Monday 8 July 2024

சீனர்கள் முதலிடமா?


மலேசியாவில்  சீனர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று மலேசியப் புள்ளி விபரத்துறை கூறுகிறது.  அதனைத் தொடர்ந்து வெளிநாட்டவர், இந்தியர், மலாய்க்காரர் என்று வரிசைப் போகிறது.

பொதுவாக இதனை நம்புவது கடினம்.  காரணம்  சீனர்களைப் பற்றியான நமது நடைமுறை கருத்து என்பது வேறு.  அவர்கள் மாடமாளிகைகளில் வாழ்கிறார்கள், வசதியானவர்கள், பணக்காரர்கள்,  பொருளாதாரம் அவர்கள் கையில்,  அவர்களைச் சீண்டவே அரசு அஞ்சுகிறது -  இப்படி பலவாறாக சீனர்களைப் பற்றி  நாம் ஒர் உயர்ந்த  கருத்தினை வைத்திருக்கிறோம்.

ஆனால் இப்படி ஒரு செய்தியைக் கேள்விப்படும் போது நம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இவ்வளவு வசதிகள் இருந்தும் அவர்கள் ஏன் தற்கொலையை நாடுகிறார்கள்  என்பது தான் கேள்விக்குறி.

என்ன தான் பணக்காரர் வாழ்க்கையை வாழ்ந்தாலும் அவர்களும் மனிதர்கள் தான்.  அவர்களிலும் ஏழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு சராசரி வாழ்க்கையை அவர்களும் எதிர்நோக்குகிறார்கள்.  யாரும் விதிவிலக்கல்ல.

பொருளாதாரம் தான் அவர்களின் பலம்  என்றால்  பொருளாதாரத்தில் வீழ்ச்சி  வரும்போது  அதனை எத்தனை பேரால்  ஏற்றுக்கொள்ள முடியும்? பெரும் பணக்காரர்கள் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் நடுத்தர தொழில் புரிவோர் என்ன செய்ய முடியும்?  கோரோனா பெருந்தொற்று  வந்த பிறகு எத்தனை நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன என்பது நமக்குத் தெரியும். எத்தனை பேரால் அந்தப் பெரும் நட்டத்தை  ஏற்றுக்கொள்ள  முடிந்தது?  அவர்கள் நிலைமை என்ன?  நம்மிடம் எந்தப் புள்ளிவிபரமும் இல்லை.

தற்கொலை செய்து கொண்டவர்களில்  பெரும்பாலும்  ஆண்கள். அவர்கள் தானே தொழிலை நடத்துகிறார்கள்.  இன்பம் துன்பம்  அனைத்துமே அவர்கள் தான் எதிர்நோக்க வேண்டியுள்ளது.  கடன் பிரச்சனைகளும் அதிகம். ஆக, அவர்களின் கடைசி முடிவு தற்கொலை தான்.  இது மட்டும் தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது.  தீராத வியாதி, குடும்பப் பிரச்சனைகள்  இவைகளும் தற்கொலைகளைத் தூண்டுகின்றன.

தற்கொலைகள் பற்றி நாம் எப்படி  வேண்டுமானாலும் சொல்லலாம், எழுதலாம் ஆனால் 'இனி முடியாது' என்கிற அழுத்தம் வரும் போது அனைத்தும் கலைந்து போகிறது. இறைவன் தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment