நாம் அனைவரும் மலேசியர் என்கிற எண்ணம் வலுவிழந்து வருகிறதோ என்று நாம் நினைக்க வேண்டியுள்ளது!
அதுவும் பிரதமர் அன்வார் இப்ராகிம் வந்த பிறகு இனங்களிடையே பிரிவினைகளை உருவாக்குகிறாரோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது. அது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை.
நன்றாக நடந்து கொண்டிருக்கும் கின்ராரா தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதியை உடைக்க வேண்டும் என்கிற எண்ணமே யாருக்கும் வந்திருக்கக் கூடாது. மேம்பாட்டு நிறுவனத்திற்கும் வந்திருக்கக் கூடாது அதே சமயத்தில் அதற்கு அனுமதி கொடுத்த அரசாங்கத்திற்கும் வந்திருக்கக் கூடாது. அவர்கள் அதற்கான அனுமதியைக் கொடுக்கும் போது தமிழ்ப்பள்ளி அங்கு இருப்பது தெரியும். தமிழ்ப்பள்ளி கடந்த எழுபத்தாறு ஆண்டுகளாக அங்கு தான் இருக்கிறது.
அந்த மேம்பாட்டு நிறுவனம் தனது எல்லை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு தான் அவர்களின் வேலையை அவர்கள் ஆரம்பத்திருப்பர். அப்போது அந்தப்பள்ளி அவர்களின் மேம்பாட்டு எல்லைக்குள் வரவில்லை. அதனால் தான் அரசாங்கம் அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது. அனுமதி கொடுத்த போது எல்லைக்குள் வராத தமிழ்ப்பள்ளி இப்போது எங்கேயிருந்து வந்தது? சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் அவர்களுக்குத் தெரியாமலா இது நடந்திருக்கும்?
நமக்கு ஒன்றும் புரியவில்லை. இப்போது மலேசிய அரசியலே கோமாளிகளால் நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது! படிக்காத கூட்டம் அரசை வழி நடத்துகிறதா? அது என்ன எதற்கெடுத்தாலும் இந்தியர்கள் மட்டுமே பிரச்சனைக்குரியவர்களாகக் காட்டப் படுகிறார்கள்?
தமிழ்ப்பள்ளிகளை உடைப்பது, கோவில்களை உடைப்பது, கல்வியில் பாகுபாடு, இன பாகுபாடு, சமய பாகுபாடு, வேலையில் பாகுபாடு - இப்படி ஒவ்வொன்றிலும் பாகுபாடு காட்டினால் இந்தியர்கள் எப்படி நாட்டுப்பற்றோடு வாழ முடியும்? அப்படி இருந்தும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு அவர்கள் உதவவில்லை, இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை. உள்ளுரில் எங்கும் குண்டுகளை வீசவில்லை.
அப்படியிருந்தும் இந்தியர்களுக்கு எதிராகத் தான் அனைத்து அரசாங்க நடவடிக்கைகளும் அமைகின்றன. நாம் அனைவரும் மலேசியர் என்கிற எண்ணம் பிரதமர் அன்வார் காலத்தில் நடக்குமா என்பது சந்தேகமே!