Monday 3 June 2024

ஊழியர் சேமநிதி என்னாகிறது?

 

ஊழியர் சேமநிதி சேமிப்பு,   ஊழியர்கள்  ஓய்வுபெற்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அது  கையில் இருப்பதில்லை.  சேமிப்பு எங்கோ பறந்துவிடுகின்றது என்று பிரதமர் அன்வார் கூறியிருக்கிறார்.

குறிப்பாக எடுத்துக் கொண்டால் இந்தியர்களுக்கு இது மிகவும் பொருந்தும்.  பெற்றோர்கள் அந்தப் பணத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தாலும் பிள்ளைகள்  அந்தப் பணத்துக்காக ஒரு திட்டம் போட்டு வைத்திருப்பார்கள்!   அப்பன்  உழைத்துச் சம்பாதித்த பணம்,  திட்டம் போடுவது பிள்ளைகள்!  பெற்றோர்கள் இளிச்சவாயர்களாக இருந்தால், ஐந்தாண்டுகள் வேண்டாம், ஐந்து மாதமே போதும்!

விபரமான பெற்றோர்கள்  பணத்தைப் பிள்ளைகளிடம் கொடுக்க மாட்டார்கள்.  அவ்ர்கள் வங்கியில் போட்டு வைப்பார்கள்.  ஆனால் அப்பாவி பெற்றோர்கள் என்றால் அதோகதி! பெற்றோரைப் பயமுறுத்தியே அந்தப் பணத்தை வாங்கிவிடுவார்கள்!

என்ன செய்ய? பொறுப்பற்ற முறையில் பிள்ளைகளை வளர்த்தால் பிள்ளைகள் சொல்லுவதைத்தான் பெற்றோர்கள்  கேட்க வேண்டும். அவர்களும் என்ன செய்வார்கள்?  கடைசி காலம் பிள்ளைகளோடு தான் வாழ வேண்டும்.  அதனால் அவர்களுக்கும் ஒரு கட்டாயம். பிள்ளைகள் சொல்லுவதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

கொடுமை என்னவென்றால்  பெற்றோரின் பணத்தை தங்கள்  விருப்பத்திற்குச் செலவு செய்யும் பிள்ளைகள், பெற்றோரின் கடைசி காலம்வரை அவர்களுக்குக் கஞ்சி ஊத்துவார்களா என்பது தான் கேள்விக்குறி.   பெற்றோரிடமே அந்தப் பணம் இருந்தால் அவர்களின் கடைசி காலத்திற்கு அந்தப் பணம் உதவும்.

ஆனால் அந்தப் பணம் எந்தந்த வகையில் வீணடிக்கப்படுகிறது என்று பார்த்தால் பிள்ளைகளின் கல்யாணச்செலவு.   ஏன்? அவர்கள் வேலை செய்யவில்லையா?  கல்யாணத்திற்காக பணம் சேர்த்து வைக்கவில்லையா?  ஒருத்தன் மோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்கிறான்! பணம் கொடுக்காவிட்டால் பயமுறுத்துகிறான்.  இப்படித்தான் பெற்றோர்களின் ஊழியர் சேமநிதி  அனைத்தும் கறைந்து போகிறது!

ஊழியர் சேமநிதி என்பது நமது வாழ்நாள் சேமிப்பு. முடிந்தால் வீடு போன்ற சொத்துக்கள் வாங்க வேண்டும்.  அந்தப் பணத்தின் மூலம்  கடைசிகாலத்தில்  நிம்மதியாக வாழ வேண்டும்.  இல்லாவிட்டால்  கடைசி காலத்தில் கையேந்த வேண்டி வரும்!

No comments:

Post a Comment