Saturday 17 February 2024

வர்த்தகப் பயிற்சிகள் தேவை!


வியாபாரத் துறையில் காலெடுத்து வைக்கும் முன்னர்  முக்கியமாக நமக்குத் தேவை  குறைந்தபட்சம் சில பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க  வேண்டும்.

வர்த்தகம் பற்றி அறியாதவர்கள் ஆரம்பகாலத்திலேயே தோல்வியை ஒப்புக்கொண்டு கடையை மூடிவிட்டு ஓடிவிடுகின்றனர். அதன்பின்னர் வியாபாரம் என்றாலே 'ஐயோ வேண்டாம்!' என்று  பலருக்கு அறிவுரை கூற ஆரம்பித்து விடுகின்றனர்!

ஓரளவு நேரடியாக நிறுவனங்களில் வேலை செய்து அதன் மூலம் வியாபார நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொண்டு பின்னர் சொந்தமாக தொழிலை ஆரம்பிப்போரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் தொழிலைப் புரிந்து வைத்திருப்பார்கள்.  ஆனால் வியாபார உலகமே வேறு உலகம்  என்பதைப் புரிந்து  கொள்ளாமல் வருபவர்கள் கஷ்டப்பட வேண்டிவரும்.  குறைந்தபட்சம் வியாபாரத்துறையில்  கொடிகட்டிப் பறந்தவர்களைப் பற்றி புத்தகங்களின் மூலமாவது அறிந்தவர்கள் விஷயம் தெரிந்தவர்களாக எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் பட்ட கஷ்டநஷ்டங்களை - அவர்களின் அனுபவங்களை - நமது அனுபவங்களாக மாற்றிக் கொள்ளலாம்.

தொழிலைப்பற்றி ஒன்றுமே தெரியாது  ஆனால் தொழில் ஆசை  உண்டு என்பவர்களுக்கு  ஆங்காங்கே உள்ள மாநில வர்த்தக சங்கங்கள் அவர்களுக்கு ஏற்ற கருத்தரங்குகளுக்கு  ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நமது இளைஞர்களுக்கு நிறைய பயிற்சிகள் தேவை. நோக்கம்  வியாபாரங்களைப் பற்றி புரிந்து கொள்ளவது.

கருத்தரங்குகளில் வெற்றி பெற்ற தொழில் அதிபர்கள்  கலந்துகொண்டு தங்களது  அனுபவங்களைப்   பகிர்ந்து  கொள்ள வேண்டும்.  இப்போதும் இதுவெல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வர்த்தக சங்கங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றன. பெரும்பாலும் தலை நகரங்களைச் சேர்ந்த சங்கங்கள் தான் செய்கின்றன. முடிந்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சங்கங்கள் செய்ய வேண்டும். சிறு வணிகம் முதல் பெரிய வணிகம் வரை ஆலோசனைகள் தர வேண்டும். முக்கியம் சிறு வணிகங்கள்.

மித்ரா அமைப்பு இது போன்ற பயிற்சிகளுக்கு உதவ முன் வர வேண்டும். மித்ராவின் முக்கிய நோக்கமே இந்திய வணிகர்களை உருவாக்குவது தான்.

இனி மேலும் சாக்குபோக்குகளைச் சொல்லிக் கொண்டிராமல் சம்பந்தப்பட்டவர்கள் களத்தில் இறங்க வேண்டும். வணிகர்களை உருவாக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

No comments:

Post a Comment