Monday 17 June 2024

ஏன் காணொளிகளில்?


   


பொதுவாக பெருநாள் காலங்களில்  அல்லது மற்றைய நாள்களிலும்   கோழி,  வான்கோழி, ஆடு, மாட்டு இறைச்சிகளை  உண்பது  என்பது எல்லாகாலங்களிலும் உண்டு.

இது இன்று நேற்று வந்த பழக்கம் அல்ல. காலங்காலமாக உள்ள பழக்கம் தான்.  மனிதன் உயிர் வாழ இவைகள் எல்லாம் தேவை  என்கிற நிலைமைக்கு நாம்  தள்ளப்பட்டு விட்டோம்!  அதனால் தான் 'கொன்னா பாவம்  தின்னா போச்சு' என்று  பேச்சு வழக்கும் வந்துவிட்டது!

 அது பற்றி நாம் பேசப்போவதில்லை.   ஒரு சிலர் செய்கின்ற காரியங்கள் நம்மை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்துகின்றன.  அது பற்றி தான் நான் பேசுகிறேன்.  ஆடு வெட்டுகிறோம், மாடு  வெட்டுகிறோம் அவைகளையெல்லாம்  நாம் நேரடியாகப் பார்ப்பதில்லை.  ஆனால் இதனை படம் எடுத்து டிக்டாக்கில் போடுகிறார்களே அது தான்  சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

மாடுகள் ஓடுகின்றன, விரட்டுகிறார்கள். அவைகள் துடிக்கின்றன. கயிற்றால் கட்டி அவைகளை வீழ்த்துகிறார்கள். இதனைப் பார்க்கும் போது மனம்  வலிக்கிறது.   எவ்வளவு பெரிய  ஜீவன்.  எவ்வளவு சாதாரணமாக  துடிக்கத் துடிக்க கொல்லப்படுகிறது.  மறைவாக செய்தால் யார் கண்ணிலும் அகப்படப் போவதில்லை. முன்பெல்லாம் அப்படி ஒரு காட்சியை நான் பார்த்ததில்லை.  இப்போது அதனை டிக்டாக்கில் போட்டு நம் மனதைக் காயப்படுத்துகிறார்களே, யார் என்ன செய்ய முடியும்?

மிருகங்கள் மனிதனை நேசிக்கின்றன. அதனையும் நாம் டிக்டாக்கில் பார்க்கிறோம். உண்மையில் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவைகளை மிருகங்கள் என்று கூட நம்மால் சொல்ல முடியவில்லை.  நாயை, நாய் என்றால் கூட  அதனை வளர்ப்பவர்கள் சண்டைக்கு வருகிறார்கள்!  மாடுகள் கூட தனது அன்பை வெளிப்படுத்துகின்றான.

இவைகளையெல்லாம் காணொளிகளில்  பார்க்கிறோம்.  அதே  காணொளிகளில்  மிருக சித்ரவதையும் பார்க்கிறோம்.   இறைச்சி உண்ணுவதை நாம் குறை சொல்லவில்லை. நானும் சாப்பிடுபவன் தான்.  ஆனால் இத்தகைய சித்திரவதைக்குப் பின் நாம் சாப்பிடுகிறோமே என்கிற ஆதங்கம் உண்டு.

டிக்டோக், காணொளிகளில் காட்ட வேண்டாம் என்பதே நம் வேண்டுகோள்.

No comments:

Post a Comment