Monday 19 February 2024

இன்னும் கடுமை தேவை!

 

நாட்டின்போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது  என்பது ஒன்றும் ரகசியமல்ல!

ஆனால் அது போக்குவரத்துத் துறையில் அதிகம் என்னும் போது  நமக்குச் சஞ்சலத்தை  ஏற்படுத்துகிறது. அதுவும் விரைவு பஸ் ஓட்டுநர்கள், லோரி ஓட்டுநர்கள் இப்போது கார்களை ஓட்டுபவர்கள் கூட போதைப்பொருள் உட்கொள்கின்றனர் என்னும் போது சாலைபாதுகாப்பு என்பதே இல்லை  என்கிற நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

பஸ் ஓட்டுநர்கள் போதையர்கள் என்றால் பயணம் செய்யும் பயணிகளின் நிலை என்னாவது? காலை நேரம் என்றால் வேலைக்குப் போகும் மக்கள், ஒன்றா இரண்டா?   காலை நேரத்தில் ஆயிரக் கணக்கானவர்கள்  பொது போக்குவரத்துகளை நம்பியே இருக்கின்றனர்.  இப்படி போதையை ஏற்றிவிட்டு பேரூந்துகளை  இயக்கினால் பயணம் செய்யும் மக்கள் நிம்மதியாக எப்படி  பயணம்  செய்ய முடியும்?

ஓட்டுநர்களைக் கண்காணிக்க வேண்டும் என்பது உண்மை தான்.  இப்போதும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். செய்திகள் என்னவோ பெருநாள் காலங்களில் தான் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று வருகின்றன.  அது போதாது என்பது தான்  நாம் சொல்ல வருவது. 

சோதனைகள் அடிக்கடி நடைபெற வேண்டும்.  மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.  போதையில் உள்ளவன் எதனைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. போதையில் இருக்கும் போது அவன் வேறொரு உலகத்தில்  பயணம் செய்து கொண்டிருக்கிறான்!  ஆனால் பரிதாபத்துக்கு  உரியவர்கள் மக்கள் அல்லவா?  அதற்கு என்ன தீர்வு என்பது தான் நம் முன் உள்ள கேள்வி.

அரசாங்கத்தில்,  இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களின் ஆலோசனையின் பேரில் தான் அனைத்தும் நடக்கின்றன. நமக்குத் தெரிந்ததெல்லாம்  காவல்துறை தான் இன்னும் அதிக அக்கறை எடுக்க வேண்டும்.  குற்றம் செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.  கடுமை என்றால் அதன் பொருள் ஒவ்வொருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவர்கள் மீண்டும் போதைப்பொருள் பக்கமே போகாதபடி  என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும்.

பொது மக்களின் நலன் கருதியே நாம் பேசுகிறோம். போதைப்பொருள் நம் நாட்டில் பெரும் பிரச்சனை தான். அதற்கு ஒரு முடிவு காண வேண்டும். அதற்குக் கடுமையான தண்டனைத் தவிர  வேறு எதுவும் நமக்குத் தோன்றவில்லை.

வாழ்க மலேசியா!

No comments:

Post a Comment