ஏன் இந்தத் தடுமாற்றம் என்பது நமக்குப் புரியவில்லை. யாருக்கு என்றால் நமது கல்வி அமைச்சுக்கு இந்த அளவுக்குத் தடுமாற்றம் தேவையில்லை.
ஆங்கில மொழி என்பது நம் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக ஒரு காலத்தில் இருந்தது. பின்னர் மலாய், நமது தேசிய மொழியானது. அதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் எழவில்லை.
ஆனால் ஆங்கிலத்தை ஓரேடியாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சில அரசியல்வாதிகள் செய்த சதியால் ஆங்கிலம் தேவையில்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. அதன் பின்னர் ஆங்கிலம் தேவையற்ற மொழி என்று அரசியல்வாதிகள் கொடிபிடித்தனர். எப்படியோ ஆங்கிலம் நமது நாட்டில் தனது வீரியத்தை இழந்தது.
ஆங்கிலத்தின் இப்போதைய நிலை மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையாகிவிட்டது. பிழைக்க வந்த வங்காளதேசிகள் நம்மைவிட மிகச் சிறப்பாகவே ஆங்கிலம் பேசுகின்றனர்! வங்காளதேசம் பின் தங்கிய நாடு என்று சொன்னாலும் ஆங்கிலத்தை அவர்கள் ஒதுக்கவில்லை. அவர்களின் வர்த்தகம் வளர்ச்சி பெறுவதற்கு ஆங்கிலம் அவர்களுக்கு அவசியம் என்று அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.
நம் நாட்டின் அரசியல்வாதிகள் பலருக்கு வெளிநாட்டினர் உதவிகள் இல்லாமலேயே அனைத்தும் நமக்குக் கிடைத்துவிடும் என்று நினைக்கின்றனர். நமது தேசிய மொழியை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் வெளிநாட்டினருடனான நமது தொடர்புக்கு ஆங்கிலம் நமக்குத் தேவை. உலகமே ஆங்கிலத்துடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனை ஒதுக்கியதால் நாம் இப்போது ஒதுக்கப்பட்டிருக்கிறோம்!
இப்போது தான் ஒரு சில மாநிலங்கள் ஆங்கிலம் எங்களுக்குத் தேவை என்பதாகப் பேச ஆரம்பித்திருக்கின்றன. அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்தில் அல்ல. குறிப்பாக கணக்கு, விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு ஆங்கிலம் தேவை. இவைகளை தேசிய மொழியில் படித்து ஆகப்போவது ஒன்றுமில்லை.
சரவாக், சபா, ஜொகூர் போன்ற மாநிலங்கள் ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கின்றன. வெகு விரைவில் அதனை நடைமுறைக்குக் கொண்டுவரும் என நம்பலாம். கல்வி அமைச்சு தடுமாற வேண்டிய அவசியமில்லை. நாட்டின் எதிர்காலத்திற்கு இந்த மாற்றம் அவசியம் தேவை.
No comments:
Post a Comment