மெட்ரிகுலேஷன் நுழைவு இந்த ஆண்டும் நம் இந்திய மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தான் கொண்டு வந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
அதுவும் இந்த ஆண்டு பிரதமர் அன்வார் பெருமனதோடு 10ஏ எடுத்த மாணவர்களுக்கு நிச்சயம் இடம் உண்டு என்று அறிவித்த பின்னரும் நம் மாணவர்களின் எண்ணிக்கை பெரும் ஏமாற்றதைத்தான் கொண்டுவந்திருக்கிறது. அந்த 10ஏ எந்த வகையிலும் இந்திய மாணவர்களுக்கு உதவவில்லை என்பது தெளிவு.
எப்படியோ நம் மாணவர்கள் பூமிபுத்ரா மாணவர்களோடு போட்டி இட வழியில்லை. கல்வியில் அவர்களை நம்மால் மிஞ்ச முடியாது. அவர்களில் 10ஏ எடுத்த மாணவர்கள் நமது இடத்தையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டார்கள்! இது என்ன கணக்கோ தெரியவில்லை.
மெட் ரிகுலேஷனில் 90 விழுக்காடு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. பின்னரும் 10 விழுக்காடு அவர்களுக்கு, பூமிபுத்ராக்களுக்கு, பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் கோட்டாவிலிருந்து பிடுங்கப்பட்டிருக்கிறது. அதாவது இவர்கள் 10ஏ பெற்றவர்களாம்! அதனால் வந்த வினை!
எப்படியோ பிரதமரும், கல்வி அமைச்சரும் இந்திய மாணவர்களுக்கு மெட் ரிகுலேஷன் கல்வியில் எந்த மாற்றமும் செய்யாமல் ஏற்கனவே உள்ளதை விட இருப்பதையும் குறைத்திருக்கின்றனர்! ஆக, பிரதமர் இனி நமக்கு மெட் ரிகுலேஷன் கல்வியில் நியாயம் செய்வார் என்பதற்கு எந்த முகாந்திரமுமில்லை.
இந்தப் பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்கின்ற ஒரு பிரச்சனை . அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத ஒரு சூழல் ஏபட்டுவிட்டது. இனிமேலும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கிற நம்பிக்கையும் இல்லை. யார் யாரோ குரல் கொடுத்தும் அது எடுபடவில்லை.
இனி என்ன செய்யலாம்? கல்வியாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இனி அடுத்த கட்டம் எஸ்.டி.பி.எம். தான் என்றால் அதில் தான் கவனம் செலுத்த வேண்டும். அல்லது பணம் கட்டி தான் படிக்க வேண்டும் என்றால் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் எந்த சூழலிலும் கல்வியை மட்டும் இடையில் நிறுத்திவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
மெட்ரிகுலேஷன் கல்வி உண்டோ இல்லையோ கல்வி தான் நமது மூலதனம் என நம்புவோம்.
No comments:
Post a Comment