Saturday 3 February 2024

ஏன் இது நடக்கிறது?

 

தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கல்வி அமைச்சுக்கும் ஏன் கல்வி அமைச்சருக்கும்  கூட  ஏதோ அங்காளி  பங்காளி சண்டையோ என்னவோ தெரியவில்லை! 

அதுவும் குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் இந்த சண்டை கொஞ்சம் கூடுதலாகவே கேட்கிறது என்று தான் சொல்ல வேண்டும்!  பினாங்கு மாநிலத்தில் ஜ.செ.க. அரசாங்கம் தானே ஏன் இதுபற்றி அவர்கள் வாய் திறப்பதில்லை?  இப்படி ஒரு நிகழ்வு சீனப்பள்ளிகளுக்கு ஏற்பட்டால்  அவர்கள் வாய் திறக்காமல் இருப்பார்களா?

அதனால் தான் நாம் ஜ.செ.க. வை  நம்ப முடிவதில்லை.  அவர்கள் சீனர் நலனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், அவர்கள் மொழிக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள்  என்பதையெல்லாம் நாம் அறிந்து தான் இருக்கிறோம்.  அது தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது!  தமிழ்ப்பள்ளிகள் என்றால் அவர்களின் காதுகள் அடைத்துக் கொள்ளும்!

மலாய் பள்ளிகளுக்கு இது தேவையற்ற பிரச்சனை.  காரணம் தமிழ்த்தாய் வாழ்த்து என்பதுபோல எப்போதாவது அங்கு நடப்பது இல்லை. அது ஒவ்வொரு நாளும்  நடப்பது. அதனை எல்லாம் நாம் ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் நமது பள்ளிகளில் அது எப்போதாவது நடக்கும் ஒரு நிகழ்வு, அதற்கு ஏன் இத்தனை தடங்கல்கள் என்பது தான் நமது கேள்வி.  அதுவும் நமது பத்தாவது பிரதமர், அன்வார் இப்ராகிம்,  வந்த பிறகு தமிழ் பள்ளிகளுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள்!   இதன் மூலம் அவர் இந்தியர்களுக்கு விடுக்கும் செய்தி தான் என்ன?  ஏன் இத்தனை பகைமை உணர்வு?

அரசியல்வாதிகள் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு தீர்வு காண முற்பட வேண்டும். ஏன் இன்றைய அரசாங்கத்தில் இந்தியப் பிரதிநிதிகளே இல்லையா?  அவர்கள் வாய் திறப்பதற்கே வாய்ப்பில்லையா?  உங்கள் தலவர் கட்டளையிட்டால் தான் வாய் திறப்பீர்களோ?

கல்வி அமைச்சர் உரை நிகழ்த்தாமல் போனது அது இந்தியர்களை அவமானப்படுத்தும் விஷயம்.  அது பிரதமரின் உத்தரவாக இருக்கலாம்.  இதையே சீனப்பள்ளிகளுக்கு அவர் செய்யத் துணிவாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

கோளாறு என்பது நம்மிடம் தான். அது ஏன் சீனப்பள்ளிகளுக்கு நடக்கவில்லை நமது பள்ளிகளுக்கே நடக்கிறது என்பதை ஆராய வேண்டும்.  யார் திரைமறைவில் என்பது வெளியாகத்தான் செய்யும்!

No comments:

Post a Comment