Thursday 13 June 2024

டத்தோ ரமணன் அறிவாரா?



 

துணை அமைச்சர் டத்தோ ரமணன் அவர்களின் சேவையை நான் பாராட்டுகிறேன்.  

தெரியாத சில பிரச்சனைகளை வெளியே கொண்டு வந்தார்.  அதே சமயத்தில் சில பிரச்சனைகளை அவர் முழுமையாக வெளியிடாமல் பூசி மெழுகிறாரா  என்பது புரியவில்லை.

அதில் ஒன்று தான் சமீபத்தில்  அவர் உரையாற்றிய போது மக்களுக்குக் கொடுத்த ஒரு செய்தி.   Bank Rakyat,  தனது Brief-i   திட்டத்தின் மூலம்  இந்திய வணிகர்களுக்காக சுமார் ஐந்து கோடி வெள்ளி ஒதுக்கியிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

அதனை வரவேற்கிற அதே வேளையில்  வேறு சில ஐயங்களும் நமக்கு ஏற்படுகிறது. சமீபத்தில் ஒரு காணொளியில் எதிர்கட்சி தலைவர் ஒருவர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.

உணவக உரிமையாளர் ஒருவர் கடன் கேட்க சென்றிருந்த போது அந்த உணவகம் மலாய் உணவகமாக  மாற வேண்டும். அதன் பின்னரே அவர்களுக்குக் கடன் கிடைக்கும் என்று கூறியாதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.  அதாவது அவர்கள்  இஸ்லாமிய மதத்தினராக  மாறினால் மட்டுமே அவர்களுக்குக் கடன் கிடைக்கும் என்பது தான் அதன் பொருள், அல்லவா? இதற்கு முன்னர் அந்த வங்கி அப்படியொரு கொள்கையைக் கொண்டிருக்கலாம்.  ஆனால் ஐந்து கோடி என்று சொல்லி அது இந்தியர்களுக்கு மட்டும் என்று  ஒதுக்கிவிட்டு,  இப்படி ஒரு கொள்கையை அவர்கள் கொண்டிருக்கலாமா என்பது தான் நமது கேள்வி. ஒரு வேளை அவர்கள் மாமாக் உணவகங்களுக்கு  மட்டும் கொடுப்போம். அதே போல  இஸ்லாமிய இந்தியர்களுக்கு  மட்டும் தான் இந்த கடன் உதவி என்று சொல்ல வருகிறார்களா என்பதை  டாத்தோ ரமணன் விளக்க வேண்டும்.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இந்தியர்களுக்கு மட்டும்  என்று அவர்கள் கொள்கையாகக் கொண்டிருந்தால் நாம் அது பற்றி கருத்துரைக்க ஒன்றுமில்லை.   ஆனால் டத்தோ ரமணன் அவர்கள்  பொதுவாகவே இந்தியர்கள் என்று தான் கூறியிருந்தார். அதாவது, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், புத்தம், சீக்கியம் - இப்படி  அனைத்து இந்தியர்களுக்கும் என்பது தான் அதன் பொருள்.

டத்தோ ரமணன் அவர்கள் இது பற்றி விளக்க வேண்டும்.  அந்த கடன் உதவி இந்திய முஸ்லிம்களுக்கு மட்டும்  என்றால் நமக்கு அது புரியும். ஆனால் சும்மா இந்தியர் என்று சொல்லி அள்ளி விடக்கூடாது!

விரைவில் அதற்கு  விளக்கம் கிடைக்கும் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment