில்லை.  இப்போதும் கூட அசைக்க முடியுமா என்பதும்  இன்னும் தெளிவில்லை.   ஒர் அனுமானம் தானே தவிர நம்மாலும் எதையும் கணிக்க முடியாது.

அரசாங்கம் இத்தனை ஆண்டுகள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அவர்களை வரவைப்பதும், தெருவில் நிறுத்துவதும், அவர்கள் ஓடுவதும் ஒளிவதும் அனைத்தும்  இவர்களுக்குத் தமாஷாகப் போய்விட்டன. . அவர்கள் அவர்களது நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கில் செலவு  செய்து கொண்டு இந்நாட்டுக்கு வருகின்றனர். கடைசியில் பலர் பிச்சை எடுக்கும்  நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.   ஏமாற்றப்பட்டோமே என்று தற்கொலை செய்து கொண்டவர்களும்  உண்டு. கேட்க நாதியில்லை என்கிற நிலைமை.

இங்குள்ளவர்கள் பணத்தை வாங்கி பையில் போட்டுக் கொண்டு உயர்ந்தரகக் காரில் ஊர்வலம் வருகின்றனர்.  எப்படியோ இருந்த நாடு, செல்வம் கொழித்த ஒரு நாடு எப்போது டாக்டர் மகாதிர் பிரதமராக வந்தாரோ அப்போதிருந்தே  நாட்டை ஏழரை பிடித்து ஆட்டுகிறது!  இன்னும் அதன் பிடியிலிருந்து நாடு விடுதலை அடைய  முடியவில்லை.

இதுவரை என்ன நடந்தது என்பது பற்றிப் பேசுவதில் பயனில்லை. ஏதோ இப்போதாவது  நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்களே அதுவரை மகிழ்ச்சி தான்.  வங்காளதேசிகளும்  நாங்கள் ஏமாந்து கொண்டே இருக்க முடியாது என்பதை செயலில் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.  ஆமாம், ஆர்ப்பாட்டம் அது இது  என்று நடந்தால் தான் அரசாங்கம் திரும்பிப்பார்க்கும்  என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். 

பணவெறி கொண்ட அதிகாரிகளால் நாட்டின் பெயரே  கெட்டுப் போய்விட்டது! அது பற்றிக் கவலைபடுவோர் யாருமில்லை.  எல்லாத் துறைகளிலும்  இலஞ்சம், ஊழல் பெருகிவிட்டது.  அதன் பலனை  இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  கேள்விகள் கேட்டால் அது எங்கள்  உரிமை என்று  சொல்லுகின்ற அளவுக்கு நிலைமை  முற்றிப்போய்விட்டது!

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பிரச்சனை நமக்குப் புதிது அல்ல என்று சொன்னாலும்  நடவடிக்கை எடுக்கப்படுகிறதே அது புதிது  என்று மனநிறைவு கொள்வோம்!

No comments:

Post a Comment