Wednesday 17 July 2024

ஒரு முடிவு தேவை!


நமது இந்திய மாணவர்களின் மெட் ரிகுலேஷன் கல்வி சம்பந்தமாக எந்த ஒரு சத்தத்தையும் காணோம். அப்படியென்றால் நமது தலைவர்கள் சாதித்துவிட்டார்களா?  இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். பொது மக்களைப் பொறுத்தவரை  எந்த ஒரு பதிலும் தெரியாமல் வழக்கம் போல இருட்டில் நின்று கொண்டிருக்கிறார்கள்!

பல ஆண்டுகளாக நாம் விடுக்கும் கோரிக்கை நமது மாணவர்களுக்கு 2500 இடங்களை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  மற்ற இன  மாணவர்களுக்கு  எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது பற்றி எந்த விவாதமும் தேவையில்லை.  நம்முடைய தேவையைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம்.  நல்ல ஒரு கல்வியைக் கொடுப்பதில் கூட நாம்  பலவகைகளில் புறக்கணிக்கப்படுகிறோம்.

இத்தனைக்கும் நாம் கல்வியில் சலுகைகளைக் கேட்கவில்லை.  நாங்கள் படிக்க முடியாதவர்கள், கல்வி எங்கள் மண்டைக்குள் ஏறவில்லை  என்று பிச்சை எடுக்கவில்லை.  கேட்பது 2500 இடங்கள்.  அதைக் கொடுப்பதற்கு  நாங்கள் அரசாங்கத்திடம் கை நீட்டுகிறோம், பலமுறை கேட்டுவிட்டோம்.  இனிமேலும் கேட்பதற்கு ஒன்றுமில்லை.

அதனால் இப்போது நம் முன்னே நிற்பது    ஒன்றே ஒன்று தான். நமது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்கள்  அனைவரும் ஒன்றுசேர்ந்து  பிரதமரைச் சந்திக்க வேண்டும்.  இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.  இந்தப் பிரச்சனையை வைத்தே அரசியல் பேசிக் கொண்டிருப்பது  மிக மிகக் கேவலமான ஒரு செயல்.  நமக்கு வேறு பிரச்சனைகளே இல்லையா?

இந்திய சமுதாயத்தை ஒரு போராட்ட சமுதாயமாகவே அரசாங்கம் மாற்றிக் கொண்டிருக்கிறது  என்பது தெரிகிறது.  எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் தானா?    ஒரு சிறு பிரச்சனையைக்  கூட அரசாங்கத்தால் தீர்த்த வைக்க முடியாத சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.   நம் சமுதாய பிரதிநிதிகளோ  சரியான மக்குகள். அவர்களால் எந்தக் காலத்திலும்  எந்தப் பிரச்சனையையும் தீர்த்து வைக்க முடிந்ததில்லை. அந்தக் காலந்தொட்டு  இந்தக் காலம்வரை அதே கதை தான்.  வாய்ச்சொல் வீரர்கள்!

இந்த ஆண்டு இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டியது அவசியம்.  மீண்டும் மீண்டும் இழுத்துக் கொண்டே போனால் அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிப்போம்.   

என்ன தான் முடிவு? பார்ப்போம்!

No comments:

Post a Comment