Tuesday 30 July 2024

மணமா நாற்றமா?

 

டுரியான் பழம் என்றாலே - ஏன் - அந்தப் பெயரைச் சொன்னாலே மயங்காதவர்  யார்?

அதன் மணம் என்று வரும் போது வெவ்வேறு கருத்துகள் எழலாம். மலேசியாவில் பிறந்தவர்களுக்கு, அந்தப் பழங்களுடன் வாழ்பவர்களுக்கு,  அது மணம். வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு அது  நாற்றம்.  கழுதைக்குத்  தெரியுமா கற்பூர வாசனை என்பது தான் நமது கொள்கை!

ஆனால் பிரச்சனை இப்போது அதுவல்ல.  அப்படிப்பட்ட  வாசனைக் கொண்ட டுரியான் பழத்தையும்  மிஞ்சி விட்டனர் ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள்! அது தான் விசேஷம்!  டுரியான் வாசனையே தூக்கி அடிக்கும்!  அதனால் தான் அந்த டுரியான்களில் போதைப்பொருள்  கலந்திருப்பதை எப்படிக்  கண்டு பிடித்தார்கள் என்று அதிசயக்க வேண்டியுள்ளது!  மோப்ப நாய்களை வைத்துக் கண்டு பிடித்திருக்கலாம். நாய்களுக்குப்  போதைப்பொருளைத் தவிர டுரியான் வாசனையை அறியாது.  அதனுடைய மோப்பம் என்பது போதைப்பொருள் மட்டும் தான். அதுவும் சாத்தியம் உண்டு.

கடத்திக் கொண்டு போன  அந்த மலேசியர்கள் தப்பியிருந்தால் 58 இலட்சம்  டாலர் இலாபம். அகப்பட்டதால் தண்டனையோ  ஆயுள் தண்டனையும் 50 இலட்சம் டாலர் அபராதமும்.  அது அவர்களுக்குப் போதுமா என்றால் போதாது தான்.  ஆனால் சிறையில் அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும்  சேர்த்துத்தான் பார்க்க வேண்டும். 

டுரியான் பழம் என்றாலே பழங்களின் அரசன் என்பார்கள்.  அந்த அரசனுக்கு இப்படி ஒரு நிலைமையா  என்பது தான் சோகம். போதைப்பொருள்  கடத்தலை யாரும் தற்காத்துப் பேச முடியாது.  மனித குலத்திற்கே அது சாபம்.  ஆனால் ஒரு சிலருக்கு அது இலட்சக கணக்கில் பணம் புரளும் மிகப்பெரிய வியாபாரம்!  அகப்பட்டால் அத்தோடு முடிந்தது அவர்கள் செய்யும் மனித விரோத செயல்கள்!

ஒன்று மட்டும் நமக்குப் புரியாத புதிர். போதைப்பொருளும் டுரியான் வாசமும்  ஒன்றுக்கொன்று ஏதேனும் ஒட்டுதல் உண்டோ?

No comments:

Post a Comment