Thursday 11 July 2024

வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!



 

3நம்மிடையே  நடைமுறையில் உள்ள  சாதாரண பழமொழியாக  இருந்தாலும் மிகவும் சக்திவாய்ந்த - ஈடு இணையில்லாத  பழமொழி: "கற்றவர்க்குச் சென்ற  இடமெல்லாம் சிறப்பு" என்பது தான்.

அதை விடுவோம்.  இப்போது  அந்த 'சிறப்புக்காக'  யாரும் படிப்பதில்லை. படிப்பு முடிந்ததும் கௌரவமான வேலை. நல்ல சம்பளம் - இது தான்  நீண்ட நாள்களாக உள்ள  நடைமுறை.  அதுவும் நல்ல படிப்பு நல்ல சம்பளம் - மிக எளிமையாக சொல்லப்பட்டு விட்டது!

சரி இப்படி எளிமையாக சொல்லப்பட்டு விட்ட ஒரு விஷயத்தை நமது பெற்றோர்கள் ஏன்  இன்னும் கடினப்படுத்திக் கொள்கிறார்கள்?  தங்கள் பிள்ளைகள்  தாங்கள் இருக்கும் இடத்தில் அருகிலேயே உயர்கல்வி பெற வேண்டும் என்று நினைப்பதே  தவறு என்று அவர்களுக்குத் தெரியாதா? உயர்கல்விக் கூடங்கள் நம் வீட்டுப்பக்கத்திலா இருக்கின்றன?

வீட்டு அருகே என்கிற அந்தக் கொள்கையே தவறு.  வெளி ஊர்களில் தான் பல கல்லூரிகள் அமைந்திருக்கின்றன.  அங்கே போய் படிப்பது தான் முறை.  கல்லூரிகளில் படிப்பதற்கே இடம் கிடைக்காத நிலையில் "எங்களால் போக முடியாது! பக்கத்திலேயே வேண்டும்"  என்றால்  யார் என்ன செய்ய முடியும்?  பெற்றோர்கள் இப்படியெல்லாம்  நினைப்பதே தவறு.

வெளியூர்களில் போய் படிப்பதால் பல நன்மைகள் உண்டு.  பிள்ளைகள்  புதிய புதிய அனுபவங்களைப் பெறுவார்கள். துணிவோடு செயல்படக்கூடிய ஆற்றல் வளரும்.  கிணற்றுத் தவளைகளாக  அவர்களை வளர்ப்பதால் பின்நாட்களில்  அனுபவமின்மையால் சிரமப்படப் போவதும் உங்கள் பிள்ளைகள் தான்.  

எத்தனையோ பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பெற்றோரைப் பிரிந்து  வெளியூர்களில் போய் தங்களது கல்வியைக் கற்கின்றனர்.  எதற்காக?   தங்களது வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான். அதனை  முடக்கி விடாதீர்கள் என்பது தான் நம் பெற்றோர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள்.  வெளியூர் அனுபவம் என்பதும் கற்றலில் ஒரு பகுதி என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

ஒன்றை மட்டும் வலுவாக மனதில் இறுத்திக் கொள்ளுங்கள்.  உயர்கல்வி இல்லாமல் உங்கள் பிள்ளைகள்  உச்சியை அடைய முடியாது. பிள்ளைகள் எங்கும் வெளியே போகாமல், படிக்காமல் நம் அருகிலையே இருந்து படித்தால் போதும் என்ற மனநிலை இந்தக் காலத்திற்கு ஏற்றதல்ல என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.  பெற்றோர்களே! பிள்ளைகளின் எதிர்காலத்தைப்  பாழடித்து விடாதீர்கள்.

கல்வியை முடித்து அதன்பின்னர் அவர்கள் நாற்பது ஐம்பது ஆண்டுகள் வாழ வேண்டியவர்கள்.  அப்போது அவர்களைக் கவலைப்படும்படியாகச் செய்து விடாதீர்கள். சிறப்பாக வாழ இப்போதே அவர்களைத் தயார் செய்யுங்கள்.

No comments:

Post a Comment