Tuesday 20 February 2024

பழங்குடி நீதிபதி!

 


                                                     

                         நீதிபதியானார் மலைவாழ்  மகள் ஸ்ரீபதி!

தமிழ் நாடு, திருவண்ணாமலை, ஜவ்வாது மலையில் வாழும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பழங்குடி மக்களின் முதல் நீதிபதி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

அவரது பெயர் ஸ்ரீபதி. வயது 23. ஏலகிரியில் கல்வி கற்றவர். கல்வித்தகுதி:B.A.B.L.  சட்டப்படிப்பை முடித்தவர்.  திருமணமானவர். கணவருக்கு ஓட்டுநர் வேலை.

கல்விக்குக் கணவர் தடையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பரிட்சை எழுதுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் தான் பிரசவம் நடந்தது. அப்படி ஒரு சூழ்நிலையிலும் அவர் சென்னை சென்று பரிட்சை எழுதி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். 

அது தான் அவரது பெரும் சாதனை என்று  சொன்னாலும் பழங்குடி மக்களின் முதல்  நீதிபதி என்கிற பெருமை அவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.   அது மட்டும் அல்ல இன்று அந்த பழங்குடி மக்களுக்கு ஒர் எடுத்துக்காட்டாக  அவர் விளங்குகிறார்.  முதல் பெண் என்கிற போது தான் பல சிக்கல்கள்.  ஒருவர் வந்துவிட்டால் இனி அவர்கள் இனத்தில் பல பெண்கள் வந்துவிடுவர்!  பெற்றோர்களுக்கு ஓரு முன்னுதாரணம். படிக்கும்  பெண் குழந்தைகளுக்கு ஓரு முன்னுதாரணம். அந்த பழங்குடி மக்களுக்கே ஒரு பெரிய முன்னுதாரணம்.

எந்த இனமாக இருந்தாலும்  அனைவருக்கும் ஒரே மாதிரி கொள்கை தான். இது நடக்காது என்று நாம் சொல்லலாம். ஒருவர்  செய்து காட்டிவிட்டால் அதனைப் பார்த்தே பலர் பின் தொடர்வர்.  அந்த காலத்தில் தோட்டங்களில் வாழும் போது ஏதோ ஒரு குடும்பம் ஒரு டாக்டரை உருவாக்கியது.  அதன் பின்னர் இன்றுவரை பல டாக்டர்கள் உருவாகிவிட்டார்கள்.

இப்படித்தான் நாம் வாழ வேண்டியுள்ளது.  எப்போதும் நமக்கு ஒரு முன்னுதாரணம் தேவைப்படுகிறது.  மலைவாழ் மக்கள் என்னும் போது பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.  எல்லாத் தரப்பிலிருந்தும்  அவர்களுக்கு அடி விழுகிறது. நிம்மதியாக வாழக்கூட வழியில்லை. அப்படி ஓர் இடத்திலிருந்து அவர்கள் வருகின்றனர். அந்த வாழ்க்கை முறையிலிருந்து  ஒரு நீதிபதி  உருவாகிறார் என்றால் அது தான் வெற்றி!

விரைவில் நீதிபதி பதவி ஏற்கும் ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள்!

No comments:

Post a Comment