Sunday 14 July 2024

ஐயா! கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்!

          நன்றி: வணக்கம் மலேசியா

சமீப ஒரு மாத காலத்தில்  பேங் ராக்யாட் வங்கி, BRIEF-1, இந்தியர் கடனுதவித் திட்டத்தின் கீழ்  சுமார் அறுபது இலட்சம் வெள்ளிக்கான விண்ணப்பங்களை  அங்கீகரித்திருப்பதாக  துணையமச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்  அறிவித்திருக்கிறார். 

வாழ்த்துகள்.   இன்றை நிலையில் வணிகம் செய்வதற்குக் கடன் கிடைப்பதில் ஏகப்பட்ட கெடுபிடிகள்  இருப்பது நமக்குத் தெரியும்.  இந்த நிலையில்  நம்மில் ஒரு சிலருக்காவது  கடன் கிடைக்கிறதே என அறியும் போது  மகிழ்ச்சியளிக்கிறது.

பேங் ராக்யாட், BRIEF-1 னின் இந்தக் கடனுதவி இந்திய முஸ்லிம் வர்த்தகர்களுக்குக்  கொடுக்கப்படுகிறது  என்பதாகத்தான்  நாம் எடுத்துக் கொள்கிறோம். காரணம் இந்தக் கடனுதவி எளிமையான ஷரியா  விதிமுறைகளுக்கு ஏற்ப கொடுக்கப்படுகிறது என்றால்  அது நிச்சயமாக  இந்திய முஸ்லிம்கள் தான்  அதன் வாடிக்கையாளர்கள் என்பதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை.  அதனை டத்தோ ரமணன் அவர்கள் மறைக்க வேண்டிய அவசியமுமில்லை.

பொதுவாக எடுத்துக் கொண்டால் இந்திய முஸ்லிம்கள் அதாவது பூமிபுத்ரா அல்லாத  இந்திய முஸ்லிம் வணிகர்களுக்குக் கடனுதவி கிடைப்பதில்  பல தடைகள் இருக்கின்றன.என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.  அதனால் பேங்ராக்யாட்டின் இந்த  கடனுதவி  அவர்களுக்கு  பேருதவியாக இருக்கும் என நம்பலாம்.  இந்த நாட்டின்  வணிகத்தூண்களாக  இருப்பவர்கள் இந்திய முஸ்லிம்கள்.  அவர்களே வங்கிக்கடன்கள் கிடைப்பதில்  அல்லல் படுகின்றனர். 

நாம் சொல்லுவதெல்லாம்  டத்தோ ரமணன் வங்கியின் கடனுதவி பற்றி  தெளிவாகவே சொல்லிவிடலாம்.  இந்தியர்களில்  இந்திய முஸ்லிம்களும் ஒரு பிரிவினர் தான்.  அவர்களுக்குக் கடனுதவி கிடைப்பதில் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  ஒரு விதத்தில் மகிழ்ச்சி தான்.  அவர்களுக்கு, விசேஷமாக அவர்களுக்கென்றே,  வங்கி ஒன்று உதவி செய்ய காத்திருக்கின்றது என்றால்  நமக்கும் மகிழ்ச்சி தான்.

ஆனால் டத்தோ ரமணன் அவர்கள் வங்கியுடனான தொடர் பேச்சுகளை நடத்தி  மற்ற இந்தியர்களுக்கும்  கடன் வாய்ப்புகளைக் கொடுக்க  ஏற்பாடுகளைச் செய்தால்  இந்த சமுதாயாத்திற்கே  பயனானது என்பதில் ஐயமில்லை.

விரைவில் நல்ல அறிவிப்புகள் வரும் என எதிர்பார்ப்போம்!

No comments:

Post a Comment