Wednesday 19 June 2024

படித்த சமுதாயமாக மாறுவோம்!

 

                                  Faculty of Medicine  University of Malaya    

நமது சமூகம் படித்த சமூகமாக  மாற வேண்டும் என்றால் நாம் தான் மனம் வைக்க வேண்டும்.

அரசாங்கமோ, ஏதோ ஓர் அரசியல் கட்சியோ  அல்லது இயக்கமோ,  நம்முடைய பொறுப்பை அவர்களால் எடுத்துக்கொள்ள முடியுமா? முடியவே முடியாது!

நமது பிள்ளைகள் கல்வி கற்றவர்களாக மாற வேண்டும் என்றால்  நாம் தான்   அவர்கள் மீது அக்கறை கொள்ள  வேண்டும்.  நமக்காக வேறு யாரும் நம்து பிள்ளைகளுக்காக அக்கறை கொள்ள முடியாது.

கொஞ்சம் பின்நோக்கிப் பாருங்கள்.  தோட்டப்புறங்களிலே பள்ளிகளே இல்லாத காலகட்டம் அது. ஆனாலும் பள்ளி என்கிற பெயரில் எதனையோ உருவாக்கினார்கள். பெரும்பாலானோர் தமிழர்களே தோட்டப் பாட்டாளிகளாக  இருந்தனர்.  அங்கே கேரள மலையாளிகளும் இருந்தனர். வீட்டுப் பக்கத்திலேயே இருந்த  தமிழ் பள்ளிகளுக்கு அவர்கள் பிள்ளைகளைக் கல்வி கற்க அனுப்பினர். அவர்கள் பிள்ளைகள் தான் பிற்காலத்தில் தமிழ் பள்ளிகளில்  ஆசிரியர், தலைமை ஆசிரியர் என்று ஆக்கிரமித்துக் கொண்டனர். அது இன்னும் தொடர்கிறது.  அவர்கள் ஒரு தலைமுறை தான் தோட்டப்பாட்டாளிகள். அடுத்த தலைமுறை கல்வி கற்றவர்களாக  மாறிவிட்டனர்.

ஆனால்  தமிழர்கள் நிலை என்ன?  இரண்டு, மூன்று தலைமுறைவரை அதே தோட்டப் பாட்டாளிகள் என்கிற முத்திரை தான்.  இப்போது தான் அந்த அடையாளம்  மாறிவருகிறது. நான் பட்டிணத்திற்குப்  பள்ளி சென்ற போது  நான் ஒருவன் தான் அந்தத் தோட்டத்திலிருந்து பள்ளி சென்ற மாணவன்!  என் தந்தைக்கு நான் ஏதாவது 'உத்தியோகம்' பார்க்க வேண்டும் என்கிற கனவு இருந்தது.  மற்றபடி அவருக்குக் கல்வியைப் பற்றி ஏதும் அறியாதவர்.  சனி, ஞாயிறுகளில் என் தாயாருக்குத் தோட்டத்தில் உதவி செய்யக் கூட அனுமதிக்கமாட்டார்.  தோட்டப்பாட்டாளி என்கிற அடையாளம்  அவரோடு போகட்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டிருந்தார்.  நாங்கள் அந்தத் தோட்டத்தில் இருந்தவரை எந்த ஒரு  மாணவனும் பள்ளி செல்வதை நான்  பார்த்ததில்லை.

இதனை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால்  பிள்ளைகளின் மீது தந்தைக்கு ஒரு கனவு இருந்தாலே போதும்.  அவர் பிள்ளைகளைக் கல்வி கற்றவர்களாக  உருவாக்கிட முடியும்.  அதனால் தான் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறோம் நமது சமுதாயம் கல்விகற்ற சமுதாயமாக  மாற வேண்டுமானால்  அது பெற்றோர்கள் மனம் வைத்தால் தான் உண்டு. பெற்றோர்களின் பங்கு தான் அதிகம்.

"நீ டாக்டர், நீ லாயர், நீ எஞ்சினியர், நீ ஆசிரியர்  என்று சொல்லி சொல்லி வளருங்கள். அந்தப் பிள்ளைகள் கல்விகற்றவராக மாறுவார்கள்.  அவர்கள் கல்வி கற்ற பிறகு வேறு  தொழிலை  தேர்ந்தெடுத்தால்  அது அவர்களின் பொறுப்பு.  ஆனால் கல்வி என்பதைக் கட்டாயமாக்குங்கள்.

கல்வி என்பது நமக்கு அந்நியமல்ல. இடைக்காலத்தில் தவற விட்டுவிட்டோம்.  அதற்காக வருந்திப்  பயனில்லை. இப்போது நாம் களத்தில் இறங்கி விட்டோம்.  வெற்றி என்பதைத் தவிர வேறு எதனைப் பற்றியும்  சிந்திக்க வேண்டாம்.

No comments:

Post a Comment