Friday 26 July 2024

மலைவாழை அல்லவோ கல்வி?

 

 படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு!  கண்ணதாசன்

நண்பர் ஒருவர் சொன்ன  செய்தியைக் கேட்ட போது  மனதிற்கு மிகவும் வருத்தம் அளித்தது.  மகளுக்குத் தனது கல்வியைத் தொடர ஆசை.  தாய் அதற்குத் தடையாக இருக்கிறார்! இதக் காலத்திலும் இப்படி ஒரு தாயா என்று  நினைத்தாலும் அவரது  பாரம் என்னவோ நமக்குத் தெரியாது. அதனால்  எதுவும் சொல்ல முடியவில்லை.

"மலைவாழை அல்லவோ கல்வி?  அதனை வாயார உண்ணுவாய் /போ!' என் புதல்வி" பாவேந்தர் பாரதிதாசன்

எந்த ஒரு தாயும் தனது மகள் கல்வி கற்கக் கூடாது என்று நினைக்கமாட்டாள்.  அந்த அளவுக்குக் கல்வியின் முக்கியத்துவம் இன்றைய தாயார்கள் அறிந்துதான் இருக்கிறார்கள்  

 ஆனாலும் சிலர்......?ஒரு முறை நானே ஒரு தாய் பேசியதைக் கேட்டிருக்கிறேன்.  கணவர் இறந்து போனார். மனைவி வேலை செய்கிறார்.  வருமானம் போதாது காரணமாக  மகளைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார்.   எஸ்.பி.எம்.  தேர்வு எழுத அது கடைசி ஆண்டு.   அடுத்த ஆண்டு தேர்வு எழுதலாம் என்று சொல்லி பள்ளியினின்று நிறுத்தி விட்டார்.  அடுத்த ஆண்டு வந்தபோது மகள் கவனம் சிதறிப்போனது.  சில்லுவண்டுகள் எல்லாம் மகளைச் சுற்றிக் கொண்டன.  கல்விக்கு  அரோகரா!

அதனால் தான் பள்ளி விடுமுறையின் போது கூட, தற்காலிகமாகக் கூட, மாணவர்களை வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்லுகிறார்கள் கல்வியாளர்கள். காரணம் கல்வி மேல் உள்ள கவனம் சிதறிப் போகும் என்பது தான் அவர்களின் வாதம். அது உண்மை தான்.  ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. எங்களிடம் வேலை செய்த மாணவன் இரண்டு ஆண்டுகள் வேலை செய்து பணத்தை சேமித்துக் கொண்டு மீண்டும் படிக்கப் போய்விட்டான்.  பட்டதாரி ஆகவேண்டும் என்கிற எண்ணம் வலுவாக இருந்தால் அவர்களை யாரும் அசைக்க முடியாது என்பது தான் உண்மை.

எனக்குத் தெரிந்து பல தாய்மார்கள் என்னதான் கஷ்டம் என்றாலும்  பிள்ளைகளின் கல்வியில் அவர்கள் கைவைப்பதில்லை.  படிக்கட்டும் என்று தான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அரைகுறையாகப் படித்தவர்கள் அரைகுறைச் சம்பளம் வாங்கிக்கொண்டு  தான் பிழைப்பை நடத்த வேண்டும். தொழிற்சாலைகள் தான் உங்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும்.  எதிர்காலம் என்பதாக ஒன்றுமில்லை.

மலைவாழை அல்லவோ கல்வி! அதனை வாயார உண்ணுவாய் என் தமிழ்ச்செல்வி!

No comments:

Post a Comment