Wednesday 31 July 2024

வரவேற்கிறோம்!


 ம.இ.கா.விலிருந்து விலகியவர்கள்  மீண்டும்  ம.இ.கா.வில் சேரலாம் என அழைப்பு விடுத்திருக்கிறார் ம.இ.கா.வின் தேசியத்தலைவர் டான்ஸ்ரீ சா. விக்னேஸ்வரன்.

இது ஒரு நல்ல முடிவாகவே நமக்குத் தோன்றுகிறது.  நாளுக்கு நாள்  பலவீனப்பட்டு வரும் ம.இ.கா. இந்தியர்களின் கொஞ்ச நஞ்ச ஆதரவு வேண்டுமென்றால்  கட்சியிலிருந்து  முக்கியமானவர்களை  எல்லாம்  விரட்டிக் கொண்டிருக்க முடியாது.

'அவர்களே விலகினார்கள்,  அவர்களே வரட்டும்' என்கிற பேச்செல்லாம் எதுவும் எடுபடாது.  என்னதான்  பிரச்சனையைத் திசைதிருப்பினாலும்  பழி என்னவோ தலைவர் மேல் தான் விழும்.  இது அரசியல். காலங்காலமாக  பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!

எப்படியோ மத்திய செயற்குழு  கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள  இணக்கம் தெரிவித்திருப்பதானது  கட்சிக்கு மீண்டும் உயிர் கொடுக்க  மிக அவசியம்  என்பதை உணர்ந்திருக்கிறது எம்று தெரிகிறது.

ம.இ.கா. ஒரு காலத்தில்  இந்திய சமூகத்தோடு மிகவும்  ஒன்றிப் போன ஒர் அரசியல் கட்சி.  தவறான தலைவர்களால்  அதன் நிலை மிகவும் கீழ் நோக்கிப் போய்விட்டது என்பது தான் அதன் குறை.  காலஞ்சென்று துன் சம்பந்தன் அவர்களுக்குப் பிறகு  அக்கட்சிக்கு நல்ல தலைமைத்துவம் அமையவில்லை. அமைக்க யாரும் விடவுமில்லை.

இனி ம.இ.கா.வுக்கு வருங்காலம் என்பதாக ஒன்றுமில்லை.   பத்துமலை முருகன் திருத்தலம் போன்ற  ஒரு நிலை தான் இவர்களுக்கும் ஏற்படும். 

இந்திய சமூகத்திற்கும்  இனி எந்த ஒரு புதிய கட்சியும் - ம.,இ.கா. வைப் போன்று,  அமையப்போவதில்லை.  தேவையுமில்லை.  இந்தியர்கள் இனி எந்த ஒரு கட்சியையும் நம்பப் போவதுமில்லை.  இப்போது இந்தியர்களுக்கு அரசியல் தெளிவு உண்டு.  யாருக்கு வாக்கு அளிக்க்லாம்  என்பது அந்தந்த இடத்தில் முடிவு செய்கிற இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.  அது போதும்!

ம.இ.கா.வின் நலன் கருதி இந்தப் புதிய இணைப்பை  நாம் வரவேற்கிறோம். வெற்றி பெற வாழ்த்துகள்!

Tuesday 30 July 2024

மணமா நாற்றமா?

 

டுரியான் பழம் என்றாலே - ஏன் - அந்தப் பெயரைச் சொன்னாலே மயங்காதவர்  யார்?

அதன் மணம் என்று வரும் போது வெவ்வேறு கருத்துகள் எழலாம். மலேசியாவில் பிறந்தவர்களுக்கு, அந்தப் பழங்களுடன் வாழ்பவர்களுக்கு,  அது மணம். வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு அது  நாற்றம்.  கழுதைக்குத்  தெரியுமா கற்பூர வாசனை என்பது தான் நமது கொள்கை!

ஆனால் பிரச்சனை இப்போது அதுவல்ல.  அப்படிப்பட்ட  வாசனைக் கொண்ட டுரியான் பழத்தையும்  மிஞ்சி விட்டனர் ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள்! அது தான் விசேஷம்!  டுரியான் வாசனையே தூக்கி அடிக்கும்!  அதனால் தான் அந்த டுரியான்களில் போதைப்பொருள்  கலந்திருப்பதை எப்படிக்  கண்டு பிடித்தார்கள் என்று அதிசயக்க வேண்டியுள்ளது!  மோப்ப நாய்களை வைத்துக் கண்டு பிடித்திருக்கலாம். நாய்களுக்குப்  போதைப்பொருளைத் தவிர டுரியான் வாசனையை அறியாது.  அதனுடைய மோப்பம் என்பது போதைப்பொருள் மட்டும் தான். அதுவும் சாத்தியம் உண்டு.

கடத்திக் கொண்டு போன  அந்த மலேசியர்கள் தப்பியிருந்தால் 58 இலட்சம்  டாலர் இலாபம். அகப்பட்டதால் தண்டனையோ  ஆயுள் தண்டனையும் 50 இலட்சம் டாலர் அபராதமும்.  அது அவர்களுக்குப் போதுமா என்றால் போதாது தான்.  ஆனால் சிறையில் அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும்  சேர்த்துத்தான் பார்க்க வேண்டும். 

டுரியான் பழம் என்றாலே பழங்களின் அரசன் என்பார்கள்.  அந்த அரசனுக்கு இப்படி ஒரு நிலைமையா  என்பது தான் சோகம். போதைப்பொருள்  கடத்தலை யாரும் தற்காத்துப் பேச முடியாது.  மனித குலத்திற்கே அது சாபம்.  ஆனால் ஒரு சிலருக்கு அது இலட்சக கணக்கில் பணம் புரளும் மிகப்பெரிய வியாபாரம்!  அகப்பட்டால் அத்தோடு முடிந்தது அவர்கள் செய்யும் மனித விரோத செயல்கள்!

ஒன்று மட்டும் நமக்குப் புரியாத புதிர். போதைப்பொருளும் டுரியான் வாசமும்  ஒன்றுக்கொன்று ஏதேனும் ஒட்டுதல் உண்டோ?

Monday 29 July 2024

புதிய வழிபாட்டுத் தலங்களா?

சமீபத்தில் டிக்டாக்கில் வெளியான ஒரு செய்தி.

பேராக் மாநில சட்டமன்ற,  ஆட்சிக்குழு உறுப்பினருமான  மாண்புமிகு சிவநேசன்  அவர்கள் கொடுத்த ஒரு செய்தியைக் கேட்க நேர்ந்தது. அதாவது பேராக் மாநிலத்தில் போதுமான இந்து கோவில்கள் உள்ளன. அதனால் மீண்டும் மீண்டும் கோவில்களைக் கட்டுவதைத் தவிருங்கள்  என்று கூறியதாக ஒரு நண்பர் செய்தி வெளியிட்டிருந்தார்.
 
அது சரியா தவறா என்பதை என்னால்  சொல்ல  முடியாது. இந்து கோவில்களுக்கு மட்டும் என்றால் யோசிக்க வேண்டிய விஷயம்.  எல்லா வழிபாட்டுத்தலங்களுக்கும் என்றால்  எந்த பிரச்சனையும்  எழாது.

சிவநேசன் அவர்களின் ஆதங்கம் நமக்குப் புரிகிறது. கோவில்கள் சொந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்தால்  பிரச்சனைகள் இல்லை.  கட்டப்பட்ட நிலம் தனியாருக்குச் சொந்தம் என்றால்  அது ஒரு தீர்க்க முடியாத  பிரச்சனை.  புதிய கோவில்கள்  அனைத்தும் முறையாகக் கட்டப்படுவதாகவே நினைக்கிறேன்.  கோவில்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் களையவே இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ!  தெரியவில்லை!

ஒரு காலத்தில் இந்து கோவில்கள்  அனைத்தும் ஒவ்வொரு தோட்டத்திலும் இருந்தன.  அவைகள் அனைத்தும் வீடுகளின் அருகிலேயே இருந்தன. அதுவே  பழக்கத்திற்கும் வந்துவிட்டது.  கோவில்கள் தூரமாக இல்லாமல் நடந்து போகும் தூரத்திற்குள் இருக்க வேண்டும் என்கிற ஒரு கலாச்சாரம் உருவாகிவிட்டது. கோவில்கள் தூரமாக இருந்தால் ஏதோ ஒரு வாகனத்தைப் பயன்படுத்திப் போகலாம் என்கிற எண்ணம் இன்னும் நமக்கு வரவில்லை.

புத்த விகாரங்கள்,  கிறிஸ்துவ ஆலயங்கள்  ஒவ்வொன்றும் தூரத்திலேயே அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் நாம் கார், பஸ், மோட்டார் சைக்கள், டெக்சி போன்ற வாகனங்களைத்தான்  பயன்படுத்துகிறோம். அது புழக்கத்திற்கும் வந்துவிட்டது.  புதிதாக எதுவும் தோன்றவில்லை. இந்துக்கள்  இப்போது தான் பழகி வருகின்றனர்.

சிவநேசன் அவர்கள் 'வேண்டாம்' என்று கூறுவதற்கு  வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.  இருக்கின்ற  கோவில்களை இன்னும் பெரிதுபடுத்தி, விரிவுபடுத்தி, அழகுபடுத்தி   பெரிய கோவில்களாகக் கொண்டு வந்தால் நிறைய   இந்துக்கள்  கூடுகிற இடமாக  அமையும். சமயங்களில் பக்தர்கள் கூடும் திருத்தலங்களாகவும் அமையும்.

நல்லதையே நினையுங்கள். நன்மை அடைவீர்கள்.

Sunday 28 July 2024

இது நிச்சயமாக ஆராயப்பட வேண்டும்!

நாட்டின் மற்ற பகுதிகளில் இல்லாத ஒன்று புத்ராஜயாவில் இருக்கிறது என்றால் அது நிச்சயமாக ஆராயப்பட வேண்டிய  விஷயம்.

ஒரு பக்கம் அங்கு வாழும் மக்கள் பருமனாக  இருப்பதாகக் கூறப்படும் வேளையில் புத்ராஜயாவில் வேலை செய்பவர்களும் பருமனாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  அரசாங்கத் தலைமை செயலாளர்,  அரசாங்கப் பணிகளில் ஈடுபட்டவர்களில்  50 விழுக்காட்டினர் பருமனாக இருப்பதாகக் கவலைத் தெரிவித்திருக்கிறார்.

ஒருசெய்தியின்படி ஆசிய நாடுகளில் மலேசியர்களே அதிகப்  பருமனாக இருக்கின்றனர் என்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அது ஆசியாவின் புள்ளிவிபரம்.  அப்படி ஆசியா இல்லையென்றாலும் ஆசியன் நாடுகளில் மலேசியா தான்  பருமனில் முதல் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது  என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

நமக்குத் தெரிய வேண்டியது எல்லாம் மலேசியாவில் அது ஏன், அந்த மண் மட்டும் பருமனைப் பதிவு செய்வதற்கு என்ன காரணமாக இருக்கும் எனக் கேள்வி எழுகிறது.

ஒரு காலத்தில் புத்ராஜயா  தோட்டப்புறமாக  இருந்த இடம். அப்போது, அங்கு வாழ்ந்தவர்கள் இப்படித்தான் புருமனாக இருந்தனரா  எனகிற விபரம் நம்மிடம் இல்லை.  அப்படி இருக்க நியாயமில்லை தான். ஆனால் இந்தப் புதிய குடியேறிகளுக்கும் பருமனுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்கின்றனவா  என்பதும்  புரியாத புதிராகத்தான் இருக்கின்றது!

எப்படியோ,  அமைச்சர் அரசாங்க ஊழியர்கள்  தங்களது உடம்பை திடகாத்திரமாக வைத்துக்கொள்ள  பலவேறு பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனைகளைக் கூறியிருக்கிறார். கார்களைப் பயன்படுத்தாமல் அலுவலகங்களுக்கு நடந்தே வரலாம் அல்லது சைக்கிள்களில் வரலாம். எத்தனையோ வழிகள் உண்டு.

ஆனால் சோம்பேறித்தனம் இருந்துவிட்டால்  எதுவும் ஆகாது. வீட்டுக்கும் தெண்டம் நாட்டுக்கும் தெண்டம்! கொஞ்சம் முயற்சி செய்தி வாழ வேண்டிய வயதில் வாழ்ந்து தான் பாருங்களேன்!

Saturday 27 July 2024

நம்பகத்தன்மை அற்றவர்கள்!


நமது மலேசிய இந்திய தலைவர்கள் நம்பத்தகுதியற்றவர்கள்  என்பதை சமீபகாலமாக அவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. 

நான் இந்திய தலைவர்கள்  என்று சொல்லும் போது நாடாளுமன்ற, சட்டமன்ற, மேல்சபை உறுப்பினர்களோடு  கட்சித் தலைவர்களையும் சேர்த்துத் தான்.

இனி இவர்களையெல்லாம் நம்புவது முட்டாள்தனம் என்பதை அவர்களே  மெய்ப்பித்துவிட்டனர். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி பேசாமல் வாய் மூடி இருப்பதே நல்லது என்கிற நிலைமைக்கு எப்போதோ வந்துவிட்டனர்! 

உதாரணத்திற்கு மெட் ரிகுலேஷன் நுழைவு பிரச்சனையில் அப்படியே ஆடாமல் அசையாமல் இருந்தார்கள்  என்பதை அவர்கள் பெருமையாக  நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.  ஏன் அனைவரும் ஒன்று சேர்ந்து  பிரதமருடன் ஒரு  சந்திப்பை நடத்தினால் ஒரு நல்ல பலன் கிடைக்கலாம் அல்லவா?  அதற்கு யாரும் தயாராக இல்லை!

இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்க வேண்டும்  என்று சொன்னால் நீங்கள் ஒன்று சேர என்ன பிரச்சனை? பிரதமரே எல்லா இந்திய மாணவர்களுக்கும் தமிழ் மொழி கற்பிக்கப்படும்  என்று அறிவித்துவிட்ட நிலையில் நீங்கள் மட்டும் ஏன் வாய் திறப்பதில்லை?  அது பற்றியான தொடர் சந்திப்பை ஏற்படுத்தி  அந்தப் பிரச்சனைக்கு  ஒரு முடிவை காணலாமே?  

உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். ஆனால் எந்த ஒரு பிரச்சனையையும் கையில் எடுக்கத்  தயங்குகிறீர்கள். எங்களுக்காகப் பேசுபவர்கள் இந்திய NGO க்கள் தான்.  பேச முடியாதவர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள்?

எத்தனையோ தமிழ்ப்பள்ளிகளுக்குப் பிரச்சனை. எத்தனையோ கோயில்களுக்குப் பிரச்சனை.  எதிலும் தலையிடுவதில்லை என்று கங்கணம்  கட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

ம.இ.கா.வை நம்பினோம். அறுபது ஆண்டுகள் பாழாய் போயிற்று! இப்போது உங்களை நம்புகிறோம். நீங்களும் அவர்களைப் போலவே  அறுபது ஆண்டுகள் ஓட்டலாம் என்று நினைக்கிறீர்கள்.  ஆனால் அவர்கள் காலம் வேறு. உங்களின் காலம் வேறு.  அப்போது நாங்கள் முட்டாள்கள். இப்போது நீங்கள் முட்டாள்கள்!  இப்போது உங்களை எப்படிக் கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும்.

பார்ப்போம்! எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்று பார்ப்போம்!

Friday 26 July 2024

மலைவாழை அல்லவோ கல்வி?

 

 படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு!  கண்ணதாசன்

நண்பர் ஒருவர் சொன்ன  செய்தியைக் கேட்ட போது  மனதிற்கு மிகவும் வருத்தம் அளித்தது.  மகளுக்குத் தனது கல்வியைத் தொடர ஆசை.  தாய் அதற்குத் தடையாக இருக்கிறார்! இதக் காலத்திலும் இப்படி ஒரு தாயா என்று  நினைத்தாலும் அவரது  பாரம் என்னவோ நமக்குத் தெரியாது. அதனால்  எதுவும் சொல்ல முடியவில்லை.

"மலைவாழை அல்லவோ கல்வி?  அதனை வாயார உண்ணுவாய் /போ!' என் புதல்வி" பாவேந்தர் பாரதிதாசன்

எந்த ஒரு தாயும் தனது மகள் கல்வி கற்கக் கூடாது என்று நினைக்கமாட்டாள்.  அந்த அளவுக்குக் கல்வியின் முக்கியத்துவம் இன்றைய தாயார்கள் அறிந்துதான் இருக்கிறார்கள்  

 ஆனாலும் சிலர்......?ஒரு முறை நானே ஒரு தாய் பேசியதைக் கேட்டிருக்கிறேன்.  கணவர் இறந்து போனார். மனைவி வேலை செய்கிறார்.  வருமானம் போதாது காரணமாக  மகளைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார்.   எஸ்.பி.எம்.  தேர்வு எழுத அது கடைசி ஆண்டு.   அடுத்த ஆண்டு தேர்வு எழுதலாம் என்று சொல்லி பள்ளியினின்று நிறுத்தி விட்டார்.  அடுத்த ஆண்டு வந்தபோது மகள் கவனம் சிதறிப்போனது.  சில்லுவண்டுகள் எல்லாம் மகளைச் சுற்றிக் கொண்டன.  கல்விக்கு  அரோகரா!

அதனால் தான் பள்ளி விடுமுறையின் போது கூட, தற்காலிகமாகக் கூட, மாணவர்களை வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்லுகிறார்கள் கல்வியாளர்கள். காரணம் கல்வி மேல் உள்ள கவனம் சிதறிப் போகும் என்பது தான் அவர்களின் வாதம். அது உண்மை தான்.  ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. எங்களிடம் வேலை செய்த மாணவன் இரண்டு ஆண்டுகள் வேலை செய்து பணத்தை சேமித்துக் கொண்டு மீண்டும் படிக்கப் போய்விட்டான்.  பட்டதாரி ஆகவேண்டும் என்கிற எண்ணம் வலுவாக இருந்தால் அவர்களை யாரும் அசைக்க முடியாது என்பது தான் உண்மை.

எனக்குத் தெரிந்து பல தாய்மார்கள் என்னதான் கஷ்டம் என்றாலும்  பிள்ளைகளின் கல்வியில் அவர்கள் கைவைப்பதில்லை.  படிக்கட்டும் என்று தான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அரைகுறையாகப் படித்தவர்கள் அரைகுறைச் சம்பளம் வாங்கிக்கொண்டு  தான் பிழைப்பை நடத்த வேண்டும். தொழிற்சாலைகள் தான் உங்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும்.  எதிர்காலம் என்பதாக ஒன்றுமில்லை.

மலைவாழை அல்லவோ கல்வி! அதனை வாயார உண்ணுவாய் என் தமிழ்ச்செல்வி!

Thursday 25 July 2024

யார் சொல்லுவது சரி?


 ஒரு நண்பர் சொன்னார்  "பேங் ராக்யாட் வங்கியில்  இந்திய உணவகங்களுக்குக் கடன் கிடைக்க வேண்டுமென்றால்  அவை ஹலால் சான்றிதழ்  பெற்றிருக்க  வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்"  என்றார் அவர்.

ஆனால் அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வேறு ஒரு கதையைச் சொல்கிறார்.  "ஹலால் சான்றிதழ் தேவையில்லை"  என்கிறார்!

அமைச்சர் அவர்கள் ஒன்றைத் தெளிவு படுத்த வேண்டும்.   சான்றிதழ் வேண்டுமா வேண்டாமா என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.  வெறும் எளிய மொழியில் சொன்னால் போதும்.

ஆளுக்கு ஒரு பக்கம் அதைப்பற்றி பேசி எது உண்மை என்று தெரியாத நிலையில்  தேவையற்ற சர்ச்சைகள்  வேண்டாம்.  உண்மை என்னவென்று தெரிந்து கொண்டால் வேண்டும் என்பவர்கள் அந்த வங்கியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வேண்டாம் என்றால் கைகழுவி விடலாம்.  இது ஒன்றும்  உலக மகா விஷயமில்லை.  நமக்கு ஒரு தெளிவு வேண்டும். அதனை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.  அது தான் நமது குறிக்கோள்

வர்த்தகக்கடன் கொடுக்கும் நிறுவனங்கள் ஒரு சில நிபந்தனைகளை வைத்திருக்கத்தான் செய்வார்கள்.  யாருக்குக் கிடைக்கும் யாருக்குக் கிடைக்காது  என்கிற தெளிவு வாடிக்கையாளர்களுக்கு  இருந்தால்  கடன் தேவையா இல்லையா என்று அவர்களே முடிவு செய்து கொள்வார்கள். ஆனால் நாம் சொல்ல வருவதெல்லாம் சும்மா அலங்காரமாக  பேசுவதம்  அதன்  பின்னர் பல்டி அடிப்பதும்  யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. 

வளரும் சிறு குறு நிறுவனங்கள் தங்கள் தொழிலை வளர்க்க கடன் என்பது முக்கியத் தேவை.  நமது நாட்டில் இந்திய வர்த்தகர்களுக்குக் கடன் கொடுப்பதில் ஏகப்பட்ட  கெடுபிடிகள்  உண்டு.  அதையெல்லாம் மீறித்தான் வர்த்தகர்கள் வளர வேண்டியுள்ளது.

இந்த விஷயத்தில் டத்தோ ரமணன் அவர்கள் கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டுமென்பது தான் நமது வேண்டுகோள்.

Wednesday 24 July 2024

ஏன் இந்த தடுமாற்றம்?


 ஏன் இந்தத் தடுமாற்றம் என்பது நமக்குப் புரியவில்லை.  யாருக்கு என்றால் நமது கல்வி அமைச்சுக்கு இந்த அளவுக்குத் தடுமாற்றம் தேவையில்லை.

ஆங்கில மொழி என்பது நம் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக ஒரு காலத்தில் இருந்தது. பின்னர் மலாய்,  நமது தேசிய மொழியானது.  அதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் எழவில்லை.

ஆனால் ஆங்கிலத்தை ஓரேடியாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று  சில அரசியல்வாதிகள்  செய்த சதியால்  ஆங்கிலம் தேவையில்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.  அதன் பின்னர் ஆங்கிலம் தேவையற்ற மொழி  என்று  அரசியல்வாதிகள் கொடிபிடித்தனர்.  எப்படியோ  ஆங்கிலம் நமது நாட்டில் தனது வீரியத்தை இழந்தது.

ஆங்கிலத்தின் இப்போதைய நிலை மிகவும் பரிதாபத்திற்குரிய  நிலையாகிவிட்டது.  பிழைக்க வந்த வங்காளதேசிகள் நம்மைவிட  மிகச் சிறப்பாகவே ஆங்கிலம் பேசுகின்றனர்!  வங்காளதேசம் பின் தங்கிய நாடு என்று சொன்னாலும் ஆங்கிலத்தை அவர்கள் ஒதுக்கவில்லை.  அவர்களின் வர்த்தகம் வளர்ச்சி  பெறுவதற்கு  ஆங்கிலம் அவர்களுக்கு அவசியம் என்று  அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

நம் நாட்டின் அரசியல்வாதிகள் பலருக்கு  வெளிநாட்டினர் உதவிகள் இல்லாமலேயே அனைத்தும் நமக்குக் கிடைத்துவிடும்  என்று நினைக்கின்றனர்.  நமது தேசிய மொழியை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் வெளிநாட்டினருடனான நமது தொடர்புக்கு  ஆங்கிலம் நமக்குத் தேவை.  உலகமே ஆங்கிலத்துடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.  அதனை ஒதுக்கியதால்  நாம் இப்போது ஒதுக்கப்பட்டிருக்கிறோம்!

இப்போது தான் ஒரு சில மாநிலங்கள் ஆங்கிலம் எங்களுக்குத் தேவை என்பதாகப் பேச ஆரம்பித்திருக்கின்றன.  அனைத்துப் பாடங்களும்  ஆங்கிலத்தில் அல்ல. குறிப்பாக கணக்கு, விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு ஆங்கிலம் தேவை.  இவைகளை தேசிய மொழியில் படித்து ஆகப்போவது ஒன்றுமில்லை.  

சரவாக், சபா, ஜொகூர்  போன்ற மாநிலங்கள்  ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கின்றன.  வெகு விரைவில் அதனை நடைமுறைக்குக் கொண்டுவரும் என நம்பலாம்.  கல்வி அமைச்சு தடுமாற வேண்டிய அவசியமில்லை.  நாட்டின் எதிர்காலத்திற்கு இந்த மாற்றம் அவசியம் தேவை.

Tuesday 23 July 2024

சிறுவருக்கு இதெல்லாம் விளையாட்டு!

என்ன தான்  செய்வது?  உலகெங்கிலும் பிள்ளைகள் ஒரே மாதிரி தான்.  அவர்களுக்கு எல்லாமே விளையாட்டு, விளையாட்டு, விளையாட்டு!  ஆனால் அதன் பின்னர் ஏற்படுகின்ற பிரச்சனைகளைச் சமாளிப்பது   எவ்வளவு கஷ்டம் என்பது பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.

ஆமாம், இந்தச் செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள்.  14 வயது சிறுவன் ஒருவன்  தனது 2 சகோதரர்களுடன் காரை ஓட்டிக்கொண்ட போனது மிகவும் வைரல் செய்தியாகப் பரவியது  அனைவருக்கும் தெரியும்.

இது மட்டுமா?  சில மாதங்களுக்கு முன்னர் சிறுவன் ஒருவன்  தனது தந்தை ஓட்டும் டிரைலர் லோரியை, வேறு எங்கோ நிறுத்தியிருந்த லோரியை, லோரி நிறுத்தும்  இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியதைச் செய்திகளில் படித்தோம்.  தந்தைக்குத் தெரிந்து தான் அதை அவன் செய்தான்.

நமது பள்ளி மாணவர்களில் பலர் உரிமம் ஏதும் இல்லாமல், பள்ளி போவதற்கு,  மோட்டார் சைக்கில்களைப்  பயன்படுத்துகின்றனர்.  சைக்கில்களையே பயன்படுத்தலாம். ஆனால் என்ன செய்வது? உடம்பில தெம்பு இல்லை. நடக்கவும் முடியாது,  அந்தக் காலத்தில் நானும் என் நண்பர்களும்  சுமார் மூன்று மைல் நடந்து பள்ளிக்கூடம் போனோம்.  இப்போது இதையெல்லாம் சொன்னால் இந்தத் தலைமுறையினருக்கு  'அது உங்கள் தலையெழுத்து'  என்று கேலி செய்வார்கள்!

நான் சொன்னது போல  இப்போது உள்ள பொடுசுகள் அப்பன் என்ன செய்கிறானோ  நாங்களும் அதைச் செய்வோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.  மோட்டார் சைக்கள் ஓட்டுகிறார்கள். கார் ஓட்டுகிறார்கள். புல்டோசர் ஓட்டுகிறார்கள், பெரும் பெரும் மரங்களைத் தள்ளுகிறார்கள் - எங்களாலும் முடியும் என்பதைக் காட்டுகிறார்கள். செய்யுங்கள் ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள்.  அனைத்துக்கும் வயது வரம்பு உண்டு.  ஏன் வயது வரம்பு தேவை?  அந்த வயது வரும்போது தான் பொறுப்புணர்வு வரும் என்பதை  ஆராய்ந்து முடிவு செய்திருக்கிறார்கள். அது நல்லது தான். 

 மலேசியாவில் இது  கடைசியாக இருக்கப் போவதில்லை. அது நடந்து கொண்டு தான் இருக்கும்.  பள்ளி மாணவன் ஒருவன் கூட சமீபத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்து போனான். யார் என்ன செய்ய முடியும்.  விபத்து வராதவரை எல்லாமே சரிதான்.  வந்தால் யார் மீதும் பழி சொல்ல வேண்டாம்.  பெற்றவர்கள் தான் குற்றவாளி.

வழக்கம் போல சிறுவர்களுக்கு இது விளையாட்டு. இங்கு மட்டும் தானா? உலகமெங்கிலும் தான்! அதை நிறுத்த பெற்றவர்களால் தான் முடியும்!

Monday 22 July 2024

இப்படியுமா ஆசிரியர்கள்?

 

நல்ல வேளை நமது பள்ளிகளில் இது போன்ற செய்திகளைக் கேட்பதில்லை!   நம் குழந்தைகள் தப்பித்துக் கொண்டனர்.  இங்கே இப்படியெல்லாம் நடந்தால் மாணவர்களே பெற்றோரிடம் போட்டுக் கொடுத்து விடுவர்.

ஆனாலும் அனைத்து ஆசிரியரையும் நாம் குற்றம் சொல்லிவிட முடியாது. எல்லா இடங்களிலும் கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றனர். மேலே உள்ளவர் தூங்குகிறார் பிள்ளைகள்  விசிறிகளை விசுறுகின்றனர்.  நமது நாடுகளில்  நேரத்தைக் 'கடத்த'  வெவ்வேறு வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஒருவர் அரசியலில் இருந்தால் போதும் அல்லது ஒரு பிரபல அரசியல்வாதியைத் தெரிந்தவராக இருந்தால் போதும்  பொதுவாகவே அவர் வேலை செய்யவே மாட்டார்.  தலைமை ஆசிரியரும் அவரைக் கண்டு கொள்ள மாட்டார்.  இது நமது நாட்டில் சில ஆசிரியர்களின் பிழைப்பு இப்படித்தான் நடக்கிறது!  அவர்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது.  அதற்கெல்லாம் துணிவு வேண்டும்!  என்ன செய்ய? சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

மேலே உள்ள ஆசிரியை  பாய் போட்டுப் படுத்துத் தூங்குகிறார்.  ஆனால் நாற்காலியில் தூங்குபவர்கள்  எத்தனை பேர்?   இவர்கள் எல்லாம் இந்தக் கணக்கில் வரமாட்டார்கள்.  ஆனால் நம் நாட்டில்  வகுப்புக்கே வராமல் மட்டம் போடும் ஆசிரியர்கள் தான் அதிகம்.  பிள்ளைகள் தான் மட்டம் போடுவார்கள்  என்றால் இங்கே ஆசிரியர்கள்  மட்டம் போடுபவர்களாக இருக்கிறார்கள்!

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் மேல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. சரவாக் மாநிலம். ஆங்கில ஆசிரியர்  ஒருவர் வகுப்புக்கே வருவதில்லையாம். மாணவர்கள் அந்த ஆசிரியர் மேல் வழக்குத் தொடுத்தனர்.  மாணவர்கள் வெற்றிபெற்றனர்.  ஆசிரியர் மாணவர்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டது.  அந்த ஆசிரியர் ஓர் அரசியல்வாதிக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.  நீதிமன்றம் சொன்னது தான் நடந்தது.

என்ன செய்வது? ஆசிரியர்கள் பலவிதம். இது போன்ற ஆசிரியர்கள் 'மாதா, பிதா, குரு, தெய்வம்  வரிசையில் வரமாட்டார்கள்!  ஆனால் நல்லாசிரியர்கள் நம்மிடையே நிறையவே இருப்பதால்  இன்னும் நல்லதே நடந்து கொண்டிருக்கிறது.

Sunday 21 July 2024

எதுவும் ஆகவில்லை!


 மெட்ரிகுலேஷன் நுழைவு இந்த ஆண்டும் நம் இந்திய மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தான் கொண்டு வந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

அதுவும் இந்த ஆண்டு பிரதமர் அன்வார் பெருமனதோடு 10ஏ எடுத்த மாணவர்களுக்கு நிச்சயம்  இடம் உண்டு  என்று அறிவித்த பின்னரும்  நம் மாணவர்களின் எண்ணிக்கை பெரும் ஏமாற்றதைத்தான்  கொண்டுவந்திருக்கிறது.  அந்த 10ஏ எந்த வகையிலும் இந்திய மாணவர்களுக்கு  உதவவில்லை என்பது தெளிவு.

எப்படியோ நம் மாணவர்கள் பூமிபுத்ரா  மாணவர்களோடு போட்டி இட வழியில்லை.  கல்வியில் அவர்களை நம்மால் மிஞ்ச முடியாது.   அவர்களில் 10ஏ எடுத்த மாணவர்கள் நமது இடத்தையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டார்கள்! இது என்ன கணக்கோ தெரியவில்லை.

மெட் ரிகுலேஷனில் 90 விழுக்காடு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. பின்னரும் 10 விழுக்காடு அவர்களுக்கு, பூமிபுத்ராக்களுக்கு,  பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின்  கோட்டாவிலிருந்து பிடுங்கப்பட்டிருக்கிறது. அதாவது இவர்கள் 10ஏ பெற்றவர்களாம்! அதனால் வந்த வினை!

எப்படியோ பிரதமரும்,  கல்வி அமைச்சரும்  இந்திய மாணவர்களுக்கு மெட் ரிகுலேஷன் கல்வியில் எந்த மாற்றமும் செய்யாமல்  ஏற்கனவே உள்ளதை விட இருப்பதையும் குறைத்திருக்கின்றனர்!  ஆக, பிரதமர் இனி நமக்கு மெட் ரிகுலேஷன் கல்வியில் நியாயம் செய்வார் என்பதற்கு எந்த முகாந்திரமுமில்லை.

இந்தப் பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்கின்ற ஒரு பிரச்சனை . அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத ஒரு சூழல் ஏபட்டுவிட்டது.  இனிமேலும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கிற நம்பிக்கையும் இல்லை. யார் யாரோ குரல் கொடுத்தும் அது எடுபடவில்லை.

இனி என்ன செய்யலாம்?  கல்வியாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இனி அடுத்த கட்டம் எஸ்.டி.பி.எம். தான்  என்றால் அதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.  அல்லது பணம் கட்டி தான் படிக்க  வேண்டும்  என்றால் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.   ஆனால் எந்த சூழலிலும்  கல்வியை மட்டும் இடையில் நிறுத்திவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

மெட்ரிகுலேஷன் கல்வி உண்டோ இல்லையோ  கல்வி தான்  நமது மூலதனம் என நம்புவோம்.

Saturday 20 July 2024

இட ஒதுக்கீடு!

இட ஒதுக்கீடு என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை பலர் புரிந்து கொள்ளவில்லை.

நம்  நாட்டிலுள்ள ஒரு  பகுதியினரைக் கல்வி ஒதுக்கீடு விஷயத்தில்  எந்த அளவு புறக்கணிக்கின்றார்கள்   என்பது மிகவும் வருத்தமான விஷயம். நமது நாட்டில்  இந்தியர்கள் என்றால் ஏதோ புறக்கணிக்கப்பட்ட மக்கள் என்பதாக  ஒரு சாரார் அதிலும் அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

மற்ற இனத்தாரை விடுங்கள்.  நம் இன அரசியல்வாதிகளே  நம்மைக் கண்டு கொள்வதில்லை என அறியும் போது எங்கே போய் முட்டிக் கொள்வது?   நம் இனத்திற்கு அதிகம் துரோகம் செய்தவர்கள்  நம் இன அரசியல்வாதிகள் தான்.  அதில் ஏதும் மாற்றுக் கருத்தில்லை.

நமது சமுயாத்தை ஒரு போராட்ட சமுதாயமாகவே மாற்றியவர்கள் நமது  தலைவர்கள் தான்.  நாம் செய்யும் போராட்டங்களைச் சீன சமுதாயம் செய்வதில்லை மலாய் சமுதாயம் கூட செய்வதில்லை.  அவர்களுக்குப் போராட்டங்கள் தேவைப்படவில்லை.

ஆனால் நம் நிலை அப்படியா?  எந்தப் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும்  அதற்கு எந்த ஒரு தீர்வும் காணப்படாத நிலையில்  நமக்குப் போராட்டங்கள் தேவைப்படுகின்றன.  தமிழ்ப்பள்ளிகளா,  போராட வேண்டியுள்ளது. கோவில் பிரச்சனையா,  போராட வேண்டியுள்ளது.  குடியுரிமைப் பிரச்சனையா, போராட வேண்டியுள்ளது.  மெட் ரிகுலேஷன் பிரச்சனைய,  போராட வேண்டியுள்ளது.  பள்ளிக்கூட நிலத்தில் பங்கு கேட்கிறான், போராட வேண்டியுள்ளது.  கோவில் நிலத்தில் உரிமை கொண்டாடுகிறான், போராட வேண்டியுள்ளது.  இப்படி வாழ்நாள் பூராவும் போராட்டம் தான்.  இந்த பிரச்சனைகளுக்கெல்லாம்  ஏன் தீர்வு காணமுடியவில்லை?  எல்லாம் நம் தலைவர்களின் கைங்கரியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு பிரச்சனையைக் கூட அவர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை.  அப்போதைக்கு அப்போது  கொஞ்சம் மெழுகு பூசி  ஒட்டுவது  தான் அவர்களின் வேலையாக செய்து வந்திருக்கிறார்கள்!  

ஒரு பிரச்சனையையும் தீர்த்து வைக்க முடியாத நிலையில்  கல்விக்காக ஏகப்பட்ட பணத்தை அரசாங்கத்திடமிருந்து  தவறாமல் பெற்று விடுகிறார்கள்!  கேட்டால் சமுதாயமாம்.  சமுதாய அக்கறையாம்.

கல்விக்காக இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இவர்களால் நடக்காத காரியம். நாமே தான் பொங்கி எழ வேண்டும்!

Friday 19 July 2024

மதுபான அடிமைகளா!

 

சீனப்பள்ளிகளுக்கு  மதுபான நிறுவனங்கள் நன்கொடை அளிப்பது கூட யாருக்கும் தெரியாத நிலையில் அந்தச் செய்தி சமீபத்தில் அம்பலத்திற்கு வந்தது!

இப்போது தான் கல்வி அமைச்சிற்கு ரோஷம்  பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அந்த நிறுவனங்கள் பல  ஆண்டுகளாக சீனப்பள்ளிகளுக்கு  நிதி உதவி செய்கின்றன என்கிற  விஷயமே தெரியாதாம்!  அடாடா! என்ன உலகமகா நடிப்புடா சாமி!  இவர்களுக்குத் தெரியாதாம்   நாம் அதை நம்ப வேண்டுமாம்!

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த நிறுவனங்கள்  இதுவரை நூறு கோடிக்கு  மேல்  நன்கொடைகள் கொடுத்திருக்கின்றனவாம்.

நாம் இங்கே பார்க்க வேண்டியது  இந்த நன்கொடைகள் மூலம் சீனப்பள்ளிகளின் கலவித்தரம்  குறைந்திருக்கிறதா என்பது மட்டும் தான்.  இன்று நாட்டில் முதல்தரக் கல்வியைக் கொடுப்பது சீனப்பள்ளிகள் தான் என்று அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொண்ட ஒன்று.  அதனால் தான் மலாய் பெற்றோர்கள், இந்தியப் பெற்றோர்கள்  சீனப்ப்ள்ளிகளுக்கே தங்களது பிள்ளைகளை அனுப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தேசிய பள்ளிகளின் தரம்  பற்றி எந்தப் பெருமையும் பட வழியில்லை என்பது கல்வி அமைச்சுக்கே தெரியும்.  தேசிய பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் டியூ‌‌ஷன் என்று ஒன்று இல்லாவிட்டால்  பள்ளிகளில் கிடைக்கும் கல்வியே பயனற்றதாக ஆகிவிடும்.

தேசிய பள்ளிகள்  நன்கொடைகள் எதனையும் மதுபான நிறுவனங்களிடமிருந்து வாங்குவதில்லை என்பது தெரியும்.  அதனால் அந்தப் பள்ளிகளின் தரம் உயர்ந்துவிட்டதா என்றால் இல்லை என்று தான் பதில்வரும்.   இதுவே நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. நன்கொடை பெறுவதால் ஒரு பக்கம் தரம் சிறப்பாக இருக்கிறது நன்கொடை  வாங்காத பக்கம் வந்தால் தரமோ  தட்டுத்தடுமாறுகிறது! 

ஆக ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. கல்வித்தரம் மதுபான  நிறுவனங்களிடம் இல்லை. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பில் இருக்கிறது. அது தேசியப்பள்ளிகளில் இல்லை  சீனப்பள்ளிகளிடம்  உண்டு. தேவையற்றதையெல்லாம் அரசியலாக்கி விதண்டாவாதம்  புரிவது அரசியல்வாதிகளின் அசட்டுத்தனம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

Thursday 18 July 2024

தலைவர்கள் ஒன்றுசேர்ந்து!

 

தலைவர்கள், அதுவும்  இந்தியத் தலைவர்கள்,  ஒன்று சேர்வார்களா? இவர்களை ஒன்று சேர்ப்பது என்ன நடக்கிறமா காரியமா? 

தெரியாது. ஆனால் சமுதாய நலன் கருதி அவர்கள் ஒன்று சேர வேண்டும். இவர்கள்  பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.  தனிப்பட்ட முறையில் அடித்துக் கொள்ளுங்கள், கடித்துக் கொள்ளுங்கள்.   ஆனால் சமுதாய நலன் என்று வரும் போது  நீங்கள் ஒன்று சேர்ந்து தான் ஆக வேண்டும்.

மெட் ரிகுலேஷன் நுழைவுத் தேர்வில் ஏன் இத்தனை கெடுபிடிகள்?  தீர்க்க முடியாத பிரச்சனையா இது?  மிக அல்பமான விஷயம்.  சீனர்கள் அதுபற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளவதில்லை.  இன்னொரு காரணம் நமக்குக் கிடைத்துவிட்டால் அவர்களுக்கும் கிடைத்துவிடும்.  எதற்காக நாம் ஏன்  அதனைக் கேட்டு கெட்ட பெயர் வாங்க வேண்டும். இது தான் அவர்களின் மனப்போக்கு! ஆனால் நம் நிலையோ வேறு. நமக்கு அது கட்டாயம்.

கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். அவர்கள் எதற்கும் தயார்!  ஆனால் நாம் தயாரில்லை.  நமக்கு அரசாங்கத்தின் உதவி தேவை.

ஒவ்வொரு ஆண்டும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் பலனில்லை.  அதனால் தான் நமது தலைவர்கள் ஒன்று சேர்ந்து  இதற்கு ஒரு  முடிவு காண வேண்டும். இனிமேலும்  இழுத்துக் கொண்டு போவதில் அர்த்தமில்லை.

அவர்கள் ஒன்று சேர்ந்து இதற்கு ஒரு முடிவு காணாவிட்டால்  நமக்குத் தெரிந்தது  ஒன்று தான்.   இவர்கள், இந்தத் தலைவர்கள், யாருக்கோ 'ஏஜென்' டாக பணிபுரிகிறார்கள் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. யாருக்கு?  ஆமாம், நாட்டில் தனியார் கல்லூரிகள் பல இந்தியர்களால் நடத்தப் படுகின்றன.  அவர்களுக்கும் மாணவர்கள் தேவைப்படுகின்றனர்.
சீன மாணவர்கள் இந்தப்பக்கம்  வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் போதுமான அளவு இருப்பதில்லை. அதனால் இந்திய மாணவர்கள் இவர்களுக்குத் தேவை.  அவர்களின் பற்றாக்குறைக்கு இந்திய மாணவர்கள் தேவைப்படுகின்றனர்.  அந்த ஒரு காரணத்தினால் தான்  இவர்கள், இந்தத் தலைவர்கள்,  பிரதமர் அன்வாருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இந்திய மாணவர்களை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுப்பதை தவிர்க்கிறார்கள்.  சாத்தியம் உண்டு அல்லவா?  அப்படி ஒன்றும் இவர்கள் எல்லாம் உத்தமர் அல்லவே! இவர்களின் லட்சணம் நமக்குத் தெரிந்தது தானே!

நமக்குத் தெரிந்ததெல்லாம் தலைவர்கள் ஒன்று சேர்ந்து பிரதமரைச் சந்தித்தாலே இதற்கு ஒரு முடிவைக் கண்டுவிடலாம்.  யார் யாரோ பேசிக் கொண்டிருப்பதைவிட  இவர்கள் நேரடியாகவே பிரதமரைச் சந்திக்கலாம் அல்லவா?  இடைத்தரகர் எதற்கு?

Wednesday 17 July 2024

ஒரு முடிவு தேவை!


நமது இந்திய மாணவர்களின் மெட் ரிகுலேஷன் கல்வி சம்பந்தமாக எந்த ஒரு சத்தத்தையும் காணோம். அப்படியென்றால் நமது தலைவர்கள் சாதித்துவிட்டார்களா?  இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். பொது மக்களைப் பொறுத்தவரை  எந்த ஒரு பதிலும் தெரியாமல் வழக்கம் போல இருட்டில் நின்று கொண்டிருக்கிறார்கள்!

பல ஆண்டுகளாக நாம் விடுக்கும் கோரிக்கை நமது மாணவர்களுக்கு 2500 இடங்களை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  மற்ற இன  மாணவர்களுக்கு  எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது பற்றி எந்த விவாதமும் தேவையில்லை.  நம்முடைய தேவையைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம்.  நல்ல ஒரு கல்வியைக் கொடுப்பதில் கூட நாம்  பலவகைகளில் புறக்கணிக்கப்படுகிறோம்.

இத்தனைக்கும் நாம் கல்வியில் சலுகைகளைக் கேட்கவில்லை.  நாங்கள் படிக்க முடியாதவர்கள், கல்வி எங்கள் மண்டைக்குள் ஏறவில்லை  என்று பிச்சை எடுக்கவில்லை.  கேட்பது 2500 இடங்கள்.  அதைக் கொடுப்பதற்கு  நாங்கள் அரசாங்கத்திடம் கை நீட்டுகிறோம், பலமுறை கேட்டுவிட்டோம்.  இனிமேலும் கேட்பதற்கு ஒன்றுமில்லை.

அதனால் இப்போது நம் முன்னே நிற்பது    ஒன்றே ஒன்று தான். நமது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்கள்  அனைவரும் ஒன்றுசேர்ந்து  பிரதமரைச் சந்திக்க வேண்டும்.  இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.  இந்தப் பிரச்சனையை வைத்தே அரசியல் பேசிக் கொண்டிருப்பது  மிக மிகக் கேவலமான ஒரு செயல்.  நமக்கு வேறு பிரச்சனைகளே இல்லையா?

இந்திய சமுதாயத்தை ஒரு போராட்ட சமுதாயமாகவே அரசாங்கம் மாற்றிக் கொண்டிருக்கிறது  என்பது தெரிகிறது.  எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் தானா?    ஒரு சிறு பிரச்சனையைக்  கூட அரசாங்கத்தால் தீர்த்த வைக்க முடியாத சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.   நம் சமுதாய பிரதிநிதிகளோ  சரியான மக்குகள். அவர்களால் எந்தக் காலத்திலும்  எந்தப் பிரச்சனையையும் தீர்த்து வைக்க முடிந்ததில்லை. அந்தக் காலந்தொட்டு  இந்தக் காலம்வரை அதே கதை தான்.  வாய்ச்சொல் வீரர்கள்!

இந்த ஆண்டு இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டியது அவசியம்.  மீண்டும் மீண்டும் இழுத்துக் கொண்டே போனால் அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிப்போம்.   

என்ன தான் முடிவு? பார்ப்போம்!

Tuesday 16 July 2024

அலட்சியம் வேண்டாம்!


 பள்ளிக்கூடத்தின் அவசியத்தை நாம் அறிந்திருக்கிறோம்.  அதனால் தான்  நமது குழந்தைகள் கல்வி கற்பது அவசியம் என்பதையும்  உணர்ந்திருக்கிறோம்.

நமது நாட்டில் பள்ளிகளுக்குப் பஞ்சமில்லை.  எல்லா இடங்களிலும்  பள்ளிகள் உண்டு.  இது இல்லேன்னா அது என்பது போல ஏதோ ஒரு மொழி பள்ளி அவசியம் இருக்கும். தமிழ், சீனம்,   தேசிய மொழி - இப்படி ஏதோ ஒன்று நமக்கு அருகிலேயே இருக்கும்.  நம்முடைய தேவை எல்லாம்  பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பது மட்டுமே.  அப்படியே ஏதேனும் இடர்ப்பாடுகள்  இருந்தாலும் அனைத்துமே  களையக்கூடியவைகள் தான், 

பள்ளிக்கூடத்திற்குப் போகும் ஒரு பையன் சிறைச்சாலையைத் தவிர்க்கிறான்.  பள்ளிக்கூடத்திற்குப் போகாத  ஒரு பையன் சிறைச்சாலையை நிரப்புகிறான்.  இது தான் வித்தியாசம். கல்வி அறிவு உள்ளவன் வாழ்க்கையில் முன்னேறுவதை  நோக்கமாகக் கொண்டிருப்பான்.  கல்வி கற்காதவன் திசை தெரியாமல் அலைந்து திரிந்து டைசியில் சிறை தான் அவனுக்கு அடைக்கலம் தரும்.

கல்வி எந்த வயதிலும் பயிலலாம் . ஆனால் அந்தந்த வயதில் பயிலுவது என்றென்றும் மனத்தில் நிற்கும்.  அதனால் தான் 'இளமையில் கல்' என்கிறார் ஔவையார்.   எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர் சொன்னார். அன்றே நம் முன்னோர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள். நாம் இன்றைய காலகட்டத்தில்  பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புங்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு முரண்பாடு, கவனித்தீர்களா? 

இடைப்பட்ட காலத்தில்  நாம் கல்வி பெற பல தடைகள் இருந்தன. மேற்குடி மக்களுக்கு மட்டும் தான் கல்வி என்கிற நிலை  ஒரு காலகட்டத்தில் இருந்ததெல்லாம் உண்மை.  இப்போது அது போன்ற தடைகள் எல்லாம் தகர்க்கப்பட்டு விட்டன. யாருக்கும் எந்தத் தடையுமில்லை.  இப்போதும் காரணங்களைப் புதிது புதிதாகக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம்! அதனால் தான்  நமது பிள்ளைகளுக்கு இன்னும் கல்வி சரியாக அமையவில்லை.  கல்வியில் பின் தங்கியே இருக்கிறோம். சிறைகளை அடைத்துக் கொண்டிருக்கிறோம்!  யாரால் என்ன செய்ய முடியும்?

குழந்தைகளின் கல்வியில் யாருக்கும் அலட்சியம் வேண்டாம்.  குறிப்பாக நான் தமிழர்களைத்தான் சொல்கிறேன். உங்கள் குழந்தைகள் கல்வி கற்றால் தான்  வாழ்க்கையில் நீங்கள் உயர முடியும். உங்கள் குடும்பம் உயர முடியும்.  உங்களால் தலைநிமிர்ந்து வாழ முடியும்.

Monday 15 July 2024

பட்டதாரிகளுக்குத்தான் மரியாதை!

 

இன்றைய நிலையில் நமது மாணவச் செல்வங்கள்  ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 

எஸ்.பி.எம்., எஸ்.பி.டி.எம். போன்ற கல்வித் தகுதிகளெல்லாம்  பெரிய அளவில்  உங்களுக்கு  வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்காது. அப்படியே ஏற்படுத்திக் கொடுத்தாலும்  நீங்கள் உங்கள் வாழ்நாள் பூராவும்  குறைந்த சம்பளத்திலேயே  வேலை செய்ய வேண்டிய நிலை வரும். 

எனவே இந்தக் கல்வி தகுதிகளை வைத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்குப் போக,  மேற்கொண்டு உங்கள் கல்வித் தகுதிகளை உயர்த்திக்கொள்ள,  நீங்கள் கட்டாயம் பட்டதாரி ஆவதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்.

பட்டம் பெற வேண்டும் என்றால்  முதலில் பொருளாதாரச் சிக்கல்கள் தான்  நம் கண்முன்னே பூதாகாரமாகத்  தோற்றமளிக்கும்.  ஆனால் அப்படியெல்லாம் பயப்பட ஒன்றுமில்லை.  பெரும்பாலும் தனியார் கல்லூரிகள் தான் அதிகமானக் கட்டணங்களை விதிக்கின்றன.  அதை விடுத்து அரசாங்கக் கல்லூரிகளில்  பி40 குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்குத் தான்  கட்டணங்கள்  இருக்கின்றன.  அப்படியே முடியாவிட்டாலும்  அரசாங்கமும் கடனுதவிகளைக்  கொடுக்கின்றது.

அத்தோடு கூட தனியார் நிறுவனங்களும் ஏகப்பட்ட அளவில் கடனுதவிகளை  வழங்குகின்றன.  கடனுதவி பெறுவதில் பிரச்சனைகள் இல்லை.  உங்களுக்கான தகுதிகள்  இருந்தால்  எந்த ஒரு சிக்கலும் இல்லை.  தேவை எல்லாம் உங்களுடைய தகுதிகளை  வளர்த்துக் கொள்வது தான். 

நமது வருங்காலம் என்பது கல்வியை மட்டுமே சார்ந்ததாக  இருக்கின்றது. கல்வி மட்டும் இருந்துவிட்டால் நீங்கள் எட்டாத இடத்தில் இருப்பீர்கள் என்பது நிச்சயம்.  இன்றைய தலைமுறை இன்னும் பெரிய வளர்ச்சி அடையவில்லை என்பது நமக்குத் தெரியும்.  அதனை முறியடித்து ஒரு வளர்ந்த சமுதாயம் என்று பெயரெடுக்க  வேண்டும்.  அதற்கு கல்வி ஒன்றே நமக்குச் சரியான ஆயுதம்.   மற்ற ஆயுதங்களெல்லாம் துருப்பிடித்துப் போகலாம்  ஆனால் கல்வி என்பது என்றென்றும் நிலைத்து நிற்கும். நம்மை உயர்த்திப் பிடிக்கும்.

அதனால் இளைய சமுதாயமே, கல்வி வேண்டும் அதுவும் பட்டக்கல்வி அவசியம் வேண்டும். உங்களின் நோக்கம் பட்டம் பெறுவது என்கிற நோக்கத்தோடு இருக்கட்டும்.

Sunday 14 July 2024

ஐயா! கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்!

          நன்றி: வணக்கம் மலேசியா

சமீப ஒரு மாத காலத்தில்  பேங் ராக்யாட் வங்கி, BRIEF-1, இந்தியர் கடனுதவித் திட்டத்தின் கீழ்  சுமார் அறுபது இலட்சம் வெள்ளிக்கான விண்ணப்பங்களை  அங்கீகரித்திருப்பதாக  துணையமச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்  அறிவித்திருக்கிறார். 

வாழ்த்துகள்.   இன்றை நிலையில் வணிகம் செய்வதற்குக் கடன் கிடைப்பதில் ஏகப்பட்ட கெடுபிடிகள்  இருப்பது நமக்குத் தெரியும்.  இந்த நிலையில்  நம்மில் ஒரு சிலருக்காவது  கடன் கிடைக்கிறதே என அறியும் போது  மகிழ்ச்சியளிக்கிறது.

பேங் ராக்யாட், BRIEF-1 னின் இந்தக் கடனுதவி இந்திய முஸ்லிம் வர்த்தகர்களுக்குக்  கொடுக்கப்படுகிறது  என்பதாகத்தான்  நாம் எடுத்துக் கொள்கிறோம். காரணம் இந்தக் கடனுதவி எளிமையான ஷரியா  விதிமுறைகளுக்கு ஏற்ப கொடுக்கப்படுகிறது என்றால்  அது நிச்சயமாக  இந்திய முஸ்லிம்கள் தான்  அதன் வாடிக்கையாளர்கள் என்பதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை.  அதனை டத்தோ ரமணன் அவர்கள் மறைக்க வேண்டிய அவசியமுமில்லை.

பொதுவாக எடுத்துக் கொண்டால் இந்திய முஸ்லிம்கள் அதாவது பூமிபுத்ரா அல்லாத  இந்திய முஸ்லிம் வணிகர்களுக்குக் கடனுதவி கிடைப்பதில்  பல தடைகள் இருக்கின்றன.என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.  அதனால் பேங்ராக்யாட்டின் இந்த  கடனுதவி  அவர்களுக்கு  பேருதவியாக இருக்கும் என நம்பலாம்.  இந்த நாட்டின்  வணிகத்தூண்களாக  இருப்பவர்கள் இந்திய முஸ்லிம்கள்.  அவர்களே வங்கிக்கடன்கள் கிடைப்பதில்  அல்லல் படுகின்றனர். 

நாம் சொல்லுவதெல்லாம்  டத்தோ ரமணன் வங்கியின் கடனுதவி பற்றி  தெளிவாகவே சொல்லிவிடலாம்.  இந்தியர்களில்  இந்திய முஸ்லிம்களும் ஒரு பிரிவினர் தான்.  அவர்களுக்குக் கடனுதவி கிடைப்பதில் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  ஒரு விதத்தில் மகிழ்ச்சி தான்.  அவர்களுக்கு, விசேஷமாக அவர்களுக்கென்றே,  வங்கி ஒன்று உதவி செய்ய காத்திருக்கின்றது என்றால்  நமக்கும் மகிழ்ச்சி தான்.

ஆனால் டத்தோ ரமணன் அவர்கள் வங்கியுடனான தொடர் பேச்சுகளை நடத்தி  மற்ற இந்தியர்களுக்கும்  கடன் வாய்ப்புகளைக் கொடுக்க  ஏற்பாடுகளைச் செய்தால்  இந்த சமுதாயாத்திற்கே  பயனானது என்பதில் ஐயமில்லை.

விரைவில் நல்ல அறிவிப்புகள் வரும் என எதிர்பார்ப்போம்!

Saturday 13 July 2024

நமக்கும் பொறுப்பு உண்டு!

 
    



குழாயடி சண்டையை நாம் பார்த்ததில்லை.  அதற்கான வாய்ப்பு நமக்கு இல்லை.

ஆனால் அதற்குப் பதிலாகத்தான் நம்மிடையே  டிக்டாக், யூடியூப் போன்றவைகளில் சண்டைகள் நிறையவே  நடக்கின்றன.  'பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த மாதிரி' என்று சொல்லுவார்களே அது தான் இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கிறது.  

சண்டைகள் போடுவதற்கு இப்படியெல்லாம் தளங்கள் இருக்கின்றன  என்கிற செய்தி இப்போது பலருக்கும் தெரிந்துவிட்டது.  வெளியே சண்டை போட்டால் உதை கிடைக்கும் என்று பயப்படுவர்கள் இங்கே வந்து சேர்ந்து கொண்டனர்!   இங்கே முகம் தெரியாது, முகவரி தெரியாது, ஏதோ ஒரு பெயரைப் பயன்படுத்தி  யாரையாவது வம்புக்கு இழுக்கலாம்.  மிரட்டினால் ஒதுங்கிவிடலாம். அப்படி ஒரு வசதி இங்கே உண்டு. அதனால் தான்  ரௌடிகள் கூட்டம் இங்கே வந்து சேர்ந்து கொள்கின்றனர். இதிலே படித்தவனும் உண்டு படிக்காதவனும் உண்டு. என்னவெல்லாம் பேசமுடியுமோ அதனையெல்லாம் பேசி தங்களைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்கின்றனர்!  ஆபத்து என்றால் ஒளிந்து கொள்கின்றனர்.

நாம் சொல்லவருவதெல்லாம் எதைச் செய்தாலும் கொஞ்சம் பொறுப்போடு  செய்யுங்கள் என்பது தான்.   நீங்கள் செய்கின்ற பொறுப்பற்றத்தனம் இந்த சமுதாயத்தைப் பாதிக்கும்  என்பதை  மறக்க வேண்டாம். நீங்கள் செய்தால் உங்கள் பிள்ளைகளும் தொடர்வார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒரு சிலர்  பயன்படுத்தும் சொற்கள்  நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவர்கள் வீட்டில் பெண் பிள்ளைகளே இல்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது. அம்மா, மனைவி, குழந்தைகள் இப்படி யாருமே  இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.  அட! அப்பன் என்னவோ சொல்லிக் கொடுத்தான் அதை நீங்கள் தொடர வேண்டுமா? நமக்குத் தான் வெட்கமாக இருக்கிறது.   அந்த தறுதலைகளுக்கு எதுவுமே இல்லை. முற்றும் துறந்தவர்களாக இருக்கிறார்கள்.

தம்பிகளா!  கொஞ்சம் யோசியுங்கள். அனைத்துவகை ஊடகங்களும்  குழந்தைகளின் கைகளில்  இன்று தவழ்கின்றன.  உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் அதனைப் பார்க்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். உங்களின் சண்டைகளை வீட்டுக்கள்  வைத்துக் கொள்ளுங்கள்.  பொதுவெளிக்குக் கொண்டு வராதீர்கள். ஏதோ ஒரு சில பெண்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆன்லைனில் வியாபாரங்கள்  செய்கின்றனர். அவர்களைத்  தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாம். அவர்கள் பிழைப்பைக் கெடுக்க வேண்டாம்.

இந்நாட்டு இந்தியர்களின் வளர்ச்சிக்கு நம் ஒவ்வொருவரின் பங்கு உண்டு. அதனை உணர்ந்து  செயல்பட வேண்டுகிறேன். வெற்றியோ, தோல்வியோ  நம்  அனைவருக்கும் அதில் பங்கு உண்டு.

Friday 12 July 2024

ஒப்புக்கொண்டதே ஆயுள் தண்டனை தான்!

 

ஈஷா என்கிற ராஜேஸ்வரியின் தற்கொலை தான்  நம் மக்களிடையே இப்போதைய  பேசுபொருளாக மாறியிருக்கிறது.  இன்னும் சில தினங்களுக்கு இது பற்றிதான் பேசிக்கொண்டிருப்போம்.   அதற்கான ஆயுட்காலம் இரண்டு மூன்று வாரங்கள், அவ்வளவுதான்!  காரணம் நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலை.  இனி செய்யாதே என்றாலும் அது என்னவோ மீண்டும் மீண்டும் செய்யத்தான் துடிக்கிறது மனம்!

சரி நாம் இப்போது ஷாலினி பற்றி பார்ப்போம்.  நாம் சொல்லுவது எல்லாம்  ஒரு கொலை குற்றத்திற்கு நூறு வெள்ளி  தானா என்பது தான் நமது குற்றச்சாட்டாக இருக்கிறது.   ஆனால் நீதிமன்றம் அப்படியெல்லாம் செயல்பட முடியாது.  ஆதாரங்களின் அடிப்படையில் தான் அவர்கள் செயல்பட முடியும்.  சிறுசிறு குற்றங்களுக்கான தண்டனையின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் இந்த வழக்கின் மூலம் புதிய வெளிச்சம் பிறந்திருக்கிறது. அதனால் அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.  அவரை வைத்துத்தான் புதிய சட்டம் உருவாகிறது! அந்தச் சட்டத்தின் முன்னோடி இவர்தான்!

பகடிவதை  குற்றங்களுக்கான  தண்டனைகள் இது நாள்வரை  நமது நாட்டில் இல்லை என்பதாகச் சொல்லப்படுகின்றது. அந்த நிலையில் தான் ஷாலினி என்கிற அந்தப்பெண் வெறும் நூறு வெள்ளியோடு தப்பித்துவிட்டார்.   ஆனால் வருங்காலங்களில் பகடிவதை  குற்றங்களுக்கான  தண்டனை அதிகமாக இருக்கும் என நம்பலாம்.  நூறு வெள்ளி என்பதை இந்த வழக்கோடு முடிவுக்கு வந்துவிட்டது! இது உறுதி.

என்ன தான்  சாதாரணத் தண்டனையோடு இவர் தப்பித்தார்  என்று நாம் பேசினாலும்  வேறு ஒரு கோணத்தையும் நாம் பார்க்க வேண்டும்.  ஐந்து நாள்கள் அவ்ர் சிறையில் இருந்தாலும் அதுவே அவர்க்கு ஆயுள் தண்டனை  போன்றது தான். அந்தத் தண்டனையை அவரால் என்றென்றும் மறக்க முடியாத தண்டனை.  என்றென்றும் அவர் உற்றத்தால், சுற்றத்தால்  சுட்டிக்காட்டப்படும் தண்டனை. 

இதைவிட வேறு என்ன தண்டனை வேண்டும்?

Thursday 11 July 2024

வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!



 

3நம்மிடையே  நடைமுறையில் உள்ள  சாதாரண பழமொழியாக  இருந்தாலும் மிகவும் சக்திவாய்ந்த - ஈடு இணையில்லாத  பழமொழி: "கற்றவர்க்குச் சென்ற  இடமெல்லாம் சிறப்பு" என்பது தான்.

அதை விடுவோம்.  இப்போது  அந்த 'சிறப்புக்காக'  யாரும் படிப்பதில்லை. படிப்பு முடிந்ததும் கௌரவமான வேலை. நல்ல சம்பளம் - இது தான்  நீண்ட நாள்களாக உள்ள  நடைமுறை.  அதுவும் நல்ல படிப்பு நல்ல சம்பளம் - மிக எளிமையாக சொல்லப்பட்டு விட்டது!

சரி இப்படி எளிமையாக சொல்லப்பட்டு விட்ட ஒரு விஷயத்தை நமது பெற்றோர்கள் ஏன்  இன்னும் கடினப்படுத்திக் கொள்கிறார்கள்?  தங்கள் பிள்ளைகள்  தாங்கள் இருக்கும் இடத்தில் அருகிலேயே உயர்கல்வி பெற வேண்டும் என்று நினைப்பதே  தவறு என்று அவர்களுக்குத் தெரியாதா? உயர்கல்விக் கூடங்கள் நம் வீட்டுப்பக்கத்திலா இருக்கின்றன?

வீட்டு அருகே என்கிற அந்தக் கொள்கையே தவறு.  வெளி ஊர்களில் தான் பல கல்லூரிகள் அமைந்திருக்கின்றன.  அங்கே போய் படிப்பது தான் முறை.  கல்லூரிகளில் படிப்பதற்கே இடம் கிடைக்காத நிலையில் "எங்களால் போக முடியாது! பக்கத்திலேயே வேண்டும்"  என்றால்  யார் என்ன செய்ய முடியும்?  பெற்றோர்கள் இப்படியெல்லாம்  நினைப்பதே தவறு.

வெளியூர்களில் போய் படிப்பதால் பல நன்மைகள் உண்டு.  பிள்ளைகள்  புதிய புதிய அனுபவங்களைப் பெறுவார்கள். துணிவோடு செயல்படக்கூடிய ஆற்றல் வளரும்.  கிணற்றுத் தவளைகளாக  அவர்களை வளர்ப்பதால் பின்நாட்களில்  அனுபவமின்மையால் சிரமப்படப் போவதும் உங்கள் பிள்ளைகள் தான்.  

எத்தனையோ பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பெற்றோரைப் பிரிந்து  வெளியூர்களில் போய் தங்களது கல்வியைக் கற்கின்றனர்.  எதற்காக?   தங்களது வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான். அதனை  முடக்கி விடாதீர்கள் என்பது தான் நம் பெற்றோர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள்.  வெளியூர் அனுபவம் என்பதும் கற்றலில் ஒரு பகுதி என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

ஒன்றை மட்டும் வலுவாக மனதில் இறுத்திக் கொள்ளுங்கள்.  உயர்கல்வி இல்லாமல் உங்கள் பிள்ளைகள்  உச்சியை அடைய முடியாது. பிள்ளைகள் எங்கும் வெளியே போகாமல், படிக்காமல் நம் அருகிலையே இருந்து படித்தால் போதும் என்ற மனநிலை இந்தக் காலத்திற்கு ஏற்றதல்ல என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.  பெற்றோர்களே! பிள்ளைகளின் எதிர்காலத்தைப்  பாழடித்து விடாதீர்கள்.

கல்வியை முடித்து அதன்பின்னர் அவர்கள் நாற்பது ஐம்பது ஆண்டுகள் வாழ வேண்டியவர்கள்.  அப்போது அவர்களைக் கவலைப்படும்படியாகச் செய்து விடாதீர்கள். சிறப்பாக வாழ இப்போதே அவர்களைத் தயார் செய்யுங்கள்.

Wednesday 10 July 2024

இன்னும் புரியில!

மெட் ரிகுலேஷன் கல்வி வாய்ப்பில் எஸ்.பி.எம். தேர்வில்  10ஏ பெற்றவர்கள் அனைவருக்கும்  வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் கூறியிருக்கும் வேளையில் அந்த அறிவிப்பு எந்த வகையில் இந்திய மாணவர்களுக்குப்  பயனாக அமையும்  என்பதில் தெளிவில்லை.

அதனை மாண்புமிகு ரமணன் ராமகிருஷ்ணன்  தான் விளக்க வேண்டும்.  நமது இந்திய மாணவர்களுக்கு 2500  இடங்களை ஒதுக்குமாறு  பலவழிகளில்  நமது இயக்கங்கள் அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்  பிரதமர் சொன்ன அந்த 10ஏ விவகாரம் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றது.  அமைச்சரவைக் கூட்டத்திலும் இது பேசப்பட்டதாம். இந்தியர்களின் நலனுக்காகப்  பேச அமைச்சரவையில் யாரும் இல்லாத நிலையில்  என்ன பேசப்பட்டிருக்கும்  என்பதும் நமக்குத் தெரியவில்லை.

சரி, நமக்குத் தெரிந்த அரைகுறை செய்திகளின்படி அல்லது  முற்றிலுமாக அறியாத நிலையில்  இந்தக் கேள்வி எழுகிறது.  90 விழுக்காடு ஒதுக்கப்பட்ட மலாய் மாணவர்களின் சலுகைகளைப்பற்றி  நம்மால் வாய் திறக்க முடியாது.  10 விழுக்காடு பற்றி பேசத்தான் நமக்கு அனுமதி உண்டு. இந்த பத்து  விழுக்காட்டில் தான் நாம்  நமது மாணவர்களுக்கு 2500 இடங்கள் கொடுங்கள் என்கிறோம்.  பிரதமர் 10ஏ பெற்ற மாணவர்கள் அனைவருக்கும்  நிச்சயம் இடம் உண்டு என்கிறார்.  அதாவது அனைத்து இன மாணவர்களுக்கும் இடம் உண்டு என்கிறார். இது மலாய் மாணவர்கள் உட்பட என்பது தான் நமது புரிதல்.

மலாய் மாணவர்களுக்கு 90 விழுக்காடு என்பது தனியாக அத்தோடு இந்த பத்து விழுக்காட்டிலும்  பலன் அடைகின்றனர். அதாவது நமது மாணவர்களின் இடங்கள் பிடுங்கப்பட்டு மலாய் மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது!  10ஏ பெற்ற எத்தனை இந்திய மாணவர்கள் இருக்கின்றனர் என்பது நம்மிடம் எந்த விபரமும் இல்லை.   800 மாணவர்கள்  கூட எட்டாது என்று சொல்லப்படுகின்றது.  அது எந்த அளவுக்கு உண்மை என்பதும்  தெரியவில்லை.

ஒன்று மட்டும் நமக்குத் தெரிகிறது. பிரதமர்  கொடுக்கின்ற அறிவிப்புக்கும், இந்திய மாணவர்களின் கூடுதல் எண்ணிக்கைக்கும் சம்பந்தம் இல்லை என்றே தெரிகிறது. இந்திய மாணவர்கள் குறையும் வாய்ப்புகள் தான் அதிகம் என்பது தான் இதன் பொருள்.

ஆனாலும் நம்பிக்கையோடு இருப்போம்.  பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பலனளிக்கும் என்று நம்பலாம்!

Tuesday 9 July 2024

சட்டம் வருகிறது! கப்! சிப்!

                                    இலக்கவியல் அமைச்சர், கோபிந் சிங் டியோ

இணைய பகடிவதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்  வந்துவிட்டதாகவே கருதலாம்.

சமூக வலைதளத்தை  தவறாகப் பயன்படுத்துவோருக்கு  எதிரான சட்டதிட்டங்கள் வெகுவிரைவில் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

வரவேற்கிறோம்.  ஒரு சிலர் டிக்டாக்கில் பேசுவதைக் கேட்கும் போது  நமக்குக் கேட்கவே காது கூசுகிறது. அது எப்படி இவர்களால் இப்படியெல்லாம்  பேச முடிகிறது என்கின்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.  

நம்மில் பலர் வீட்டில்  பேசுவதையே பொது வெளியில் பேசுகிறோம்.  நல்ல சொற்களைப் பேசுவதால் யாரும் குறைசொல்ல இடமில்லை.  ஆனால் ஆபாச வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றன?  அதுவும் நமது வீடுகளிலிலிருந்து தான் வருகின்றன. ஒரு பெண்ணோ ஆணோ இப்படித் தாராளமாக  ஆபாச வார்த்தைகளைப் பொது வெளியில் கொட்டுகிறார்கள் என்றால்  நாம் பெற்றோர்களைத்தான் குறை சொல்ல வேண்டியுள்ளது.  தவறு தான்.  ஆனால் முன்னுதாரணம் பெற்றோர்கள். குறை சொல்லத்தான் வேண்டியுள்ளது.

பொதுத்தளங்களில்  பேசுபவர்கள், எழுதுபவர்கள்  கொஞ்சம் யோசிக்க வேண்டும். நாம் பேசுவதை, எழுதுவதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், கேட்கலாம்.  அவர்கள் குழந்தைகளாக இருக்கலாம். இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதால்  அது எல்லா இடங்களிலும் போய்ச் சேர்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் ஒரு சில நபர்களின் வால்களை நிமிர்த்த முடியாது!  என்ன தான் சொன்னாலும் காதில் ஏற்றிக்கொள்ள மாட்டார்கள்!  வெளியே அடிதடியில் இறங்குவதைவிட டிக்டொக்கில் சண்டை போடுவது தமாஷமாக இருக்கும் என நம்புகின்றனர். தமாஷ் தான்.  ஆனால் பயன்படுத்தும் வார்த்தைகள்? என்ன சொல்வது?

எப்படியோ  இத்தனை ஆண்டுகள் பொறுமையோடு இருந்த அரசாங்கம் இப்போது  பொங்கி  எழுந்திருக்கிறது!  உங்களுக்குத் தமாஷ் வேண்டுமானால், சண்டை வேண்டுமானால் வீட்டுக்குள்ளேயே போட்டுக் கொள்ளுங்கள்.  பொது வெளியில் வேண்டாம்.

இனி 'சைபர்புல்லியிங்'  என்பது வேண்டாத விஷயமாகி விட்டது.  இங்கும் இந்தியர்கள் தான் பாதிக்கப்படுகிறோம்.  இனி வரப்போகும் சட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  அப்போதும் பாதிக்கப்படுவது உங்கள் பெற்றோர்கள், உறவுகள் தான். 

இனி மேலாவது கப்!சிப்!  என்பது தான் நமது அறிவுரை!

Monday 8 July 2024

சீனர்கள் முதலிடமா?


மலேசியாவில்  சீனர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று மலேசியப் புள்ளி விபரத்துறை கூறுகிறது.  அதனைத் தொடர்ந்து வெளிநாட்டவர், இந்தியர், மலாய்க்காரர் என்று வரிசைப் போகிறது.

பொதுவாக இதனை நம்புவது கடினம்.  காரணம்  சீனர்களைப் பற்றியான நமது நடைமுறை கருத்து என்பது வேறு.  அவர்கள் மாடமாளிகைகளில் வாழ்கிறார்கள், வசதியானவர்கள், பணக்காரர்கள்,  பொருளாதாரம் அவர்கள் கையில்,  அவர்களைச் சீண்டவே அரசு அஞ்சுகிறது -  இப்படி பலவாறாக சீனர்களைப் பற்றி  நாம் ஒர் உயர்ந்த  கருத்தினை வைத்திருக்கிறோம்.

ஆனால் இப்படி ஒரு செய்தியைக் கேள்விப்படும் போது நம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இவ்வளவு வசதிகள் இருந்தும் அவர்கள் ஏன் தற்கொலையை நாடுகிறார்கள்  என்பது தான் கேள்விக்குறி.

என்ன தான் பணக்காரர் வாழ்க்கையை வாழ்ந்தாலும் அவர்களும் மனிதர்கள் தான்.  அவர்களிலும் ஏழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு சராசரி வாழ்க்கையை அவர்களும் எதிர்நோக்குகிறார்கள்.  யாரும் விதிவிலக்கல்ல.

பொருளாதாரம் தான் அவர்களின் பலம்  என்றால்  பொருளாதாரத்தில் வீழ்ச்சி  வரும்போது  அதனை எத்தனை பேரால்  ஏற்றுக்கொள்ள முடியும்? பெரும் பணக்காரர்கள் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் நடுத்தர தொழில் புரிவோர் என்ன செய்ய முடியும்?  கோரோனா பெருந்தொற்று  வந்த பிறகு எத்தனை நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன என்பது நமக்குத் தெரியும். எத்தனை பேரால் அந்தப் பெரும் நட்டத்தை  ஏற்றுக்கொள்ள  முடிந்தது?  அவர்கள் நிலைமை என்ன?  நம்மிடம் எந்தப் புள்ளிவிபரமும் இல்லை.

தற்கொலை செய்து கொண்டவர்களில்  பெரும்பாலும்  ஆண்கள். அவர்கள் தானே தொழிலை நடத்துகிறார்கள்.  இன்பம் துன்பம்  அனைத்துமே அவர்கள் தான் எதிர்நோக்க வேண்டியுள்ளது.  கடன் பிரச்சனைகளும் அதிகம். ஆக, அவர்களின் கடைசி முடிவு தற்கொலை தான்.  இது மட்டும் தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது.  தீராத வியாதி, குடும்பப் பிரச்சனைகள்  இவைகளும் தற்கொலைகளைத் தூண்டுகின்றன.

தற்கொலைகள் பற்றி நாம் எப்படி  வேண்டுமானாலும் சொல்லலாம், எழுதலாம் ஆனால் 'இனி முடியாது' என்கிற அழுத்தம் வரும் போது அனைத்தும் கலைந்து போகிறது. இறைவன் தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

Sunday 7 July 2024

விலை தெரியுமா?

தினசரி  வாழ்க்கையில்  நாம் தினசரி அருந்தும் உண்வுகளில் விலையேற்றம் எந்தத் திசையை நோக்கிப் போகிறது என்பதே நமக்குத் தெரியவில்லை! 

நாம் எப்போதும் போலத்தான் கையில் பணத்தைக் கொண்டு போகிறோம்.  அங்குப் போன பிறகு தான் தெரிகிறது  விலையெல்லாம் எகிறிவிட்டதென்று!  பல சமயங்களில் நாம் ஏமாந்தவர்களாகி விடுகிறோம். 

சமீபத்தில்  ஊடகங்களில் படித்த  ஒரு செய்தி ஞாபகத்திற்கு வருகிறது.  ஒரு கப் தேநீரின் விலை  11.00 வெள்ளி என்பதாக அந்த உணவகத்தினர் பில் கொடுத்திருக்கின்றனர்!  ஆச்சரியந்தான்!  இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை!  இப்போது ஒரு வெள்ளி ஒன்றரை வெள்ளிக் காசுக்கு  எதுவுமே கிடைக்காத நிலை தான் நாட்டில் நிலவுகிறது.

நாம் ஏதோ ஒரு விலையை நினைத்துக் கொண்டு போகிறோம்.  ஆனால் விலையோ நாம் நினைப்பது போல் இல்லை.  கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல்  விலை ஏற்றம் நமக்குத் தெரிகிறது!   சமயங்களில் நாம் குற்றவாளிகள்  போல், கையில் போதுமான காசில்லாமல்,  அவர்கள் முன் உளற வேண்டியுள்ளது.

அதுவும் இந்திய உணவகங்களில் விலையேற்றம் அதிகம் என்று தான் நமக்குத் தோன்றுகிறது.  சாதாரணமாக ஒரு தோசைக்கு வெள்ளி 2.50 காசு  என்றால் வாங்கித்தான் ஆக வேண்டியுள்ளது.  அப்படி வாங்கியும்  மனநிறைவாக இல்லை என்பது தான் மிகவும் வருத்தத்திற்கு உரியது.  வேலை தெரியாதவர்களை வைத்துக் கொண்டு  வேலை வாங்கினால்  அப்படித்தான் தோசை இருக்கும்.  தோசையே போடத் தெரியவில்லை ஆனால் விலை மட்டும்  யானை விலை குதிரை விலை!  என்னடா சோதனை இது என்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது!

உணவகங்கள் என்ன உணவுகளுக்கு  என்ன விலைகள் போடுகிறார்கள் என்பதில் மிகவும் சிக்கலாக இருக்கிறது.  உணவகங்கள் தங்களது விலைப் பட்டியலை கடையின் முன் தெளிவாக எழுதி வைத்தார்களானால்  உள்ளே போகலாமா, வெளியே போகலாமா என்று வாடிக்கையாளர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.  எல்லாம் முடிந்த பிறகு தங்கள்  விருப்பத்திற்கு  விலையைப் போட்டால் 'சிவனே!'  என்று பணத்தைக் கொடுத்துவிட்டுப் போக வேண்டியது தான்!

இப்போது உள்ள நிலையில் விலைகளைத் தெரிந்த பின்னரே உணவகங்களுக்குப் போவது  கொஞ்சம் சிக்கனமாக இருக்கும்!

Saturday 6 July 2024

ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு!

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிறது நமது பழமொழிகளில் ஒன்று!

 ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உண்டு.  ஆத்திரத்தில்  நம்மையே நாம் மறந்துவிடுகிறோம்  என்பது தான் உண்மை. 

மேலே பாருங்கள்.  காற்பந்து விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.   அது மாணவர்களின் காற்பந்து விளையாட்டு. மாணவர்களில் ஒருவனுக்கு  நடுவர் அபாயகரமாக ஆடிய ஆட்டத்திற்காக சிவப்பு கார்டு கொடுக்கின்றார்.  சரியோ தவறோ நடுவரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

ஆனால் பார்வையாளராக உட்கார்ந்திருந்த  அந்த மாணவனின் தந்தை  கையில் ஒரு தடியோடு, நடுவரைத் தாக்க, களம் இறங்கி விட்டார்!  கையில் தடியோடு நடுவரை நோக்கி ஓடியிருக்கிறார்.  இருப்பினும் அங்கிருந்த காவலர்களால்  தடுத்து நிறுத்தப்பட்டு,   அவரைச் சமாதானப் படுத்தி, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தனர்!

ஒரு வேளை  அந்த தந்தையின் செயல் சரியானதாக இருக்கலாம். ஆனால் நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இன்றைய நிலையில் பல போட்டிகளில்  எதுவுமே ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்பது நமக்குத் தெரியும்.  நிறைய பாரபட்சங்கள் தெரிகின்றன.  திறமை என்பதுபற்றி கவலைப்படாமல்  'நம்ம பையன்' என்கிற  உணர்வே அதிகமாகத் தெரிகிறது.  என்ன செய்ய முடியும்?  நடுவரின் தீர்ப்பே இறுதியானது  என்று நினைத்து நியாய அநியாங்களை மறந்து விட வேண்டியது தான்!

ஆனால் ஒரு நாடு போட்டிகளில் வெற்றிபெற இலக்கைக் கொண்டிருந்தால்  நடுவர்கள்,   நடுவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.  போட்டிகளில் போட்டியிட மாணவர்களை  ஊக்குவிக்க வேண்டும்.  தனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்கிற பாகுபாடு  காட்டக் கூடாது.

இந்த தந்தை செய்தது சரியா?  நிச்சயமாக தவறு தான். எந்த ஒரு சூழலிலும் நடுவர்களை மதிக்கின்ற மனம் இருக்க வேண்டும்.  ஆமாம் அவர்கள் நம்மைவிட திறமைசாலிகள் அதனால் தான் அவர்கள் அங்கிருக்கிறார்கள் நாம் பார்வையாளர்களாக இருக்கிறோம்.  அதனை நாம் மறந்துவிடக் கூடாது. 

கோபத்தைக் கட்டுபடுத்தப்பழக வேண்டும்.  கோபம்  மனிதனை அழித்துவிடும்.  குடும்பங்களில் ஏற்படுகின்ற பல பிரச்சனைகளுக்குக் காரணமே கோபம் தான்.  அதனால் தான் நமது பெரியவர்கள் ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்றார்கள். 

அதனை செயல்படுத்தி நம்மைப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்ள வேண்டாம்!

Friday 5 July 2024

நேரம் தவறாமை!

நேரம் தவறாமை என்பதன் முக்கியத்துவம் அறியாதவர்கள் பலர் நம்மிடையே  இருக்கின்றனர்.   அறியதவர்கள் என்பதை விட அது பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவர்கள் என்று சொல்லலாம்.

இன்றைய இளைஞர்களுக்கு  நேரம் பற்றி கவலையுமில்லை  அது போல தவறாமை பற்றி அக்கறையும் இல்லை!    

ஒரு மனிதனின் முன்னேற்றம் என்பது அவன் நேரங்காலத்தோடு தனது பணிகளைச் செய்ய வேண்டும். நேரத்தை வீணடிக்காமல்  ஒழுக்கத்தோடு தனது கடமைகளை  மறவாமல்  மதிக்க வேண்டும்.  அனைத்துக்கும் ஓர் ஒழுஙுகுமுறை வேண்டும்.  ஒழுங்கற்ற முறையில்  எனது பணிகளைச் செய்தால்  அனைத்தும் ஒழுங்கற்றுப் போகும்  என்கிற எண்ணம் மனதில் இருத்த வேண்டும்.

நமக்கு நல்லதோர் எடுத்துக் காட்டு என்றால்  அது சூரியன்  தான்.  சூரியன் தனது கடமைகளில் தவறியதில்லை.  குறித்த நேரத்தில் சூரியனைப் பார்க்கிறோம்.  என்றாவது  தனது கடமையில் தவறியதாக சரித்திரமே இல்லை. 

நேரந்தவறியதால் வேலையிலிருந்து  பலர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.  வேலைக்குச் சரியான நேரத்தில் போக முடியததால் வேலை இழந்தவர் பலர்.  நேரம் தவறினால் அதனால் ஏற்படுவது  பெரும் இழப்பு நமக்குத்தான்.

நான்  ஒரு சில இளைஞர்களைப்  பார்த்திருக்கிறேன்.  நிறுவனங்களுக்கு நேர்காணலுக்காகப் போகும் போது  அவர்கள் படும் அவஸ்த்தை நமக்கே கஷ்டத்தை ஏற்படுத்தும்.  அப்போது தான் அவர்கள் சான்றிதழ்களை நகல் எடுத்துக் கொண்டிருப்பார்கள்!  எல்லாம் அவசரம்! அவசரம்!  இன்னொன்றும் அவர்களிடம் உண்டு. "எங்கே வேலை கிடைக்குப் போகிறது"  என்கிற எண்ணத்தோடு தான் நேர்காணலுக்கே போவார்கள்! இப்படிக் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக செல்லும் போது நேரத்தை தவற விடுகின்றனர்.  அத்தோடு வேலையையும் தவற விடுகின்றனர்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் நேரத்தின் மீது கண்ணாய் இருப்பவர்கள்.   அவர்கள் நேரத்தை அலட்சியப்படுவதில்லை.  பள்ளிப்பிள்ளைகளுக்குத்  தினசரி பட்டியல் போட்டு எந்த நேரத்தில் எதைப் படிக்க வேண்டும் என்றெல்லாம் ஏன் செய்கிறோம்?  நேரத்தோடு எதனையும் செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம்.

நேரத்தை வீணடிக்காதீர்கள். கடைப்பிடியுங்கள். கரை சேருங்கள்.

Thursday 4 July 2024

டிக்டோக் தற்கொலைகள்

டிக்டோக் தற்கொலைகள் அதிகரித்து  வருவது மனதை உலுக்குகிறது. நம்மிடையே டிக்டோக்கில் பிரபலமான ஒரு சகோதரி உயிரை மாய்த்துக் கொண்டார் என அறியும் போது யார் என்ன சொல்ல முடியும்?

அந்த பெண்ணின் பெயர் ராஜேஸ்வரி என்று சொல்லப்படுகிறது. டிக்டோக்கில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியவர் என்று சொல்லுகிறார்கள் இணையவாசிகள்.  

நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்று தான்.  டிக்டோக் போன்ற இணையதளங்களில்  இயங்கும் போது பலவிதமான கருத்துகள், விமர்சனங்கள்  எல்லாம் வரவே செய்யும்.  அவைகள் அனைத்தும் நல்லவைகளாக இருக்கும் என்று  நினைக்கவே கூடாது. அதுவே தவறு. இது போன்ற பொதுத்தளங்களில் இயங்கும் போது நல்லவைகள் சில வரலாம் ஆனால் பொல்லாதவை பல நூறுகள் வரும்.  அவைகளைத் தவிர்க்கவே முடியாது.

நாம் ஓர் அடாவடி சமுதாயம்!   நமது பெற்றோர்கள்,  அடாவடி செய்வதற்கென்றே ஒருசிலரை பெற்றுப் போட்டிருக்கிறார்கள்! அவர்களை யாராலும் திருத்த முடியாது.   ஒன்று மட்டும் அவர்களுக்குப் புரிவதில்லை.  இன்று நாம் என்ன செய்கிறோமோ அதுவே தான் திரும்ப நமக்கு வரும், தாக்கும் என்று அவர்கள் மறந்து விடுகின்றனர். எப்படியும் அது அவர்களை விடப்போவதில்லை.

இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று  என்னதான் நாம் சொன்னாலும் கொஞ்சம்  நாளைக்குத்தான் அவர்கள் பயத்தோடு தலைமறைவாக இருப்பார்கள்.   எந்த நடவடிக்கையும் இல்லையென்றால் பின்னர்  தங்கள் வேலையை  மீண்டும் ஆரம்பித்துவிடுவார்கள்!  காரணம் அந்த வடிவத்தில் தான் அவர்கள் பிறப்பு அமைந்திருக்கிறது!  காவல் துறையைத் தவிர வேறு யாராலும் அவர்களை மாற்ற முடியாது!

காவல்துறைக்குப் புகார் செய்யப்பட்டிருக்கிறது.  அவர்கள் இல்லையென்றால் 'சைபர்கிரைம்'   என்றும் ஒன்று இருக்கிறது. இந்த முறை நிச்சயம் ஏதோ ஒன்று நடக்கும் என எதிர்பார்க்கலாம். இதனை வளரவிடக் கூடாது  என்பது அவர்களுக்கும் தெரியும். 

இதுபோன்ற தற்கொலைகள் நடக்கக் கூடாது என்பதே மக்களின் விருப்பமாகும்.  காவல்துறை அல்லது சைபர்கிரைம் எப்படி இதனைக் கையாளப் போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Wednesday 3 July 2024

பெருஞ்சுமை தான்,என்ன செய்ய?

 

கல்வி கற்ற சமுதாயத்திற்கு,  செல்கின்ற இடமெல்லாம் சிறப்பு.  அதிலே எந்த கருத்து வேறுபாடும் இருக்க வாய்ப்பில்லை.  அதனால் தான் தமிழன் எங்கு சென்றாலும் தலைநிமிர்ந்து நடக்கிறான்.

ஆனால்,  ஏழை சமுதாயம்,  பி40 மக்களின்  முன்னுதாரணம்,  என்கிற நிலையில் நாம்  இங்கு இருந்தாலும் கல்வியில் திட்டமிட்டே நாம் புறந்தள்ளப்பட்டாலும்  கல்வியில் இன்றும் எள்ளவிலும் சோடை போனதில்லை.  குறைபாடுகள் இருக்கலாம் ஆனால் அந்த குறைபாடுகள் பின்கதவு வழியாக நமக்கு வந்தவை!

சமீபத்தில் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ஓர் அறிக்கையில் நமது மலேசிய பல்கலைக்கழகங்களின்  கல்விபயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை  வெளியிட்டிருந்தார்.  அதில் சுமார் 20,000 மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழகங்களில் பயில்வதாகவும், சுமார் 40,000 மாணவர்கள் தனியார்  பல்கலையில் பயில்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  அது கல்வி அமைச்சர் மூலமாக  வந்த அறிக்கை.

இதிலே மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் ஏழ்மையில் உழலும் பி40 மக்களான நாம் எந்த அளவுக்குப் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது தனியார் பல்கலையில் பயிலும் நமது மாணவர்களின் எண்ணிக்கையை வைத்தே கணித்துவிடலாம்.

ஆமாம் இந்த ஏழை சமுதாயம் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக எந்த அளவுக்குச்  செலவு செய்கிறார்கள் என்பதை அறியும் போது நாம் விழிப்படைந்த சமுதாயம் தான்  என்பதில் ஐயமில்லை. கல்வியை நாம்,  நம் முதலீடாகப் பார்க்கிறோம்.  அது எந்தக் காலத்திலும் நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதில்லை. 

பிள்ளைகளின் கல்விக்காக நமது சொத்துகளை விற்கிறோம். நமது சம்பாத்தியத்திலும் பாதி அங்கே போய்விடுகிறது.  அதே போல பல நிறுவனங்களும் கடன் உதவிகளைச் செய்கின்றன.  அதன் பலன் நமது மாணவர்கள் பட்டம் பெற்று வெளியாகும் போது கடன்காரர்களாகவே வெளியாகின்றனர்!  இருப்பினும் வேறு வழியில்லை. அதனால் தான் முடிந்தவரை அரசாங்க பலகலைக்கழகங்களை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்கிறோம்.

எப்படியோ இன்றைய நிலையில் தனியார் பல்கலைக்கழகங்களே நமது மாணவர்களுக்குக் கை கொடுக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  பொருளாதார ரீதியில் அது பெருஞ்சுமை தான், என்ன செய்ய?

Tuesday 2 July 2024

தாமதம் ஏன்?

           பினாங்கு, செபராங் பிறை - சுங்கை பாக்காப்  தமிழ்ப்பள்ளி

நாட்டில் பொருளாதார சூழல் எப்படியும் இருக்கலாம்.  பல திட்டங்கள் நிறுத்தப்படலாம் அல்லது தாமதிக்கப்படலாம்.  வேறு வழியில்லை!  பலவேறு வழிகளில் சிக்கனம் கடைப்பிடிக்க  வேண்டிய நிலை.  

அது நமது அரசாங்கத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.  தேவையற்ற திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன.  நேரம் வரும் போது அவை மீண்டும் நிலைநிறுத்தப்படும்.

ஆனால் என்ன தான் திட்டங்கள் நிறுத்தப்பட்டாலும்  ஒரு சில திட்டங்கள் எப்பாடு பட்டாயினும் நிறவேற்றப்பட வேண்டிய சூழல் உண்டு. அவைகள் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும்.  அதிலே கல்வியும் ஒன்று.  கல்வி என்று வரும் போது  பிரச்சனைகளை உடனடியாகக் கவனித்து அதற்குத் தீர்வு  காண  வேண்டும்.

நீண்ட காலத்திற்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளிகள் பல இப்போது ஏதோ ஒரு வகையில்  பிரச்சனகளோடு போராடிக் கொண்டிருக்கின்றன.  மாணவர்கள் அதிகரிக்கும் போது பள்ளிகள் விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும்.  இன்னும் சில பள்ளிகள்  ஆண்டுகள் பல கடந்ததினால் இன்றைய நிலைக்கு ஏற்ப  கட்டடங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.  இடம் பற்றாக்குறையினால்  புதிய பள்ளி கட்ட வேண்டிய சூழலில்  சில பள்ளிகள் இருக்கும்.  இன்னும் பல பள்ளிகளில் நூல்நிலையம், கணினி அறைகள்  போன்ற முக்கியமான அறைகள் தேவைப்படும்.   நம் பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் செய்ய வேண்டிய கட்டாயம் கல்வி அமைச்சுக்கு உண்டு.

இந்த சூழலில் தான் மேலே இருக்கும்  சுங்கை பாக்காப்  தமிழ் பள்ளியும் தள்ளப்பட்டிருக்கிறது.  மாணவர்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றனர்.   இப்போது இருக்கும் பள்ளியில் இடம் பற்றாக்குறை நிலவுகிறது.   புதிய பள்ளிக்கான  அனுமதியும் கிடைத்தாயிற்று. அதற்கான  மானியம்  கிடைத்தாலும்  விலைவாசி ஏற்றத்தினால்  மானியம் போதாது என்று சொல்லி  பள்ளியின் கட்டட வேலைகள் நடைபெறவில்லை.  இப்போது அதன் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்தத் திட்டம் கிடப்பில்  போடப்பட்டிருக்கிறது என்கிற நிலை.

கல்வி அமைச்சு பள்ளிகள் விஷயத்தில் எந்த சுணக்கமும் காட்டக் கூடாது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  எதனையும் தள்ளிப் போடக்கூடாது.   அதுவும் கல்வி என்று வரும் போது அதனை இழுத்தடிப்போதோ, தள்ளிப்போடுவதோ சிக்கலை உருவாக்கும்.

எது எப்படி இருந்தாலும்  தாமதம் வேண்டாம் என்பதைக் கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

Monday 1 July 2024

பிரதமரின் முடிவை ஏற்றுக்கொள்வதா?


மெட்ரிகுலேஷன் கல்வி  நுழைவு  ஒவ்வொரு ஆண்டும் வரும் போதெல்லாம் அதனைப் பற்றியான சர்ச்சை நீளுகிறதே தவிர அதற்கு முற்றுப்புள்ளி  வைக்கும் விதமாக எதுவும் நடப்பதில்லை!

நமக்கும் இப்படி ஒரு இழுபறி ஏற்படுவது  நமது இனத்திற்கே ஒரு இழுக்காகவே  கருதப்படுகிறது.

அன்வார் பிரதமராக வந்தால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்  என்று நினைத்தோம்  அவரும் பிரதமராக  வந்துவிட்டார் ஆனால்  இந்தியர்களின் எந்தப் பிரச்சனையும் தீரவில்லை. இப்போது அவர் மலாய் வாக்களர்களுடன்  போராடிக் கொண்டிருக்கிறார். நம்மை அவரால் ஞாபகப்படுத்திக் கொள்ளமுடியவில்லை.

கடைசியாக  மெட்ரிகுலேஷன் பற்றி அவர் சொல்லியிருக்கும் தீர்வு  எந்த வகையிலும் அதனைத் தீர்வாக எடுத்துக்கொள்ள முடியாது.  தீர்வு என்றால் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்ல.

மலாய் மாணவர்களுக்கு 90 விழுக்காடு மெட்ரிகுலேஷன் இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படுகின்றன. அதில் 10ஏ எடுத்த மாணவர்களும் அடங்குவர். இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை  நாம் 2500 இடங்களை ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம்.  அதில் 10ஏ பெறுபவர்களோடு 5ஏ, 6ஏ, 7ஏ, 8ஏ 9ஏ இவர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.  இந்திய மாணவர்கள் பெரும்பாலும் B40 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய மாணவர்கள் போட்டி போடுவது M40, T20  மாணவர்களோடு என்பது பிரதமருக்குப் புரிந்தது தான்.  அதனை நிவர்த்தி செய்வது பிரதமரின் கடமை.

சென்ற ஆண்டு சுமார்  1100  இந்திய மாணவர்கள்  மட்டுமே மெட் ரிகுலேஷன் கலவி பயில அனுமதிக்கப்பட்டனர். இப்போது பிரதமரின் அறிவிப்பின்படி  இந்த ஆண்டு சுமார் 750 இந்திய மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  காரணம் அவர்கள் தான் 10ஏ பெற்றிருக்கின்றனர். நமது தேவை எல்லாம் 2500 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே.

பிரதமர் வேறு எந்த முடிவை எடுத்தாலும் அது இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே செய்யும்.   மற்ற இன மாணவர்களைப் போல எங்கள் இந்திய மாணவர்களுக்கும் கல்வி பயில உரிமைகள் உண்டு. அதனைத் தடுக்க நினைப்பது இந்தியர்களுக்குச் செய்யும்  துரோகம் என்றே  கருதப்படும்.