Tuesday 23 July 2024

சிறுவருக்கு இதெல்லாம் விளையாட்டு!

என்ன தான்  செய்வது?  உலகெங்கிலும் பிள்ளைகள் ஒரே மாதிரி தான்.  அவர்களுக்கு எல்லாமே விளையாட்டு, விளையாட்டு, விளையாட்டு!  ஆனால் அதன் பின்னர் ஏற்படுகின்ற பிரச்சனைகளைச் சமாளிப்பது   எவ்வளவு கஷ்டம் என்பது பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.

ஆமாம், இந்தச் செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள்.  14 வயது சிறுவன் ஒருவன்  தனது 2 சகோதரர்களுடன் காரை ஓட்டிக்கொண்ட போனது மிகவும் வைரல் செய்தியாகப் பரவியது  அனைவருக்கும் தெரியும்.

இது மட்டுமா?  சில மாதங்களுக்கு முன்னர் சிறுவன் ஒருவன்  தனது தந்தை ஓட்டும் டிரைலர் லோரியை, வேறு எங்கோ நிறுத்தியிருந்த லோரியை, லோரி நிறுத்தும்  இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியதைச் செய்திகளில் படித்தோம்.  தந்தைக்குத் தெரிந்து தான் அதை அவன் செய்தான்.

நமது பள்ளி மாணவர்களில் பலர் உரிமம் ஏதும் இல்லாமல், பள்ளி போவதற்கு,  மோட்டார் சைக்கில்களைப்  பயன்படுத்துகின்றனர்.  சைக்கில்களையே பயன்படுத்தலாம். ஆனால் என்ன செய்வது? உடம்பில தெம்பு இல்லை. நடக்கவும் முடியாது,  அந்தக் காலத்தில் நானும் என் நண்பர்களும்  சுமார் மூன்று மைல் நடந்து பள்ளிக்கூடம் போனோம்.  இப்போது இதையெல்லாம் சொன்னால் இந்தத் தலைமுறையினருக்கு  'அது உங்கள் தலையெழுத்து'  என்று கேலி செய்வார்கள்!

நான் சொன்னது போல  இப்போது உள்ள பொடுசுகள் அப்பன் என்ன செய்கிறானோ  நாங்களும் அதைச் செய்வோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.  மோட்டார் சைக்கள் ஓட்டுகிறார்கள். கார் ஓட்டுகிறார்கள். புல்டோசர் ஓட்டுகிறார்கள், பெரும் பெரும் மரங்களைத் தள்ளுகிறார்கள் - எங்களாலும் முடியும் என்பதைக் காட்டுகிறார்கள். செய்யுங்கள் ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள்.  அனைத்துக்கும் வயது வரம்பு உண்டு.  ஏன் வயது வரம்பு தேவை?  அந்த வயது வரும்போது தான் பொறுப்புணர்வு வரும் என்பதை  ஆராய்ந்து முடிவு செய்திருக்கிறார்கள். அது நல்லது தான். 

 மலேசியாவில் இது  கடைசியாக இருக்கப் போவதில்லை. அது நடந்து கொண்டு தான் இருக்கும்.  பள்ளி மாணவன் ஒருவன் கூட சமீபத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்து போனான். யார் என்ன செய்ய முடியும்.  விபத்து வராதவரை எல்லாமே சரிதான்.  வந்தால் யார் மீதும் பழி சொல்ல வேண்டாம்.  பெற்றவர்கள் தான் குற்றவாளி.

வழக்கம் போல சிறுவர்களுக்கு இது விளையாட்டு. இங்கு மட்டும் தானா? உலகமெங்கிலும் தான்! அதை நிறுத்த பெற்றவர்களால் தான் முடியும்!

No comments:

Post a Comment