Friday 28 June 2024

மீண்டும் எழத்தான் வேண்டும்!

விழுவது எதற்காக?   மீண்டும் எழுவதற்காக!

குழந்தையாய் இருக்கும் போது எத்தனையோ முறை, கணக்கற்ற முறை நாம் விழுந்து எழுகிறோம்!   விழுந்தால் எழுவது  மனித இயல்பு.  விழுந்துவிட்டு எழவே மாட்டேன் என்றால்  அது நமது இயல்பு அல்ல.

ஆனால் அதனைத் தான் நமது தினசரி  வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கிறோம். குழந்தையாய் இருக்கும் போது விழுவதும எழுவதும் இயல்பாக இருந்தது. வயதாகும் போது  அதுவே நமது முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கிறது!

குழந்தையாய் இருக்கும் போது  'விழுந்தால் எந்திரி' என்று உற்சாகப்படுத்திய கூட்டம் பெரியவர்கள் ஆனதும் 'போதும்! போதும்! அதைச் செய்யாதே!  இதைச் செய்யாதே!' என்று  தடை போடுகிறது! அதனால் தான்  நம் சமூகம், கீழே விழுந்த சமூகம்,  பட்டது போதும் என்று எழுவதற்கே அஞ்சுகிறது!  அப்படி என்ன தான்  பட்டு விட்டோம்?  நமக்குக் கீழே இருந்தவர்கள்  நம்மைவிட மேலே போவதை  கிழே  இருந்து பார்த்து  ரசித்துக்  கொண்டு  இருக்கிறோம்!  இதுவா முன்னேற்றம்?

விழுவதும் எழுவதும் நமது அன்றாட வாழ்க்கையில் நடப்பது தான். ஒரு மனிதன் கீழே விழுந்தால் அவனைத்  கைதூக்கி விடுவது நமது அனைவரின் கடமை.  கைதூக்கி அவனை உற்சாகப்படுத்தி  அவன் மீண்டும்  தனது விரும்பிய பாதையில் செல்ல அவனை உற்சாகப்படுத்துவது நமது கடமை.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்?   ஒருவன் விழுந்தால் அவனை மேலும் எழ முடியாதபடி  அவன் கைகால்களை முறித்து  முடக்கி விடுகிறோம்!  அவன் மீண்டும் எழாதபடி புதைத்து விடுகிறோம்.  இப்படித்தான் நமது வாழ்க்கை முழுவதிலும் இது போன்ற பாதகங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.

நம்மிடம் திறமை இல்லையென்று யாராவது சொல்ல முடியுமா?  நமது திறமைகள் பல வழிகளில் முடக்கப்படுகின்றன.   இவைகள் எல்லாம் மீறி தான்   நாம் பல துறைகளில் ஜொலித்து வருகிறோம்.

நாம் விழவைக்கப் பட்டோம். அதனால் 'இது  ' நமது விதி'  என்று  யார் மீதும் பழி போடாமல் நாம் மீண்டும் எழுந்து நமது இனத்துக்குப் பெருமை சேர்ப்போம்!

No comments:

Post a Comment