Tuesday 4 June 2024

இதன் தொடக்கம் எங்கே?

 

இப்போதெல்லாம் நம் நாட்டில் சமயம் சம்பந்தமான  குழப்பங்கள் அடிக்கடி வெளியாகின்றன.

அதில் முக்கியமாக ஒன்று: இந்து சமயம். இன்னோன்று இஸ்லாமிய சமயம். இந்து சமயத்தை இழிவு படுத்தி பேசுபவர்கள் நம் நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில சமய போதகர்கள்.  அவர்கள் தான் ஆரம்பித்து வைத்தவர்கள். அவர்களைக் கண்டித்து காவல்துறைக்கு புகார்கள் செய்யப்பட்டன.   ஆனாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை.   அதன் பின்னர், கடைசியாக  பத்துமலையில் ஒரு சுற்றுப்பயணி திருக்குரான் வாசகங்களை வாசித்தார். எப்படியோ இந்து சமயம் அலட்சியப்படுத்தப்பட்டது!

அதன் பின்னர் ஆரம்பித்தது  காலணி சாக்ஸ்ஸில் 'அல்லா' என்கிற சொல்லோடு ஒரு மோதல்.  சம்பந்தப்பட்ட பேரங்காடிகளில் தாக்குதல்கள் நடந்தன.  பிரதமர் ஓர் இந்து இளைஞனுக்கு மதமாற்றம் செய்து வைத்தார். அதன் பின்னரும் தொடர் பிரச்சனைகள். அனைத்தும் அடக்கி வாசிக்கப்பட்டன.  கடைசியாக,  இதோ மேலே படத்தில் காணப்படும்  டாக்சி ஓட்டுநர் ஒருவர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளிடம் இஸ்லாம் பற்றி தரம்தாழ்த்திப் பேசியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இது போன்ற பிரச்சனைகள் நடக்கக் கூடாது என்பதே நமது பிரார்த்தனை. ஆனால் நடக்கிறது.  இங்கே நம் நாட்டில் பல மதத்தினர் வாழ்கின்றோம். மதம் என்பதே மிகவும் உணர்ச்சியைத் தூண்டும் விஷயமாகக் கருதப்படுகிறது.  எல்லா மதத்தினருக்கும்  அது உணர்ச்சிகரமான  விஷயம் தான்.  ஒரு மதம் கேவலப்படுத்தும் போது  யாரும் கண்டு கொள்வதில்லை காரணம் அது முக்கியமான மதம் அல்ல என்று அரசாங்கமே கருதுகிறது!  இன்னொரு மதம் கேவலப்படுத்தும் போது  கேவலப்படுத்தியவர்கள் தண்டிக்கப்படுகின்றனர்!

இங்கு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.  மதத்தை வைத்து யார் விளையாடுகிறார்?  அரசாங்கமே ஏற்றத்தாழ்வுகளை  உருவாக்குவதாகவே  தெரிகிறது!  நம் அருகே உள்ள சிங்கப்பூரும் பல இன, சமயம் உள்ள நாடு தான்.  அங்கே ஏன் எந்த மதப்பிரச்சனைகள் வருவதில்லை?  அப்படியென்றால் அந்த ஊர் குடிமக்கள் மிகப் பொறுப்புணர்வோடு  மதத்தைக் கையாள்கிறார்கள் என்று ஏற்றுக் கொள்ளலாமா?  

மதத்தை தவறாக  கையாண்டால் அது நாட்டுக்கு நல்லதல்ல. அது தீமையையே உண்டாக்கும்.  எல்லா மதங்களும் சமம் என்கிற மனப்பக்குவம் வந்தால் தான் நாடு அமைதியாக இருக்கும்.

அமைதியை நோக்கி நாம் பயணிப்போம்.

No comments:

Post a Comment