Tuesday 13 February 2024

வறுமை ஒழிப்பு!

 

வறுமை ஒழிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதனை ஒழித்தே ஆகவேண்டும் என்பது எல்லா நாடுகளுக்கும் உள்ள முதற்கட்ட பணி.  மலேசியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

'தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில்  ஜெகத்தினை அழித்திடுவோம்'  என்றார் பொங்கி எழுந்த பாரதி.  வளமான ஒரு நாட்டை வறிய நாடாக மாற்றியவர்கள் நாட்டுக்கு 'விசுவாசமான' அரசியல்வாதிகள்.

அரசியல்வாதிகளுக்கு வறுமை என்றால் தெரியவில்லை. அதுவும் இந்தியரிடையே வறுமை என்றால் அவர்கள் சிரிக்கின்றனர். ஏன் இப்படி ஒரு நிலை?

நம் வாழ்க்கை முறை எந்தக் காலத்திலும் தாழ்ந்து போனதில்லை. ஆனால் வலுக்கட்டாயமாக நமது துரோகிகளால் தாழ்த்தப்பட்டோம். அதுவும் நமது இன துரோகிகளால்!

இந்தியர்களின் பிரச்சனைக்குத் தீர்வே காண முடியாதா?  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நமது உரிமைகள் மறுக்கப்பட்டு  அந்த உரிமைகள் மூலம் பயன் அடைபவர்கள்  வேற்று இனத்தவர். அதாவது  நம்முடைய உரிமைகளைப் பிடுங்கி வேறொருவருக்குத் தானம் கொடுக்கின்றனர்! அதனாலேயே நாம் இன்று நடுவீதிக்கு வந்துவிட்டோம். நமது பெண்கள் இன்று சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலை  தேடி போகின்ற  அவல நிலை.

நம்மை விட சிறிய நாடான சிங்கப்பூர் நமது பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி வேலை கொடுக்கிறது. நம்மால்  அந்தச் சிறிய நாட்டுடன் போட்டி போட முடியவில்லை! அந்த அளவுக்கு நாட்டிற்கு மிக விசுவாசமாக நடந்து கொண்டு, டாக்டர் மகாதிர், நாட்டை இலஞ்ச ஊழலுடன்  சீரழித்தார்  அதன் பலனை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

இன்று மற்ற இனத்தவரை விட அதிகம் பாதிப்படைவர்கள் இந்தியர்கள் தான். வேலை கொடுத்தாலே நமது பிரச்சனைகளில் பாதி குறைந்துவிடும். வேலையும் கொடுப்பதில்லை, கொடுப்பதற்கு வேலையும் இல்லை, சிறு வியாபாரங்களில் ஈடுபட்டாலும்  அதனையும் நகராண்மை கழகத்தினர் உடைத்துப் போட்டுவிடுகின்றனர். அருகிலேயே மலாயக்காரர்கள் கடைபோட்டு வியாபாரம் செய்கின்றனர். இது போன்ற முரண்பாடுகளை எங்கே போய் சொல்லுவது?  பார்ப்பவர்கள் யாரை முட்டாள்  என்று சொல்லுவார்கள்?

வறுமை ஒழிப்பு என்பது தேவை ஆனால் குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் தான் என்பது தேவையில்லை!  அது அனைத்து மலேசியர்களுக்குமான தேவை!

No comments:

Post a Comment