Sunday 7 July 2024

விலை தெரியுமா?

தினசரி  வாழ்க்கையில்  நாம் தினசரி அருந்தும் உண்வுகளில் விலையேற்றம் எந்தத் திசையை நோக்கிப் போகிறது என்பதே நமக்குத் தெரியவில்லை! 

நாம் எப்போதும் போலத்தான் கையில் பணத்தைக் கொண்டு போகிறோம்.  அங்குப் போன பிறகு தான் தெரிகிறது  விலையெல்லாம் எகிறிவிட்டதென்று!  பல சமயங்களில் நாம் ஏமாந்தவர்களாகி விடுகிறோம். 

சமீபத்தில்  ஊடகங்களில் படித்த  ஒரு செய்தி ஞாபகத்திற்கு வருகிறது.  ஒரு கப் தேநீரின் விலை  11.00 வெள்ளி என்பதாக அந்த உணவகத்தினர் பில் கொடுத்திருக்கின்றனர்!  ஆச்சரியந்தான்!  இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை!  இப்போது ஒரு வெள்ளி ஒன்றரை வெள்ளிக் காசுக்கு  எதுவுமே கிடைக்காத நிலை தான் நாட்டில் நிலவுகிறது.

நாம் ஏதோ ஒரு விலையை நினைத்துக் கொண்டு போகிறோம்.  ஆனால் விலையோ நாம் நினைப்பது போல் இல்லை.  கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல்  விலை ஏற்றம் நமக்குத் தெரிகிறது!   சமயங்களில் நாம் குற்றவாளிகள்  போல், கையில் போதுமான காசில்லாமல்,  அவர்கள் முன் உளற வேண்டியுள்ளது.

அதுவும் இந்திய உணவகங்களில் விலையேற்றம் அதிகம் என்று தான் நமக்குத் தோன்றுகிறது.  சாதாரணமாக ஒரு தோசைக்கு வெள்ளி 2.50 காசு  என்றால் வாங்கித்தான் ஆக வேண்டியுள்ளது.  அப்படி வாங்கியும்  மனநிறைவாக இல்லை என்பது தான் மிகவும் வருத்தத்திற்கு உரியது.  வேலை தெரியாதவர்களை வைத்துக் கொண்டு  வேலை வாங்கினால்  அப்படித்தான் தோசை இருக்கும்.  தோசையே போடத் தெரியவில்லை ஆனால் விலை மட்டும்  யானை விலை குதிரை விலை!  என்னடா சோதனை இது என்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது!

உணவகங்கள் என்ன உணவுகளுக்கு  என்ன விலைகள் போடுகிறார்கள் என்பதில் மிகவும் சிக்கலாக இருக்கிறது.  உணவகங்கள் தங்களது விலைப் பட்டியலை கடையின் முன் தெளிவாக எழுதி வைத்தார்களானால்  உள்ளே போகலாமா, வெளியே போகலாமா என்று வாடிக்கையாளர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.  எல்லாம் முடிந்த பிறகு தங்கள்  விருப்பத்திற்கு  விலையைப் போட்டால் 'சிவனே!'  என்று பணத்தைக் கொடுத்துவிட்டுப் போக வேண்டியது தான்!

இப்போது உள்ள நிலையில் விலைகளைத் தெரிந்த பின்னரே உணவகங்களுக்குப் போவது  கொஞ்சம் சிக்கனமாக இருக்கும்!

No comments:

Post a Comment