Wednesday 12 June 2024

ஏன் இந்த குளறுபடிகள்?

             ஆங்கிலம் படித்துக் கொடுப்பதில்  குளறுபடிகள்!

நமது பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பதில் ஏனோ தெரியவில்லை பல குளறுபடிகள்!

ஒரு சிலர் வேண்டுமென்றும் ஒரு சிலர் வேண்டாமென்றும்  பேசிக்கொண்டிருந்தாலே போதும் என்று நினைக்கின்றனர்!  ஒரு தீர்வைக் கண்டு பிடிக்க முடியவில்லை! அந்த அளவுக்கு அது என்ன அவ்வளவு பெரிய விஷயமா?

இந்நாட்டில் ஆங்கிலம் என்பது ஒன்றும் நமக்குப் புதிய மொழி அல்ல.  ஆங்கிலேயன் எப்போது நாட்டிற்குள் காலேடுத்து வைத்தானோ அன்றிலிருந்தே  ஆங்கிலம் உள்ளே புகுந்துவிட்டது.  அதன் பின்னர்,  நமது நாட்டின் தேசிய மொழி.  அதுவரையில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

தேசிய மொழி வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டது தான்  இன்றைய பிரச்சனை.  அந்த அளவுக்குத் தீவிரமாக ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.  ஆனால் அரசியல்வாதிகள்  அதனைத்தான் செய்தார்கள். அவர்களோடு  சில மலாய் ஆசிரியர் அமைப்புக்களும்  அவர்களுக்கு ஒத்து ஊதினார்கள்.   அதற்கும் ஒரு காரணம் உண்டு.  ஆங்கிலம் வேண்டுமென்றால் சீன, இந்திய ஆசிரியர்களால்   தான் முடியும் என்கிற ஒரு நிலைமை.  ஆனால் அவர்களைப் பயன்படுத்தி  மலாய் இனத்தவரையும் ஆங்கில ஆசிரியர்களாக்க முடியும் என்று  கல்வி அமைச்சு உணரவில்லை. இது தான் பிரச்சனை. மலாய் ஆசிரியர் இல்லை,  மலாய் மாணவர்களால்  ஆங்கிலம் படிக்க முடியாது  என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஆங்கிலத்தை முற்றிலுமாக புறக்கணித்து விட்டது கல்வி அமைச்சு.

இப்போது கல்வி அமைச்சு பல மலாய்  இன பட்டதாரிகளை உருவாக்கிவிட்டது. பெரிய  பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர். ஒரே குறை, அவர்களுக்கு ஆங்கிலம் சரளமாக வரவில்லை.   அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை என்கிறார்கள் அவர்கள்.  ஆனால் வெளி உலகிற்குப் போய் கருத்தரங்குகளில் கலந்துகொள்ள அல்லது  பிரச்சனைகள் வரும்போது  ஆங்கிலம் பேச முடியாமல் தத்தளிப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.  அதனை அவமானமாக இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்!

அப்போதும் 'மீசையில் மண் ஒட்டவில்லை' என்கிற பாணியில் தான் இப்போதும் பேசுகிறார்கள்!  ஆங்கிலம் வேண்டும் என்று பேசுபவர்கள்  ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்கிறார்கள்.  ஆங்கிலம் அதன் அவசியம் என்ன என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் சில மலாய் அமைப்புகளுக்கு எந்தக் காலத்தில் தெரிய வரும் என்பது நமக்குத் தெரியவில்லை!

என்ன தான் குளறுபடிகள்?  இந்த உளறுபடியர்களை அடக்கி வைத்தால் போதும்! எல்லாம் சரியாகும்!

No comments:

Post a Comment