Saturday 15 June 2024

கல்வி கற்ற சமுதாயமாக மாறுவோம்!


 நாம் நமது கவனத்தை திசை திருப்பும் நேரம் வந்துவிட்டது!

போதும்! காலாகாலமும்  குடித்துவிட்டு சண்டை சச்சரவுகளோடு வாழும் சமுதாயம்  என்கிற அவப்பெயர் போதும்.` போதும்! போதும்!  இதற்காகவா நமது அப்பா அம்மாக்கள் நம்மைப் பெத்துப் போட்டார்கள்?

எத்தனையோ பேர், நமக்குக் கீழே இருந்தவர்கள், கல்வியை வைத்து மேலே வந்துவிட்டார்கள்.  நாமோ ஆணி அடித்தாற் போல  அப்படியே ஆடாமல் அசையாமல்  அப்படியே கிடப்பில் போட்ட கல் போல் தான்  இன்னும் கிடக்கிறோம்!  இதனைக் கூட ஒரு பெருமை என்று சொல்லக் கூடியவர்கள்  நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்!

அது பற்றிப் பேசுவதில் எந்தப்  பயனுமில்லை. அடுத்த அடி தான் முக்கியம். இன்றைய இளம் தலைமுறை பெற்றோர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.  தங்களது பிள்ளைகள் பட்டதாரிகளாக வேண்டும் என்கிற  எண்ணம் பெரும்பாலும் உண்டு.  அவர்களைச் சரியான பாதையில் வழிகாட்டுவது என்பது பெற்றோர்களின் கடமை.

இளம் பிள்ளைகளுக்கு நிறைய சோதனைகள். அவர்களிடம் உள்ள கைப்பேசிகளே போதும்.  கல்விக்காக பயன்படுத்த, உலக ஞானம் பெற, பொது அறிவு பெற என்று பல்வேறு பயன்கள்  உள்ளன.  பிரச்சனை என்னவென்றால்  அவைகளைத் தவிர தேவையற்ற விஷயங்களுக்குத் தான்  அந்தக் கைப்பேசிகள் பயன்படுகின்றன.  எல்லா மாணவர்களும் அப்படித்தான்  என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலும் அப்படித்தான்.!

ஆனால் இது போன்ற தடைகளைத் தாண்டித் தான்  நமது மாணவர்கள் தங்களது இலட்சியத்தை அடைய வேண்டியுள்ளது.  அதற்குப் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது.   பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம் என்றால்  பெற்றோர்கள் சிறு சிறு தியாகங்களைச் செய்யத் தான் வேண்டும். அது அவசியம்   தொலைக்காட்சி, தொலைப்பேசி இவைகளை எல்லாம் தவிர்க்கத் தான் வேண்டும். கல்விக்காக எவ்வளவு செலவானாலும்  செய்கிறோம்.  அதே போல  பொழுது போக்கும் அமசங்களைப் பெற்றோர்கள்  தவிர்க்கத்தான் வேண்டும்.

வருங்கால நமது தலைமுறை கல்வி கற்ற சமுதாயமாக மாற வேண்டும். கற்றவருக்கத்தான் செல்கிற இடமெல்லாம்  சிறப்பு.  அரசு அலுவலகத்தில்,  ஒரு கடைநிலை  ஊழியன் கூட நம்மை மதிக்கமாட்டேன் என்கிறான்,  என்று புகார்  சொல்கிறோம். கல்வி கற்றவனாக இருந்தால் அவன் அப்படிப் பேசுவானா?  அவனுக்குத் தைரியம் வருமா?

நாம் மாற வேண்டும். கல்வி கற்ற சமுதாயமாக மாற வேண்டும்.  நாம் எப்போதுமே உயர்ந்த சமுதாயம் தான். அதனை மறக்க வேண்டாம்.

No comments:

Post a Comment