Sunday 11 February 2024

மாண்புமிகு சரஸ்வதி கந்தசாமி அவர்களுக்கு.....!

 

மாண்புமிகு செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்களுக்கு,

'வணக்கம் மலேசியா' இணைய இதழுக்கு நீங்கள் கொடுத்த நேர்காணலைக் கேட்க நேர்ந்தது.  ஒரு சில தகவல்கள் கிடைத்தன. 

குறிப்பாக மித்ராவைப் பற்றியான செய்திகள் நமக்கு இன்னும் ஆச்சரியத்தைக் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றன.  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான மித்ராவின்  வரவு செலவுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறீர்கள். உண்மை இருக்கலாம். அதனை நாமும்  நம்புகிறோம்.

ஆனாலும் அதுபற்றி நாங்கள் பேசப்போவதில்லை. மித்ரவின் கடந்த காலங்களைப்பற்றி 'எக்கேடாவது கெட்டுப் போகட்டும்' என்கிற மனநிலைக்கு நாம் வந்துவிட்டோம்! என்ன தான் செய்வது? திருடர்கள்,  பக்கத்தில் வழக்குரைஞர்களை வைத்துக் கொண்டு  திருடுகிறார்கள்!கேள்வி கேட்டால் "எங்கள் மேல் வழக்குப் போடுங்களேன்!" என்று  நம்மைப் பார்த்து நகைக்கிறார்கள்!   திட்டம் போட்டு திருடும் கூட்டத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது!  அதுவே அழுகிச் சாகும்!

இப்போது நாங்கள், எங்கள் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறோம்.  மித்ரா இப்போது உங்கள் கையில். இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு உங்களின் கையில்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் எத்தனை வியாபாரிகளை அல்லது தொழிலதிபர்களை உருவாக்க  உங்களிடம் திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?  என்பது தான் எங்களது கேள்வி.  அதாவது சிறுதொழில் செய்பவர்கள், குறுந்தொழில்  செய்பவர்கள் அத்தோடு பெருந்தொழிலில் ஈடுப்பட்டிருப்பவர்கள்  அனவருக்கும் சேர்த்துத்தான்.

முக்கியமாக சிறு தொழிலில் உள்ளவர்கள்  எத்தனை பேர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப் போகிறீர்கள். இருப்பவர்களைத் தூக்கிவிட வேண்டும். புதியவர்களை உருவாக்க வேண்டும்.  குறுந்தொழில் என்பதும் வளர்ந்து வரும் தொழிலதிபர்கள். அவர்களுக்கான உதவிகள் நிறையவே தேவைப்படுகின்றன.  இன்று பலர் குறுந்தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள். இவர்களுக்கான தேவைகள் அதிகம். இவர்கள் தான் அடுத்தக்கட்டத்திற்குப் போக வேண்டியவர்கள்; கவனிக்கப்பட வேண்டியவர்களும் கூட.   அத்தோடு இன்றைய தொழிலதிபர்கள். அவர்களை நாம் ஒதுக்கிவிட முடியாது.  அவர்களும் வளர வேண்டும். அடுத்தக் கட்டத்திற்குப் போக வேண்டும்.  

இப்போதைய தொழில் அதிபர்கள் மித்ராவின் பணத்தைக் கொள்ளையடித்து விடுவார்கள் என்கிற குற்றச்சாட்டும்  உண்டு. ஆனால் இதனை எளிதில் கையாலலாம்.  இந்த மூன்று பிரிவினருக்கும் அதாவது ஒவ்வொரு பிரிவினருக்கும்  அவர்களின் பட்ஜெட் எவ்வளவு என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.  முதல் பிரிவினரை அதிகம் உருவாக்க வேண்டும் என்றாலும் அதற்கான தொகை சிறிது தான். இரண்டாவது பிரிவினருக்கு அதிகமாகவே தேவைப்படும். காரணம் இவர்கள் வளர வேண்டும். இவர்களின் வளர்ச்சி தான் நமது பலத்தைச் சொல்லும்.  மூன்றாவது பிரிவினர் குறைவு ஆனால் தொகையோ பெரிது.

ஆனாலும்  ஒவ்வொரு பிரிவினருக்கும் தோரயமான பட்டியல் ஒன்றைத்  தயாரித்திருந்தால் இது ஒன்றும் பிரச்சனையல்ல.

நாங்கள் இனி மித்ராவின் பழைய கால திருடர்களைப் பற்றி பேசுவதை விரும்பவில்லை. அவர்கள் அகப்பட போவதுமில்லை.  அதனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் எத்தனை பேரை வியாபாரத்துறைக்குக் கொண்டு வரப்போகிறீர்கள் என்பது  தான் எங்களது  எதிர்பார்ப்பு.

திருடர்களைக் கண்டுபிடிப்பது  என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வருகின்ற நான்கு ஆண்டுகளில்  உங்களின் செயல்திட்டம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

நன்றி! வணக்கம்!

No comments:

Post a Comment