Wednesday 3 July 2024

பெருஞ்சுமை தான்,என்ன செய்ய?

 

கல்வி கற்ற சமுதாயத்திற்கு,  செல்கின்ற இடமெல்லாம் சிறப்பு.  அதிலே எந்த கருத்து வேறுபாடும் இருக்க வாய்ப்பில்லை.  அதனால் தான் தமிழன் எங்கு சென்றாலும் தலைநிமிர்ந்து நடக்கிறான்.

ஆனால்,  ஏழை சமுதாயம்,  பி40 மக்களின்  முன்னுதாரணம்,  என்கிற நிலையில் நாம்  இங்கு இருந்தாலும் கல்வியில் திட்டமிட்டே நாம் புறந்தள்ளப்பட்டாலும்  கல்வியில் இன்றும் எள்ளவிலும் சோடை போனதில்லை.  குறைபாடுகள் இருக்கலாம் ஆனால் அந்த குறைபாடுகள் பின்கதவு வழியாக நமக்கு வந்தவை!

சமீபத்தில் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ஓர் அறிக்கையில் நமது மலேசிய பல்கலைக்கழகங்களின்  கல்விபயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை  வெளியிட்டிருந்தார்.  அதில் சுமார் 20,000 மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழகங்களில் பயில்வதாகவும், சுமார் 40,000 மாணவர்கள் தனியார்  பல்கலையில் பயில்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  அது கல்வி அமைச்சர் மூலமாக  வந்த அறிக்கை.

இதிலே மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் ஏழ்மையில் உழலும் பி40 மக்களான நாம் எந்த அளவுக்குப் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது தனியார் பல்கலையில் பயிலும் நமது மாணவர்களின் எண்ணிக்கையை வைத்தே கணித்துவிடலாம்.

ஆமாம் இந்த ஏழை சமுதாயம் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக எந்த அளவுக்குச்  செலவு செய்கிறார்கள் என்பதை அறியும் போது நாம் விழிப்படைந்த சமுதாயம் தான்  என்பதில் ஐயமில்லை. கல்வியை நாம்,  நம் முதலீடாகப் பார்க்கிறோம்.  அது எந்தக் காலத்திலும் நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதில்லை. 

பிள்ளைகளின் கல்விக்காக நமது சொத்துகளை விற்கிறோம். நமது சம்பாத்தியத்திலும் பாதி அங்கே போய்விடுகிறது.  அதே போல பல நிறுவனங்களும் கடன் உதவிகளைச் செய்கின்றன.  அதன் பலன் நமது மாணவர்கள் பட்டம் பெற்று வெளியாகும் போது கடன்காரர்களாகவே வெளியாகின்றனர்!  இருப்பினும் வேறு வழியில்லை. அதனால் தான் முடிந்தவரை அரசாங்க பலகலைக்கழகங்களை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்கிறோம்.

எப்படியோ இன்றைய நிலையில் தனியார் பல்கலைக்கழகங்களே நமது மாணவர்களுக்குக் கை கொடுக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  பொருளாதார ரீதியில் அது பெருஞ்சுமை தான், என்ன செய்ய?

No comments:

Post a Comment