Saturday 13 July 2024

நமக்கும் பொறுப்பு உண்டு!

 
    



குழாயடி சண்டையை நாம் பார்த்ததில்லை.  அதற்கான வாய்ப்பு நமக்கு இல்லை.

ஆனால் அதற்குப் பதிலாகத்தான் நம்மிடையே  டிக்டாக், யூடியூப் போன்றவைகளில் சண்டைகள் நிறையவே  நடக்கின்றன.  'பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த மாதிரி' என்று சொல்லுவார்களே அது தான் இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கிறது.  

சண்டைகள் போடுவதற்கு இப்படியெல்லாம் தளங்கள் இருக்கின்றன  என்கிற செய்தி இப்போது பலருக்கும் தெரிந்துவிட்டது.  வெளியே சண்டை போட்டால் உதை கிடைக்கும் என்று பயப்படுவர்கள் இங்கே வந்து சேர்ந்து கொண்டனர்!   இங்கே முகம் தெரியாது, முகவரி தெரியாது, ஏதோ ஒரு பெயரைப் பயன்படுத்தி  யாரையாவது வம்புக்கு இழுக்கலாம்.  மிரட்டினால் ஒதுங்கிவிடலாம். அப்படி ஒரு வசதி இங்கே உண்டு. அதனால் தான்  ரௌடிகள் கூட்டம் இங்கே வந்து சேர்ந்து கொள்கின்றனர். இதிலே படித்தவனும் உண்டு படிக்காதவனும் உண்டு. என்னவெல்லாம் பேசமுடியுமோ அதனையெல்லாம் பேசி தங்களைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்கின்றனர்!  ஆபத்து என்றால் ஒளிந்து கொள்கின்றனர்.

நாம் சொல்லவருவதெல்லாம் எதைச் செய்தாலும் கொஞ்சம் பொறுப்போடு  செய்யுங்கள் என்பது தான்.   நீங்கள் செய்கின்ற பொறுப்பற்றத்தனம் இந்த சமுதாயத்தைப் பாதிக்கும்  என்பதை  மறக்க வேண்டாம். நீங்கள் செய்தால் உங்கள் பிள்ளைகளும் தொடர்வார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒரு சிலர்  பயன்படுத்தும் சொற்கள்  நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவர்கள் வீட்டில் பெண் பிள்ளைகளே இல்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது. அம்மா, மனைவி, குழந்தைகள் இப்படி யாருமே  இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.  அட! அப்பன் என்னவோ சொல்லிக் கொடுத்தான் அதை நீங்கள் தொடர வேண்டுமா? நமக்குத் தான் வெட்கமாக இருக்கிறது.   அந்த தறுதலைகளுக்கு எதுவுமே இல்லை. முற்றும் துறந்தவர்களாக இருக்கிறார்கள்.

தம்பிகளா!  கொஞ்சம் யோசியுங்கள். அனைத்துவகை ஊடகங்களும்  குழந்தைகளின் கைகளில்  இன்று தவழ்கின்றன.  உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் அதனைப் பார்க்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். உங்களின் சண்டைகளை வீட்டுக்கள்  வைத்துக் கொள்ளுங்கள்.  பொதுவெளிக்குக் கொண்டு வராதீர்கள். ஏதோ ஒரு சில பெண்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆன்லைனில் வியாபாரங்கள்  செய்கின்றனர். அவர்களைத்  தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாம். அவர்கள் பிழைப்பைக் கெடுக்க வேண்டாம்.

இந்நாட்டு இந்தியர்களின் வளர்ச்சிக்கு நம் ஒவ்வொருவரின் பங்கு உண்டு. அதனை உணர்ந்து  செயல்பட வேண்டுகிறேன். வெற்றியோ, தோல்வியோ  நம்  அனைவருக்கும் அதில் பங்கு உண்டு.

No comments:

Post a Comment