Thursday 6 June 2024

குழப்பத்தை ஏற்படுத்தும் சமய போதகர்!

      நன்றி: வணக்கம் மலேசியா

 நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதா?  அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. பேசினால்  பேச்சு வலுக்கும்.  கடைசியில் அது குழப்பத்தில் தான் முடியும்!

சமய போதகர் ஃபர்டாவுஸ் வோங்  தன் விருப்பத்திற்கு எதனை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஒரு நிலைமைக்கு வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.  அதற்கான காரணம் என்ன என்பது நமக்கும் புரியவில்லை.

மதமாற்றம் என்பதை அவர் தவறாகக் கையாள்கிறார்.  பள்ளி செல்லும் பிள்ளைகளை  மதமாற்றுவது  ஏதோ விளையாட்டான விஷயமாக  அவர் கருதுகிறார்.   யார் அவருக்கு அந்தத் தைரியத்தைக் கொடுத்தது?   இதுநாள் வரை கல்வி அமைச்சோ, காவல்துறையோ, அரசாங்கமோ எந்தவித  நடவடிக்கையும் அவர்மீது எடுக்கவில்லை.  அப்படியென்றால் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு அவருக்கு இருப்பதாகத்தானே நமக்குத் தோன்றுகிறது.

நமது பிரதமர் அன்வார் அவர்கள் சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த போது கூட சமய புரிந்துணர்வு என்பது அனைவருக்கும் தேவை என்பதாகக் கூறியிருந்தார்.  அது நமக்கும் புரிகிறது.  ஆனால் இப்போது ஏன் அந்த புரிந்துணர்வு  மலேசியர்களிடையே இல்லாமல் போனது? இப்போது மதத்தைப் பயன்படுத்தி  புரிந்துணர்வை சிதைப்பது யார்?   மற்ற மதத்தினரின் மனதைப் புண்படுத்துபவர் யார்?  இந்துக்களோ, கிறிஸ்துவர்களோ, புத்த மதத்தினரோ அல்லவே?

எப்படிப் பார்த்தாலும் பிரதமரின்   ஆதரவு இல்லாமல் இது போன்ற காரியங்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அந்தச் சமய போதகரை காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. கல்வி அமைச்சால் அவர் பள்ளிக்குள் செல்வதைத் தடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு  அவர் செல்வாக்குப் பெற்றவராக இருக்கிறார். ஆனால் மற்ற மதத்தினரிடையே செல்லாக்காசாகக் கருதப்படுகிறார்!

வெளிநாடுகளுக்குப் போய்  'எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்' என்று  பிரச்சாரம் செய்வதைவிட  இங்கு உள்ளூரிலேயே அந்த  பிரச்சாரத்தை முடுக்கிவிட வேண்டும் என்பது தான்  நமது வேண்டுகோள்.

தயவு செய்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

No comments:

Post a Comment