Tuesday 2 July 2024

தாமதம் ஏன்?

           பினாங்கு, செபராங் பிறை - சுங்கை பாக்காப்  தமிழ்ப்பள்ளி

நாட்டில் பொருளாதார சூழல் எப்படியும் இருக்கலாம்.  பல திட்டங்கள் நிறுத்தப்படலாம் அல்லது தாமதிக்கப்படலாம்.  வேறு வழியில்லை!  பலவேறு வழிகளில் சிக்கனம் கடைப்பிடிக்க  வேண்டிய நிலை.  

அது நமது அரசாங்கத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.  தேவையற்ற திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன.  நேரம் வரும் போது அவை மீண்டும் நிலைநிறுத்தப்படும்.

ஆனால் என்ன தான் திட்டங்கள் நிறுத்தப்பட்டாலும்  ஒரு சில திட்டங்கள் எப்பாடு பட்டாயினும் நிறவேற்றப்பட வேண்டிய சூழல் உண்டு. அவைகள் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும்.  அதிலே கல்வியும் ஒன்று.  கல்வி என்று வரும் போது  பிரச்சனைகளை உடனடியாகக் கவனித்து அதற்குத் தீர்வு  காண  வேண்டும்.

நீண்ட காலத்திற்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளிகள் பல இப்போது ஏதோ ஒரு வகையில்  பிரச்சனகளோடு போராடிக் கொண்டிருக்கின்றன.  மாணவர்கள் அதிகரிக்கும் போது பள்ளிகள் விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும்.  இன்னும் சில பள்ளிகள்  ஆண்டுகள் பல கடந்ததினால் இன்றைய நிலைக்கு ஏற்ப  கட்டடங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.  இடம் பற்றாக்குறையினால்  புதிய பள்ளி கட்ட வேண்டிய சூழலில்  சில பள்ளிகள் இருக்கும்.  இன்னும் பல பள்ளிகளில் நூல்நிலையம், கணினி அறைகள்  போன்ற முக்கியமான அறைகள் தேவைப்படும்.   நம் பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் செய்ய வேண்டிய கட்டாயம் கல்வி அமைச்சுக்கு உண்டு.

இந்த சூழலில் தான் மேலே இருக்கும்  சுங்கை பாக்காப்  தமிழ் பள்ளியும் தள்ளப்பட்டிருக்கிறது.  மாணவர்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றனர்.   இப்போது இருக்கும் பள்ளியில் இடம் பற்றாக்குறை நிலவுகிறது.   புதிய பள்ளிக்கான  அனுமதியும் கிடைத்தாயிற்று. அதற்கான  மானியம்  கிடைத்தாலும்  விலைவாசி ஏற்றத்தினால்  மானியம் போதாது என்று சொல்லி  பள்ளியின் கட்டட வேலைகள் நடைபெறவில்லை.  இப்போது அதன் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்தத் திட்டம் கிடப்பில்  போடப்பட்டிருக்கிறது என்கிற நிலை.

கல்வி அமைச்சு பள்ளிகள் விஷயத்தில் எந்த சுணக்கமும் காட்டக் கூடாது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  எதனையும் தள்ளிப் போடக்கூடாது.   அதுவும் கல்வி என்று வரும் போது அதனை இழுத்தடிப்போதோ, தள்ளிப்போடுவதோ சிக்கலை உருவாக்கும்.

எது எப்படி இருந்தாலும்  தாமதம் வேண்டாம் என்பதைக் கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

No comments:

Post a Comment