Saturday 8 June 2024

இதுவே சரியான தருணம்!

உயர்கல்விக்கூடங்களில்  மாணவர்களின் சேர்க்கை ஆரம்பாகியுள்ள நிலையில் நமது இந்திய மாணவர்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்து  கொள்வதில் நமக்கும் பங்கு உண்டு.

காரணம் ஒவ்வொரு ஆண்டும், கல்வி என்று வந்துவிட்டால்,  நாம் கீழ்நோக்கித் தள்ளப்படுகிறோம்  என்பது  ஓரளவு நமக்குத் தெரிகிறது.  உயர்கல்விக் கூடங்களில் நமது மாணவர்களின் எண்ணிக்கைப் பற்றி  நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை. அதில் ஏதோ  திரைமறைவு வேலைகள்   நடப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது.   சரி, அதுபற்றி நாம் பேசப்போவதில்லை.

இதோ, இப்போது உயர்கல்விக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.  மெட்ரிகுலேஷன், டுவெட் என்று இன்னும் பல்வேறு வகையான  விண்ணப்பங்களை மாணவர்கள்   செய்து கொண்டிருக்கின்றனர். 

ஒன்றை நாம் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.  நமது மூவினங்களில்  இந்திய மாணவர்களே  தகவல்களைத் தெரிந்துகொள்வதில்  பின் தங்கி இருக்கின்றனர்.  படிக்கும் பழக்கம் இல்லாதவர்களாக  இருக்கின்றனர்.  கணினியில் போய் தேடும் பழக்கம் இல்லதவராக இருக்கின்றனர்.  மாணவரிடையே தகவல் பரிமாற்றம் இல்லை.  குறிப்பிட்ட சிலர் தங்களுக்குளேயே தகவல்களை  வைத்துக் கொள்கின்றனர்.  பெற்றோர் படித்தவராக இருந்தால் இந்தப் பிரச்சனை எழுவதில்லை.

ஆனாலும் ஒரு சிலர் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.  அவர்களை நாம் பாராட்டுவோம். நமக்கு நாமே உதவி. அது தான் சரியான பாதை.  கிடைக்கின்ற உதவிகளைப்  பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

அரசியல்வாதிகள் உதவுவார்கள்  என்பதெல்லாம் முடிந்துபோன கதை. அவர்களுக்கு நாம் விடுக்கும் ஒரே வேண்டுகோள் என்னவெனில்  இந்த நேரத்தில் இந்திய மாணவர் எண்ணிக்கைப் பற்றி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள்.  எல்லாம் முடிந்த பிறகு எண்ணிக்கை என்னவென்று  கேள்விகள் எழுப்பாதீர்கள்.

படித்தவர்கள், கல்வியாளர்கள் பலர்  இந்த சமுதாயத்திற்கு முன்வந்து உதவுகின்றனர். அரசியல்வாதிகளும் தங்களது கடமையைச் செய்ய வேண்டும்.  யாரோ செய்வார் எனக் காத்திருக்க வேண்டாம்.  உங்களின் கடமையை நீங்கள் செய்ய வேண்டும்.  கேள்விகள் எழுப்ப, மாணவர்கள் எண்ணிக்கைப்பற்றி பேச  இதுவே சரியான தருணம்.

நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்.


No comments:

Post a Comment