Tuesday 9 July 2024

சட்டம் வருகிறது! கப்! சிப்!

                                    இலக்கவியல் அமைச்சர், கோபிந் சிங் டியோ

இணைய பகடிவதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்  வந்துவிட்டதாகவே கருதலாம்.

சமூக வலைதளத்தை  தவறாகப் பயன்படுத்துவோருக்கு  எதிரான சட்டதிட்டங்கள் வெகுவிரைவில் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

வரவேற்கிறோம்.  ஒரு சிலர் டிக்டாக்கில் பேசுவதைக் கேட்கும் போது  நமக்குக் கேட்கவே காது கூசுகிறது. அது எப்படி இவர்களால் இப்படியெல்லாம்  பேச முடிகிறது என்கின்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.  

நம்மில் பலர் வீட்டில்  பேசுவதையே பொது வெளியில் பேசுகிறோம்.  நல்ல சொற்களைப் பேசுவதால் யாரும் குறைசொல்ல இடமில்லை.  ஆனால் ஆபாச வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றன?  அதுவும் நமது வீடுகளிலிலிருந்து தான் வருகின்றன. ஒரு பெண்ணோ ஆணோ இப்படித் தாராளமாக  ஆபாச வார்த்தைகளைப் பொது வெளியில் கொட்டுகிறார்கள் என்றால்  நாம் பெற்றோர்களைத்தான் குறை சொல்ல வேண்டியுள்ளது.  தவறு தான்.  ஆனால் முன்னுதாரணம் பெற்றோர்கள். குறை சொல்லத்தான் வேண்டியுள்ளது.

பொதுத்தளங்களில்  பேசுபவர்கள், எழுதுபவர்கள்  கொஞ்சம் யோசிக்க வேண்டும். நாம் பேசுவதை, எழுதுவதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், கேட்கலாம்.  அவர்கள் குழந்தைகளாக இருக்கலாம். இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதால்  அது எல்லா இடங்களிலும் போய்ச் சேர்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் ஒரு சில நபர்களின் வால்களை நிமிர்த்த முடியாது!  என்ன தான் சொன்னாலும் காதில் ஏற்றிக்கொள்ள மாட்டார்கள்!  வெளியே அடிதடியில் இறங்குவதைவிட டிக்டொக்கில் சண்டை போடுவது தமாஷமாக இருக்கும் என நம்புகின்றனர். தமாஷ் தான்.  ஆனால் பயன்படுத்தும் வார்த்தைகள்? என்ன சொல்வது?

எப்படியோ  இத்தனை ஆண்டுகள் பொறுமையோடு இருந்த அரசாங்கம் இப்போது  பொங்கி  எழுந்திருக்கிறது!  உங்களுக்குத் தமாஷ் வேண்டுமானால், சண்டை வேண்டுமானால் வீட்டுக்குள்ளேயே போட்டுக் கொள்ளுங்கள்.  பொது வெளியில் வேண்டாம்.

இனி 'சைபர்புல்லியிங்'  என்பது வேண்டாத விஷயமாகி விட்டது.  இங்கும் இந்தியர்கள் தான் பாதிக்கப்படுகிறோம்.  இனி வரப்போகும் சட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  அப்போதும் பாதிக்கப்படுவது உங்கள் பெற்றோர்கள், உறவுகள் தான். 

இனி மேலாவது கப்!சிப்!  என்பது தான் நமது அறிவுரை!

No comments:

Post a Comment